தூதுவர் தீட்சித்தின் ஆணவமும், தலைவர் பிரபாகரனின் ஆத்திரமும்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-24) – நிராஜ் டேவிட்


திலீபன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து நான்கு நாள் கடந்தவிட்டுள்ள நிலையில், நிலமை தமது கைகளைவிட்டு வெகு தூரம் சென்றுகொண்டிருப்பதை இந்தியப்படை அதிகாரிகள் உணர ஆரம்பித்தார்கள்.
டில்லியிலும், கொழும்பிலும் இருந்தபடி அரசியல் ரீதியாகக் காய்களை நகர்த்திக்கொண்டிருந்த இந்திய இராஜதந்திரிகளுக்கு புரியாத பல விடயங்கள், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு புரிய ஆரம்பித்தன.
ஷஷயாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் இந்தியப்படைகளை மிகவும் வெறுக்க ஆரம்பித்துள்ளார்கள்ளூ எந்த நிமிடத்திலும் இந்தியப் படைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வரக்கூடிய மனநிலை மக்கள் மத்தியில் உருவாகி வருகின்றது: திலீபனின் உண்ணாவிரதம் மேலும் தொடர்ந்து, இந்திய அரசும் தொடர்ந்தும் பாராமுகமாவே இருந்தால், நிலமையை இந்தியப் படைகளால் கட்டுப்படுத்த முடியாது போய்விடும்’ என்று அந்த அதிகாரிகளுக்கு நன்றாகவே புரிந்தது.
தமிழர் பிரச்சனையும், புலிகள் மீதான தமது கட்டுப்பாடுகளும், தமது கைகளை விட்டு முற்றாகவே சென்றுகொண்டிருக்கின்றது என்று இந்தியப்படை உயரதிகாரிகள் அச்சம் கொள்ளத் தலைப்பட்டார்கள்.
இவர்களது அச்சத்திற்கு மேலும் வலுச்சேர்ப்பது போன்று, வேறு சில சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற ஆரம்பித்தன.

பொலிஸ் நிலையத் தாக்குதல்:
18.09.1987 அன்று பெரும்திரளான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று வடமாராட்சியில் நடைபெற்றது.
திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றுகொண்டிருந்தார்கள்.
இந்த ஊர்வலம் பருத்தித்துறை பொலிஸ் நிலயத்தை நெருங்கியதும், ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் திடீரென்று பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த தளபாடங்களையும், பொலிஸ் நிலைய கட்டிடங்களையும் தாக்கி உடைக்க ஆரம்பித்தார்கள். எதிர்த்த பொலிஸாரும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
பொலிஸ் வீரர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஏனெனில் அவர்கள் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இத்தனை காலமாக தங்களது நிழலைக் கண்டால் கூட பயந்து அடங்கி ஒதுங்கும் இந்த அப்பாவி மக்களுக்கு, அப்படி ஒரு ஆவேசம் வரும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொலிஸாரை உடனடியாகவே பொலிஸ் நிலயத்தை விட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவிற்கு பணிவதைத் தவிர பொலிஸாருக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. தமது உடமைகளை தலையில் சுமந்தபடி பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் போதே, பொலிஸ் நிலையம் தீவைக்கப்பட்டது.
தமது உடமைகளை தலைகளில் சுமந்தவண்ணம் பொலிஸ் வீரர்கள் பருத்தித்துறை ஸ்ரீலங்கா இராணுவ முகாமை நோக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் நிலமையின் தீவிரத்தை இந்தியப் படைகளுக்கு உணர்த்துவதாக இருந்தது. இந்தியப் படை முகாம்களுக்கும் இப்படி ஒரு நிலமை ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை, பருத்தித்துறை பொலிஸ் நிலையச் சம்பவம் எடுத்தியம்பியது.

இந்தியாவின் அணுகுமுறை:
அதுவரை திலீபனின் உண்ணாவிரதம் பற்றி ஒருவித பாராமுகப் போக்கைக் கடைப்பிடித்துவந்த இந்தியப்படை அதிகாரிகள், திலீபனின் உண்ணாவிரதம் பற்றி முதன் முறையாக அக்கறைப்பட ஆரம்பித்தார்கள். யாழ் கோட்டை இந்தியப்படை முகாமின் பொறுப்பாளராக இருந்த, இந்தியப்படை உயரதிகாரி ஷபரார்| என்பவர், 20ம் திகதி, திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்து நிலமையை அவதானித்துச் சென்றார். திலீபனின் கோரிக்கைகள் பற்றியும், நிலமையின் தீவிரம் பற்றியும் தாம் தமது மேலதிகாரிகளுக்கு அறிவித்திருப்பதாகவும், யோகியிடம் தெரிவித்துவிட்டு சென்றார்.

21.09.1987 அன்று, இந்தியப் படை உயரதிகாரிகள் சிலருக்கும், புலிகளின் தலைவர்களுக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியப்படை சார்பில் மேஜர் ஜெனரல் ஹரிகிரத் சிங், பிரிகேடியர் ராகவன், எயார் கொமாண்டர் ஜெயக்குமார், உட்பட வேறு சில அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.
விடுதலைப் புலிகள் தரப்பில் அன்டன் பாலசிங்கம், மாத்தையா, யோகி போன்றோர் கலந்துகொண்டார்கள்.
தமது ஐந்து அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் திலீபன் மிகவும் உறுதியாக இருப்பதாக புலிகளின் பிரதிநிதிகள் இந்தியப்படை அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள். திலீபனின் உண்ணா விரதத்தை கைவிடும்படி கூறும்படியும், கோரிக்கைகள் பற்றிய சாதகமான பதிலை இந்திய அரசுடன் கலந்தாலோசித்து தாம் நிறைவேற்றிவைப்பதாகவும், இந்தியப்படை உயரதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள்.
முடிவு எதனையும் காணாது அந்தப் பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றது. முடிவுகள் எதனையும் எடுக்கக்ககூடிய அதிகாரம் உடைய எவரும் அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலிகளின் கோரிக்கைகளுக்கு இந்தியா பணிந்து போகக் கூடாது என்ற இந்தியத் தூதுவர் தீட்ஷித்தின் பிடிவாதமே, இந்தப் பிரச்சனையில் சுமுகமான முடிவு எதுவும் ஏற்பட்டுவிடாததற்கு பிரதான காரணம்.

மரணத்தை நோக்கி திலீபன்
இதற்கிடையில் திலீபனின் உடல் நிலை மேலும் மோசமடைந்து கொண்டேசென்றது. உண்ணாவிரத மேடையில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்திருந்தபடி திலீபனின் உண்ணாவிரதம் தொடர்ந்தது.

பேசமுடியாமல் கஷ்டப்பட்ட நிலையில், திலிபன் உரை நிகழ்த்தினார்:
ஷஷஅன்பார்ந்த தமிழீழ மக்களே!
விளக்கு அணையும் முன்பாக பிரகாசமாக எரியுமாம். அதுபோன்று நானும் இன்று உற்சாகமாக இருக்கின்றேன். இன்று என்னால் நன்றாகப் பேசமுடிகின்றது. போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.
என்னை இந்தப் போராட்டத்தை கைவிடுமாறு எவருமே கேட்கவேண்டாம். நானும், தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது.
மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651வது ஆளாக மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்.
எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் யாரும் தடுக்கமுயலவேண்டாம். அவர்கள் ஐந்து ஆறுபேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.
நான் மூன்று தடவை பேசியுள்ளேன். மூன்று தடவையும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்.||
இவ்வாறு திலீபனின் உரை அமைந்திருந்தது.

திலீபனின் உண்ணா விரதப் போராட்டம், யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கு முழுவதிலுமே பாரிய உணர்வலைகளை தோற்றுவித்திருந்தது. திலீபனின் போராட்டத்திற்கு வலுச்சோக்கும் வகையில் வடக்கு கிழக்கு முழுவதிலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் திருமதி நல்லையா, செல்வி குகசாந்தினி போன்ற பெண்கள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களை ஆரம்பித்தார்கள். மட்டக்களப்பில் மதன் என்ற இளைஞன் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, மட்டக்களப்பு ஷவெபர்| மைதானத்தில் ஆரம்பித்தான். இதேபோன்று முல்லைத்தீவிலும், வவுனியாவிலும், மன்னாரிலும், திருகோணமலையிலும் பல்வேறு உண்ணாவிரதங்கள் ஆரம்பமாகி இருந்தன.
தமிழ் பிரதேசம் எங்கும் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது. மக்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்கள். இந்தியா மன்னிக்கமுடியாத தவறை செய்துவிட்டது போன்ற உணர்வு ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருந்தது.

யாழ்பாணம் வந்த தீட்ஷித்|:


திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 8 வது நாள், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.
திலீபனின் கோரிக்கைகள் பற்றிய தமது இறுதி முடிவை அறிவிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வருவதாகவும், திலீபனுக்கு சாதகமான முடிவையே அவர் வெளியிடுவார் என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. திலீபனின் உண்ணா விரதத்தை முடித்துவைக்கும் நல்ல செய்தியையே இந்தியத் தூதுவர் அன்றைய தினம் கொண்டு வருவதாக தமிழ் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
22.09.1987 அன்று பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய தீட்ஷித்தை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், அன்டன் பாலசிங்கமும் சென்று சந்தித்தார்கள்.

யாழ்ப்பாண மக்கள் நினைத்தது போன்று இந்தியத் தூதுவருடனான புலிகளின் சந்திப்பு ஒன்றும் சுமுகமான ஒன்றாக அமைந்திருக்கவில்லை.
தன்னைச் சந்திக்க வந்த புலிகளின் தலைவர்களுடன், இந்தியத் தூதுவர் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். புலிகளை மிகவும் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்.
அன்றைய சந்திப்பின் போது, இந்தியத் தூதுவர் தீட்ஷித் மட்டும் திலீபன் மீது ஓரளவு அனுதாபம் கொண்டு செயற்பட்டிருந்தால், ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் பங்கு நிச்சயம் வேறொரு வடிவம் பெற்றிருக்கும்.
இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீராத பகைக்கு வித்திட்டவர் என்று பின்னாட்களில் இந்தியப்படை அதிகாரிகளாலேயே விமர்சிக்கப்பட்ட தீட்ஷித், அன்று நடந்துகொண்ட விதம் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் ஆத்திரப்பட வைத்தது.

பகிரல்

கருத்தை பதியுங்கள்