இந்திய அதிகாரிகள் அவதானித்த மாற்றங்கள்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-43) – நிராஜ் டேவிட்

இறுக்கமான முகங்களுடன் புலிகள்:
புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான இறுதி முயற்சி ஒன்றை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் படை உயரதிகாரிகள் இருவர் புலிகளின் தலைவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். இலங்கையில்; நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்காப்டரில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை இந்தியப்படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதே அந்த அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது. இந்தியப்படையினரின் இராணுவ பலம் பற்றி விபரித்து, பலவந்தமாக புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயத்தை விளக்கி, இந்தியப்படையினரிடம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது. புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படையினருடன் அவர்கள் மோத வேண்டி ஏற்படும் என்பதுடன், அதன் காரணமாக புலிகள் அமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டுவிடவும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் புலிகளின் தலைவரிடம் தெளிவுபடுத்த விரும்பினார்கள்.
யாழ் பலகலைக்கழக மைதானத்தில் இந்தியப் படை அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிக்காப்டர் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய இந்தியப்படை அதிகாரிகளால் அங்கு காணப்பட்ட சில மாற்றங்களை அவதானிக்கமுடிந்தது.
மைதானம் முழுவது ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் காவல்கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்கள் இறுக்கமடைந்து, கடுமையாக காணப்பட்டதை அந்த இந்திய அதிகாரிகள் அவதானித்தார்கள். ஹரிக்கிரத் சிங், திபீந்தர் சிங் போன்ற இந்தியப்படை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழகியவர்கள். விடுதலைப் புலிகளின் திருமணச்சடங்குகள் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு புலிகளுடன் நெருக்கமான நட்பைப் பேணிவந்தவர்கள். அந்த அதிகாரிகளை புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா ஹெலிக்காப்டரில் அழைத்துச் சென்று, முல்லைத்தீவிலுள்ள தமது தளங்களையும், காடுகளையும் சுற்றிக்காண்பிக்கும் அளவிற்கு புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழக்கத்தையும், நெருக்கத்தையும் கொண்டிருந்தவர்கள். புலி உறுப்பினர்களும் அந்த இந்தியப்படை அதிகாரிகளை மிகவும் மதித்ததுடன், அவர்களைக் காணும் சந்தர்ப்பங்களில் கைகளை அசைத்து தமது அன்பைப் பரிமாறும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.
ஆனால் அன்றைய தினம் அந்த இந்திய அதிகாரிகள் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கியபோது, புலி உறுப்பினர்கள் எவருமே முன்னர் போன்று இந்திய அதிகாரிகளுடனான தமது நட்பை வெளிக்காண்பிக்க முன்வரவில்லை. காவல்கடமைகளில் ஈடுபட்டிருந்த புலி வீரர்களின் முகங்கள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டன. நிலைத்த பார்வைகளுடன், ஆயுதங்களை ஊறுதியாகக் கரம்பற்றி தமது காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிறிய புன்முறவல் கூடச் செய்யாத அந்த இளைஞர்களைப் பார்த்ததும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது.
புலிகளுடனான தமது நட்பைப் பயன்படுத்தியும், சிறிது பயமுறுத்தல்களைப் பிரயோகித்தும் புலிகளைப் பணியவைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றிருந்த இந்தியப்படை அதிகாரிகள் இருவருக்கும், புலிகளின் முகங்களில் ஏற்பட்டிருந்த அந்தப் புதிய மாற்றம், தாம் நினைத்துவந்தது போன்று நிலமை அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்தது. விடுதலைப் புலிகள் சூழ்நிலைகளுக்கேற்ப தமது உணர்வுகளையும், தங்களையும் மாற்றிவிடும் பக்குவத்தைப்; பெற்றிருந்தது மறுபடியும் அன்று அவர்களுக்குப் புரிந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரைச் சந்திப்பதற்கென்றே அந்த அதிகாரிகள் அங்கு வருகைதந்தார்கள். பல்கலைக்கழக் மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளை புலிகளின் உள்ளூர் தலைவர் ஒருவர் புலிகளின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களைச் சந்தித்த புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா, தலைவர் பிரபாகரன் அங்கு இல்லை என்பதைத் தெரிவித்து, இந்திய அதிகாரிகள் தலைவரைத் தேடி வந்ததன் காரணத்தை விசாரித்தார்.
இந்தியப் படை அதிகாரிகள் தாம் அங்கு வந்த நோக்கத்தை விளக்கினார்கள். புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படைகள் அவற்றைப் பலவந்தமாகக் களைய நேரிடும் என்பதையும், அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் புலிகள் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்கள். புலிகள் அமைப்பின் அரசியல் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டுவிடும் என்று விளக்கிய அதிகாரிகள், இந்த முறுகல் நிலையைத் தவிர்த்து புலிகள் அரசியல் ரீதியாக எவ்வாறு நகர்வுகளை மேற்கொண்டு வெற்றிபெறலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த மாத்தையா, முகத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், புலிகளின் நிலைப்பாட்டை இந்தியப்படை அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தார்.
ஷஷநாங்கள் சாகத் துணிந்து விட்டோம். மரியாதையை இழந்து வாழ்வதைவிட சாவை அணைத்துக்கொள்வது மேல்|| என்று மாத்தையா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுவதற்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை. இரண்டு தரப்பினரும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.
புலிகளின் உணர்வுகளையும், அதில் காணப்பட்ட நியாயப்பாட்டையும் இந்தியப் படை அதிகாரிகளால் நன்றாகவே புரிந்துகொள்ளமுடிந்தது. தமது கொள்கையிலும், தமது மக்களின் விடுதலை தொடர்பாகவும், புலிகள் காண்பித்த உறுதியைக் கண்ட இந்திய அதிகாரிகளுக்கு, புலிகள் அமைப்பு தொடர்பாக பாரிய ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அதிக மரியாதையும் ஏற்பட்டது. (பின்நாட்களில் இந்த இரண்டு அதிகாரிகளும் புலிகள் பற்றியும், அவர்களுடனான யுத்தம் பற்றியும் தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் குறிப்பிடும் போது, தமது இந்த உணர்வுகளை பிரமிப்புடன் வெளிப்படுத்தியிருந்தார்கள்.)
ஆனால் ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் இந்திய அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்தேயாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால், புலிகளுக்கு எதிரான அடுத்த நடவடிக்கைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற யோசனைகளுடன், மீண்டும் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார்கள்.

யுத்த ஏற்பாடுகள்:
புலிகள் மீது யுத்தத்தைத் திணிப்பது என்பது முடிவாகிவிட்டபின்னர், அதனை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது பற்றி இந்தியப்படை அதிகாரிகள் மந்திராலோசனை நடாத்தினார்கள். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் மீது உடனடியாக இராணுவ நடவடிக்கை எடுப்பதில் அவர்களுக்கு மூன்று சிக்கல்கள் இருந்தன.
முதலாவது, இந்தியப் படையினர் இலங்கைச் சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டது போதுமானதாக இருக்கவில்லை. யாழ்ப்பாண வரைபடங்கள் போதியளவு அவர்களிடம் கிடையாது. புலிகளின் மறைவிடங்கள், பதுங்குகுழிகள், ஆயுதக் கிடங்குகள் போன்றனவற்றின் அமைவிடங்கள் பற்றி இந்தியப்படையினருக்கு கிடைத்த தகவல்கள் போதுமானதாக இருக்கவில்லை. உடனடியாக புலிகள் மீது தாக்குதல்கள் நடாத்தி, புலிகளும் பதில் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டால்; அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. புலிகள் வேறு கெரிலாப் பாணியிலேயே போரிடப் போவதால், அவர்களை எதிர்கொள்வதற்கு இந்திய ஜவான்களுக்கு போதிய பயிற்சியை அளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.
இரண்டாவதாக, யாழ்குடாவில் சண்டைகள் ஆரம்பமானால் அதிக அளவில் ஏற்படக்கூடியதான பொதுமக்கள் உயிரிழப்புக்கள் இந்தியப் படை அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துவதாக இருந்தது.

மூன்றாவதாக, புலிகளுடனான யுத்தத்திற்கு தென் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்படக்கூடியதான உணர்வலைகள் தொடர்பான அச்சமும், இராணுவ நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. விடுதலைப் புலிகள் எம்.ஜி.ஆர். உடனும், அவர் தலைமையிலான அ.தி.மு.க. உடனும் மிகுந்த நெருக்கத்தைக் கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. கட்சியே தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தது. அத்தோடு மத்திய இந்தியாவில் ஆட்சி நடாத்திக்கொண்டிருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஒரு தோழமைக் கட்சியாகவும் அ.தி.மு.கா. இருந்ததால், தமிழ் நாடு அரசின் ஆதரவைப் பெறுவது, இந்தியப்படைகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாததாக இருந்தது. அத்தோடு, தமிழ் நாட்டில் அலுவலகம் அமைத்துத் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டு மக்களிடையே இந்திய நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் இருந்ததால், தமிழ் நாடு அரசின் ஆதரவைப் பெறுவது புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மாணித்திருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு அவசியமாக இருந்தது.

இவற்றைக் கருத்தில் எடுத்துக்கொண்ட இந்தியப்படை அதிகாரிகள், இவை அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடியதான ஒரு திட்டத்தைத் தீட்டினார்கள். அந்தத் திட்டத்தில் முதலாவதாக இந்தியாவின் தமிழ் நாட்டுத் தலைவர்களைச் சமாளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய இராணுவ அதிகாரி திபீந்தர் சிங் சென்னைக்குப் பயணமானார்.
அதேவேளை, புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்கு நாள் குறிக்கப்பட்டது.
1987ம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதியே அந்த நாள்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்