நாங்கள் சரனடைகிறோம் என்று கூறிய டொக்டரை சுட்டுக்கொன்றார்கள்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-70) – நிராஜ் டேவிட்

இரவு கடந்து போய் காலையாகிவிட்டது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் சிவபாதசுந்தரம் மூன்று தாதிமாருடன் தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார்.
“தாங்கள் யார் என்று அடையாளம் காண்பித்துக் கொண்டு இந்திய இராணுவத்தினரிடம் சரணடைந்துவிடுவது உசிதமானது|| என்று கூடவந்த தாதிமாரிடம் அவர் எடுத்துக் கூறியிருந்தார்.
கைகளை மேலே தூக்கிக்கொண்டு “நாங்கள் சரணடைகின்றோம்…. நாங்கள் ஒன்றுமே அறியாத டாக்டர்களும், நார்சுகளும்தான்..|| என்று உரத்துக்கூறிபடி அவர்கள் நடந்து வந்தார்கள்.
டாக்டர் சிவபாதசுந்தரம் தமக்கு அருகில் வரும் வரை இந்தியப் படையினர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவர் கைகளை உயர்த்திக்கொண்டு இந்தியப் படையினரை நோக்கி நம்பிக்கையோடு சென்றார்.
இந்தியப் படையினரை டாக்டர் நெருங்கியதும், அவர் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்கப்பட்டன.
அந்த இடத்திலேயே டாக்டர் சிவபாதசுந்தரம் துடிதுடித்து இறந்தார். அவரைத் தொடர்ந்து வந்த நார்சுகள் படுகாயமடைந்தார்கள்.

மருத்துவமனையில் சிக்கிவிட்ட குழந்தைகளையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த உன்னதரான மனிதர் டாக்டர் சிவபாதசுந்தரம் இரத்தத்தில் மிதந்தார்.
உயிர் பிழைத்தவர்கள் பிணங்களைப் போன்று நடித்து மறுநாள் 11மணிவரை பிணங்களின் நடுவில் கிடந்தார்கள்.

இதேபோன்று மற்றொரு மருத்தவரான டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு புறம் பிணமாகக் கிடந்தார்.|| இவ்வாறு அந்த வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தர்.

இந்திய அதிகாரியின் வருகை:
அங்கிருந்த வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை. இந்திய படையினருக்கு யார்-எவர் என்ற அக்கறை இல்லை. கண்களில் பட்டவர்களெல்லாம் எதிரிகளாகவே தெரிந்தார்கள். சுட்டுத் தள்ளத் தயாராக இருந்தார்கள். இந்த நிலையில் என்ன செய்வது என்று எவருக்குமே புரியவில்லை.

அந்தச் சந்தர்ப்பத்தில் மறுநாள் காலை, அதாவது 22ம் திகதி நன்பகலளவில் ஒரு இந்திய உயரதிகாரி யாழ் வைத்தியசாலையினுள் விஜயத்தை மேற்கொண்டார்.

அவர் வந்த தோரணை, மற்றய சிப்பாய்கள் அந்த அதிகாரிக்கு வழங்கிய மரியாதை, ஹிந்தி மொழியில் அவர் மேற்கொண்ட மிரட்டல்கள், இவை அனைத்தையுமே பிணங்கள் போன்று தரையில் கிடந்த வைத்தியர் ஒருவர் அவதாணித்தார்.
நடைபெற்ற சம்பங்கள் பற்றி அங்கு நின்ற சிப்பாய்களிடம் அந்த அதிகாரி கேள்வி கேட்பது புரிந்தது.
நடைபெற்ற சம்பவங்களில் அந்த அதிகாரி திருப்தி அடையவில்லை என்பதும் அந்த அதிகாரியின் பேச்சு தொணியில் இருந்து புரிந்தது. அந்த அதிகாரி விரைவில் அந்த இடத்தை விட்டுச் சென்று விடுவார் போன்றே நிலமை காணப்பட்டது.
அந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட விரும்பாத ஒரு வைத்திய அதிகாரி திடீரென்று எழுந்து அந்த இராணுவ அதிகாரியிடம் தங்களின் நிலை பற்றி அழுதபடி தெரிவித்தார்.


என்ன நினைத்தாரோ அந்த அதிகாரி, அந்த வைத்தியரின் பேச்சை நிதானத்துடன் செவிமடுத்தார்.
எதற்கும் பயப்படவேண்டாம் என்று வைத்தியரை அசுவாசப்படுத்திய அந்த இராணுவ அதிகாரி, வைத்தியசாலையில் இருந்த மற்றவர்களை அழைக்கும்படி கூறினார்.
அந்த வைத்திய அதிகாரியும், வைத்தியசாலையின் பல இடங்களிலும் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு மறைந்திருந்த மற்றவர்களை வெளியில் வரும்படி கூவி அழைத்தார்.
பிணங்களின் மத்தியில் இருந்தும், பூட்டிய அலுமாரிகளின் உள்ளிருந்தும், கூரைகளின் மறைவில் இருந்தும், பழைய பொருட்கள் வைக்கும் இடங்களில் இருந்தும் பலர் அங்குவந்து சேர்ந்தார்கள்.
அதன்பின்னரே அவர்களுக்கு உயிர் வந்தது.
உயிர் வந்தது என்று கூறுவதைவிட உயிர் பிச்சை கிடைத்தது என்று கூறுவது பொறுத்தமாக இருக்கும்.
அந்த உயிர்ப்பிச்சை இந்தியப் படையினரிடம் இருந்து கிடைக்கவில்லை. முதல் நாள் இரவு முவதும் அவர்கள் வழிபட்ட கடவுளிடம் இருந்துதான் கிடைத்தது.

அங்கு திரண்டுவந்த வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்களைப் பார்த்து அந்த இந்திய அதிகாரி ஒரு கேள்வியைக் கேட்டார்: “எதற்காக புலிகளை வைத்தியசாலையினுள் மறைத்து வைத்தீர்கள்?||

அங்கிருந்தவர்கள் அதிர்ந்து விட்டார்கள்.

அந்த இராணுவ அதிகாரி அடுத்துக் கூறிய வசனம் அவர்களை மேலும் ஆச்சரியமடைய வைத்தது: “இங்கே பாருங்கள் எத்தனை புலிகளை எங்களது படைவீரர்கள் இங்கே சுட்டு வீழ்த்தியிருக்கின்றார்கள்?||
“மருத்துமனை போன்ற ஒரு இடத்தை யுத்தத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா?||

அங்கிருந்த வைத்திய சாலை ஊழியர்களுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. ஆடிப்போய்விட்டார்கள்.
புலிகளை தாங்கள் மருத்துமனைக்குள் ஒளித்து வைத்திருந்தது போலவும், அதனால்தான் இந்தியப் படையினர் வைத்தியசாலையினுள் நுழைந்து அந்தப் புலிகளை எல்லாம் அழித்துவிட்டது போலவும் அந்த அதிகாரி கூறுவதையும், அதற்கு காரணமாக அங்கிருந்த வைத்தியசாலை அதிகாரிகளையும், ஊழியர்களையும் குற்றம் சுமத்துவதையும் – அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ஆனாலும் அவர்களால் எதுவும் செய்யமுடியாத சூழ்நிலை.
அங்கு வெள்ளை ஆடைகளுடனும், ஸ்தெதஸ் கோப்புக்களுடனும், வீழ்ந்து கிடக்கும் வைத்தியசேவை ஊழியர்கள் எல்லாம் புலிகளா? அந்த இடம் பூராவும் உடல் சிதறிப் பலியாகியிருந்த தலை நரைத்த வயோதிபர்கள், சேலை அணிந்த பெண்மணிகள், குழந்தைகள் அனைவருமே புலிகளா?
கதறி அழவேண்டும் போலிருந்தது.
அந்த இந்தியப் படை அதிகாரியின் சட்டையை பிடித்து இழுத்து, இந்தக் கேள்விகளையெல்லாம் அவரது மண்டையில் உறைப்பது போன்று கேட்கவேண்டும் போல் இருந்தது.
ஆனால் அவர்களது உயிர்கள் அந்தக் கணத்தில் அந்த இந்திய அதிகாரியின் கருனையிலேயே தங்கியிருந்தது.
அவர்கள் எதுவும் பேசவில்லை. தலைகுனிந்து தரையைப் பார்த்தபடி மௌனமாக நின்றார்கள்.
தன்னை ஒருவாறு அசுவாசப்படுத்திக் கொண்ட ஒரு வைத்திய அதிகாரி, துணிவை வரவழைத்துக் கொண்டு மிகவும் பணிவான குரலில் கூறினார்: ஷஷஎன்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.. இந்தியப் படையினர் வைத்தியசாலையினுள் நுழைந்த போது உண்மையிலேயே இங்கு புலிகள் எவரும் இருக்கவில்லை. வைத்தியசாலை வளாகத்தினுள் இருந்து எங்கள் அறிவுக்கெட்டியவரை புலிகள் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்த்ததாகத் தெரியவில்லை.||
அந்த வைத்திய அதிகாரியைத் தொடர்ந்து வேறு சிலரும் ஷபுலிகள் வைத்திய சாலைக்குள் இருக்கவில்லை| என்பதை இந்திய அதிகாரியிடம் தெரிவித்தார்கள்.

அமைதியாக அவற்றைச் செவிமடுத்த அந்த இந்தியப் படை அதிகாரி, அங்கிருந்தவர்களைப் பார்த்து கேட்டார் : அப்படியென்றால் நான் பொய் கூறுகின்றேனா? நான் என்ன பொய்யனா?||
அந்த இந்தியப்படை அதிகாரியின் கண்கள் சிவந்து காணப்பட்டன.

அவலங்கள் தொடரும்….

பகிரல்

கருத்தை பதியுங்கள்