மட்டக்களப்பில் இந்திய இராணுவத்தின் மீது புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்கள்.

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-87) – நிராஜ் டேவிட்

இந்திய -புலிகள் யுத்தத்தின் பல விடயங்களை நாங்கள் ஏற்கனவே விரிவாக பார்த்திருந்தோம். யுத்த காலங்களில் இந்தியப் படையினராலும், இந்தியப் படையினரின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ்க் குழு உறுப்பினர்களாலும்; தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் ஓரளவு பார்த்திருந்தோம்.
இனி இந்தியப்படையினரின் தமிழ் மண் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் மற்றைய சில பக்கங்கள் பற்றித்தொடர்ந்து பார்க்க இருக்கின்றோம்.
கனரகப் பிரிவுகள்:
பாரிய இழப்புக்களின் மத்தியில் யாழ் குடாவையும், வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களையும் கைப்பற்றிய இந்தியப் படையினர், விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் மிகவும் திண்டாடினார்கள்.
புலிகளைச் சமாளிக்கவென சுமார் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்தார்கள்.

யாழ் குடாவில் இந்தியப் படையின் 54வது காலாட் படைப் பிரிவும், திருகோணமலையில் 340வது காலாட் படைப்பிரிவும் நிலைகொண்டிருந்தது. இவற்றிற்கு மேலும் பலம் சேர்க்குமாற்போன்று யுத்த தாங்கிகள் அணிகளும் இந்த காலாட் படைப் பிரிவுகளுடன் இணைக்;கபட்டிருந்தன.


அந்தக் காலகட்டத்தில் இந்தியப் படை அதிகாரிகளாகக் கடமையாற்றிய முக்கிய அதிகாரிகள் மேஜர் ஜெனரல் சங்கர் பாதூரி மற்றும் மேஜர் ஜெனரல் அப்சார் கரீம். இவர்கள் பின்நாட்களில் ; இந்தியப் படையினர் வசம் அப்பொழுது இருந்த கனரக ஆயுதங்கள் தொடர்பான சில விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களின் கூற்றுப்படி, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி நிலவரப்படி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினர் ஆகக் குறைந்தது பின்வரும் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார்கள்:
நான்கு ரீ-72 தாங்கிகளைக் கொண்ட ஒரு சிறிய அணியினர் யாழ்ப்பாணத்திலும், மூன்று ரீ-73 தாங்கிகளைக் கொண்ட மற்றொரு அணியினர் திருகோணமலையிலும் இந்தியப் படையில் இருந்தார்கள். கனரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பன்னிரெண்டு கவச வாகனங்கள் (BMPI) யாழ்ப்பாணத்திலும், ஆறு கவச வாகனங்கள் திருகோமலையிலும் இந்தியப் படையினர் வசம் இருந்தன. இதைவிட யாழ்ப்பாணத்தில் எட்டு முதல் பன்னிரெண்டு 120 மி.மீ. ஆட்டிலெறிகள் மற்றும் வேறு சில ஆட்டிலெறிகளும் இருந்தன.
இதேபோன்று அரை ஸ்குவாட்ரன் அளவில் கவச வாகனங்களும், யுத்த தாங்கிகளும், ஆட்டிலறிகளும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலதிகமாக நாற்றுக்கணக்கான சிறிய ரக மோட்டார்கள்,B-40 ரன ஏவகளைச் செலுத்திகள் இந்தியப் படைவசம் இருந்தன.
இவற்றைவிட இந்தியப் படையின் 36வது படையணியின் ஆட்டிலறி பிரிவொன்றும், 2வது இன்டிபெண்டன் ஆட்டிலறி ரெஜிமென் (2nd Independent Artillery Regiment) இனது ஒரு பிரிவும் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவை ஏற்பட்டால் மிக குறுகிய அறிவிப்பில் இலங்கைக்கு நகர்த்தக்கூடிய விதத்தில் அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோன்று இந்தியப் படையின் 72வது படையணியின் ஆட்டிலறிப் பிரிவொன்றும் பெங்களூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இத்தனை ஆராவாரங்களும், சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான விடுதலைப் புலிகளைச் சமாளிக்க என்பது இருபதாம்; நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச் சுவை.

மட்டக்களப்பில் இந்தியப்படை
இந்தியப்படையினர் ஈழ மண்ணை ஆக்கிரமித்து நின்ற காலப்பகுதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற சில சம்பவங்கள் பற்றி இந்தத் தொடரில் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கின்றோம்.
இந்தியப்படையினரின் காலத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள், இந்தியப்படையினரின் பதில் நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு எதிராக இந்தியப்படையனர் மேற்கொண்ட தாக்குதல்கள், குறிப்பாக கிழக்கில் இருந்த முஸ்லீம்கள் மீது இந்தியப்படையினர் கட்டவிழ்த்துவிட்ட அநியாயங்கள் போன்றனவற்றை தொடர்ந்துவரும் அத்தியாயங்களில் நாம் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பு காலப்பகுதியில் மட்டக்களப்பில் புலிகள் அமைப்பால் பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கெரில்லாப்பாணியிலான தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு நகருக்கு வடக்காக மட்டக்களப்பு கொழும்பு ஏ-11 வீதியில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள நாவலடிச் சந்தியில் வைத்து இந்தியப்படையினரின் வாகனத் தொடர் அணிக்கு எதிராக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் பாணியிலான தாக்குதல் மட்டக்களப்பில் இந்தியப் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்ககுதல் நடவடிக்கைகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கை அந்த நேரத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவின் நேரடி வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் குடும்பிமலைப் பிரதேசப் பொறுப்பாளராகச் செயற்பட்ட தளபதி ரூபன் இந்தத் தாக்குதலுக்குத் தலைமைதாங்கினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோட் 4-6 (code four – six)என்று புலிகளால் சங்கேத பாசையில் குறிப்பிடப்படுகின்ற வந்தாறுமூலைப் பிரதேசம் மற்றும் கோர்ட் 4-9 என்று குறிப்பிடப்படுகின்ற வாகரைப் பிரதேசம் மற்றும் தொப்பிக்கலை என்று அழைக்கப்படுகின்ற குடும்பிமலைப் பிரதேசப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 200 போராளிகள் வரையில் இந்தத் தாக்குதலில் கலந்துகொண்டார்கள்.
ஓட்டமாவடியை அண்டிய மையிலங்கரச்சி, காவத்தை முனை மற்றும் தியாகவட்டவான் பகுதிகளில் மறைந்திருந்த விடுதலைப் புலிகள், இந்தியப் படையின் நீண்ட வாகனத்தொடரணி மீது அதிரடித்தாக்குதல் ஒன்றை நடாத்தியிருந்தார்கள்.

இந்தத் திடீர் தாக்குதலில் 60 இற்கும் அதிகமான இந்தியப் படையினர் கொல்லப்பட்டார்கள்.
ஓட்டைமாவடிப் பிரதேசம் ஒரு முஸ்லிம் பிரதேசம் என்பதால், இந்தியப் படையினர் சற்று கவலையீனமானவே வந்திருந்தார்கள். இங்கு புலிகள் எதுவும் செய்யமாட்டார்கள் என்று கூடவந்த தமிழ் இயக்க உறுப்பினர்களால்; அவர்களுக்கு கூறப்பட்டிருந்தது. இதைக் கணிப்பிட்டே விடுதலைப் புலிகள் தாக்குதலுக்கு அந்த இடத்தைத் தெரிவுசெய்தார்கள்.
இந்தியப் படையினருக்குப் பாரிய இழப்பு.
தமது இயலாமையை அவர்கள் அப்பகுதி மக்கள் மீது வெளிப்படுத்தினார்கள். நூற்றிற்கும் அதிகமானவர்களை சுட்டுக்கொன்றார்கள். ஓட்டைமாவடி முஸ்லிம் பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுகள் மிகப் பெரிய அளவில் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஓட்டைமாவடி என்கின்ற பெரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம்கள் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி பொல்லனருவை மாவட்டத்திற்கு இடம்பெயரும் அளவிற்கு பாரிய வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
விடுதலைப் புலிகள் தரப்பில் வந்தாறுமூலையைச் சேர்ந்த ராஜு (2ம் லெப்) மரணமடைந்தார்.
வெற்றிகரமான அந்தத் தாக்குதலை முடித்துக்கொண்ட புலிகளின் அணிகள் வாகைநேரிப் பிரதேசத்திற்கு பின்நகர்ந்து வாகநேரிப்பிப் பம்பிமனையில் தளம் அமைத்து தங்கியிருந்துவிட்டு பின்னர் தமது பின்தளங்களை நோக்கிச் சென்றிருந்தார்கள்.
சிறப்புப் படைப்பிரிவு
அந்த நேரத்தில் மட்டக்களப்பில் நிலைகொண்டிருந்த இந்தியப்படைத் தலைமைக்கு மிகுந்த அதிர்சியினை ஏற்படுத்தியிருந்த தாக்குதல் என்று இந்தத் தாக்குதலைக் குறிப்பிட முடியும்.
மட்டக்களப்பில் புலிகள் தரப்பில் ஒரு சில பயிற்றப்பட்ட போராளிகள் மாத்திரமே செயற்படுவதாகத்தான் அவர்களுக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. சிறிய அளவிலான கன்னிவெத் தாக்குனதல்கள், கிறனைட் வீச்சுக்கள் இவற்றினைத் தவிர மட்டக்களப்பில் புலிகளால் பெரிதாக எதுவும் செய்யமுடியாது என்றே அவர்கள் கணிப்பிட்டும் இருந்தார்கள். நூற்றுக்கணக்கான போராளிகளை ஒருங்கிணைத்து, கச்சிதமாகத் திட்டமிட்டு இத்தனை நேரத்தியாக மட்டக்களப்பில் ஒரு தாக்குதலைப் புலிகளால் மேற்கொள்ளமுடியும் என்கின்றதான செய்தி இந்திப்படைத் தலைமைக்கு பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
உடனடியாக ஒரு சிறப்புப் படைப்பிரிவு கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோள் இந்திய இராணுவத் தலைமைக் காரியாலயத்திற்குப் பறந்தது.
கிழக்கில் புலிகளின் தாக்குதல்களில் இருந்த இந்தியப் படையினரின் உயிர்களைக் காப்பாற்றவேண்டுமானால், கிழக்கில் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் எதிர் கெரில்லாப் போரியலில்(Counter Insurgency) சிறப்புப் பயிச்சி பெற்ற இராணுவப் பிரிவு மட்டக்களப்பிற்கு அனுப்பிவைக்கப்படவேண்டும் என்ற வேண்டுகோள் கிழக்கின் இராணுவத் தலைமையினால் புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த வேண்டுகொளைத் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் 57வது மவுன்டன் டிவிசனின்(Mountain Division) மூன்று பிரிகேட்டுக்கள் மட்டக்களப்பிற்குக் அவரச அவரசமாக அனுப்பப்பட்டன.
அப்பொழுது கிழக்குப் பிராந்தியத்தின் நடவடிக்கைத் தலைமைப் பொறுப்பில் இருந்த மேஜர் ஜெனரல் டீ. சிங், அசாமிலுள்ள தனது தலைமைக் காரியாலயத்தில் இருந்து நேரடியாக இந்தப் படையணிகளை வருவித்திருந்தார்.


இந்தப் படைப் பிரிவின் முதலாவது பிரிகேட் 1988ம் ஆண்டு பெப்ரவறி மாதம் 22ம் திகதி மட்டக்களப்பு ஆலையடிச் சோலையில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது..
இந்தப் படையணிகள் ஏறத்தாள இருபது வருடங்களாக இந்தியாவின் வடகிழக்கு எல்லைப் பிரதேசங்களில் எதிர்கெரில்லாப் போரியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.
மட்டக்களப்பில் புலிகளின் தாக்குதல் வீச்சுக்கள் அதிகரிக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்த விஷேட படையணியினர் வருவிக்கப்பட்டிருந்தார்கள்.
பெரும்பாலும் சீக்கியர்களை மட்டுமே கொண்டிருந்த இந்த விஷேட படையணியினர் வழமைக்கு மாறாக ஏ.கே.-47 ரகத் துப்பாக்கிகளை சுமந்து வந்திருந்தார்கள். சாதாரணமாக இந்தியப் படையினர் எல்.எல்.ஆர்.(SLR- Self Load Rifle), எல்.எம்.ஜீ. (LMG- Light Machine Guns), மற்றும் எஸ்.எம்.ஜீ.(SMG- Sub Machine Gun)- ரக துப்பாக்கிகளையே வைத்திருப்பது வளக்கம். அந்தத் துப்பாக்கிகளைச் சங்கிலியில் பிணைத்து தமது இடுப்புப் பட்டிகளில் இணைத்திருப்பார்கள். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும். புலிகள் துப்பாக்கிகளைப் பறித்துச் சென்றுவிடாமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடாம்.
ஆனால் 1988 பெப்ரவறியில் மட்டக்களப்பில் வந்திறங்கிய சீக்கியப் படைப்பிரிவினர் நவீன ஏ.கே.-47 ரகத் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள். மிகவும் வாட்டசாட்டமான உடற் கட்டமைப்புடன், மீசை தாடி, தலைப்பாகை என்று பார்ப்பவர்களை அச்சமடையச் செய்யும் தோற்றத்துடன் வலம் வந்தார்கள்.


மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக் கழகத்திலும், வாழைச்சேனைக் காகித ஆலையிலும், மட்டக்களப்பு மென்றேசா முகாமிலும் இந்த பிரிகேட்டைச் சேர்ந்த படைவீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்.

‘புளூமிங் டுளிப்| இராணுவ நடவடிக்கை
இந்த விஷேட பயிற்சி பெற்ற படையினர் மட்டக்களப்பிற்குக் கொண்டுவரப்பட்டு சில நாட்களாக அவர்கள் களமிறக்கப்படவில்லை. முகாம்களிலேயே வைக்கப்பட்டு தீனி போடப்பட்டு பயிற்சி நடவடிக்கைகளல் ஈடுபடுத்தப்பட்டு வந்தார்கள்.
அடிக்கடி இடம்பெறுகின்ற சுற்றிவளைப்பு நடவடிக்கைகளிலும் இந்த விஷேட படைப்பிரிவினர் ஈடுபடுத்தப்படவில்லை. வீதி ரோந்து நடவடிக்கைகளிலும் இந்தப் பிரிவினர் ஈடுபடுத்தப்படவில்லை. பகல் நேரங்களில் பயிற்சிகளில் ஈடுபடுவது.. மாலையானதும் விளையாடுவது.. இரவு வேளைகளில் நன்றாகத் தூங்குவது என்று உடலை வளர்த்து வந்தார்கள்.
ஒரு நாள் திடீரென்று இவர்கள் அணிவகுத்து நின்றார்கள்.
புலிகளுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை ஒன்றிற்காக அவர்கள் களம் இறக்கப்பட்டார்கள்.
குறிப்பிட்ட அந்த நடவடிக்கைக்குப் பெயர் ‘புளூமிங் டுளிப்| இராணுவ நடவடிக்கை (Operation Blooming Tulip).

மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிப்பதே அந்த இராணுவ நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது.
அப்பொழுது மட்டக்களப்பு தரவைக் காடுகளின் மத்தியில் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முக்கிய தளத்தை ஒன்றைத் தாக்கி அழிப்பதே அந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்தது.
அந்தத் தளத்தின் பெயர் ‘பேரூட் பேஸ்| என்று இந்தியப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

புலிகளின் ஆயுதக் களஞ்சியங்கள், பிராந்தியத் தலைமை, பயிற்சி முகாம்கள், நடவடிக்கைத் தலைமையகம், தொலைத்தொடர்பு மையங்கள் என்பன இந்த பெய்ரூட் பேசிலேயே அமைந்திருந்ததாக இந்தியப்படையினருக்கு தகவல்கள் கிடைத்திருந்தன. புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதி கருணா, அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரான்சிஸ், தளபதி ரூபன், தளபதி காந்தன், கரிகாலன், போன்றவர்களும் இந்த பேருhட் முகாமிலேயே தங்கியிருப்பதாகவே இந்தியப் படையனருக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவித்திருந்தன.
அசாமில் இருந்து தருவிக்கப்பட்ட தமது சிறப்புப் படைப்பிரிவைக்கொண்டு இந்த முகாமைத் தீடிரென்று சுற்றிவவைத்து, அங்கிருப்பவர்களைத் தாக்கியழித்து, அங்கிருந்தவர்களைக் கொலை செய்து, அந்த இடத்தில் நிலைகொள்வதே இந்தியப் படையினரின் நோக்கமாக இருந்தது.
கச்சிதமாகத் திட்டம் தீட்டினார்கள்.
ஒரு நாள் அதிகாலை இந்தியப்படையின் 57வது மவுன்டன் டிவிசனின்(Mountain Division) படையினர் மெதுவாக நகர ஆரம்பித்தார்கள் -புலி வேட்டைக்கு.
தொடரும்…

பகிரல்

கருத்தை பதியுங்கள்