உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-19) – நிராஜ் டேவிட்

0

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவாகள் பிரதித்தலைவர் மாத்தையாவினால் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்கின்றதான வதந்தி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாகப் பரவிக்கொண்டு இருந்தது. இந்த வதந்தி தமிழ் நாட்டுத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் வெளிவரும் தினமலர் பத்திரிகை ஆரம்பத்தில் இந்தப் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தது. பின்னர் வேறு வழியில்லாமல் மற்றைய சில ஊடகங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்தவம் கொடுத்து வெளியிட ஆரம்பித்திருந்தன. பிரபாகரன் எப்படி இறந்தார் என்கின்றதான விவாதங்களையும், அவருக்கு நேர்ந்தது சரியா, இந்தக் கொலையின் பின்னணியில் இந்தியா இருந்ததா? என்கின்றதான பல ஊகங்களை எழுப்பி செய்தி ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தன.

இப்படியான ஊகங்கள் பரவுவதைத் தடுக்கவேண்டிய ஒரு தேவை தமிழ் நாட்டில் இருந்த விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு இருந்தது. அதாவது, புலிகளின் தலைவர் இறந்துவிட்டார், புலிகள் அமைப்பு இரண்டாகப் பிழவுபட்டுவிட்டது என்று கதைகள் பரவினால், தமிழ் நாட்டில் புலிகளின் ஆதரவுத் தளம் வீழ்ச்சியடைந்துவிடும் என்று அவர்கள் அச்சமடைந்தார்கள். தமிழ் நாட்டுமக்களைப் பொறுத்தவரையில், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக கிட்டுதான் பிரபல்யம். கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த காலப்பகுதியில் அவர் செய்த வீர சாகாசங்கள் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம். அத்தோடு அக்காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான இலங்கைத்தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாகவும், கல்விகற்றுக்கொண்டும் தங்கியிருந்தார்கள். எனவே இதுபோன்ற கட்டுக்கதைகள் தமிழ் நாட்டில் பரவுவதைத் தடுப்பது விடுதலைப் புலி ஆதரவாளாகளைப் பொறுத்தவரையில் அவசியமானதாக இருந்தது.

கோபால் செய்தது
‘நக்கீரன் கோபால்| என்ற பெயர் இலங்கைத் தமிழர்களிடையே நன்கு பிரபல்யம். ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு சார்பான பத்திரிகையாக தமிழ் நாட்டில் இருந்து தற்பொழுதும் வெளிவந்துகொண்டிருக்கும் நக்கீரன் பத்திரிகையையும், அதன் ஆசிரியரான கோபாலையும் தெரியாத ஈழத்தமிழர்கள் மிகச் சிலர்தான். சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பன் விவகாரத்தில் சமாதானத் தூதராகச் சென்றவர் ‘நக்கீரன்| பத்திரிரை ஆசிரியர் கோபால். பின்னர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குகின்றார் என்று குற்றம் சுமத்தப்பட்டு ‘பொடா| சட்டத்தின் கீழ் தமிழ் நாட்டுச் சிறையில் சில காலம் இவர் அடைக்கப்பட்டவர். இந்த வகையில் நக்கீரன் கோபால் ஈழத்தமிழர்களிடம் நன்கு பிரபல்யமானவர்.


1989 இல் ‘நக்கீரன்| பத்திரிகையின் மூலம் கோபால் ஒரு காரியம் செய்தார்.
எந்தத் ‘தினமலர்| பத்திரிகை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியை உறுதிப்படுத்தியதோ, அதே தினமலர் பத்திரிகையை பிரபாகரன் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சியை நக்கீரன் முகப்பு அட்டையில் தாங்கி வந்தது. அந்த முகப்பு அட்டையில், ‘பிரபாகரன் கொல்லப்பட்டார்| என்று வெளியான செய்தியைத் தாங்கிய தினமலரை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், ஒரு புன்னகையுடன் படித்துக்கொண்டிருந்த காட்சி வெளியாகியிருந்தது.
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்;று உறுதிப்படுத்துவதாக இந்த பத்திரிகைப் படம் அமைந்திருந்தது.
நமிழ்நாட்டு மக்களுக்கு பெரிய சந்தோசம். அந்தப் பத்திரிகையைப் படித்ததன் பின்னர்தான் அங்கு பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களை நம்பி பரபரப்பு செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகைக்கு பலத்த அதிர்ச்சி. மூக்குடைபட்டுக்கொண்டார்கள். வாசகர்கள் கேள்விக்கணைகளால் ஆசிரியரைத் துழைத்தெடுத்துவிட்டார்கள். வாசகர்களிடம் தினமலர் பத்திரிகை தனது நம்பகத்தன்மையை இழந்தது. விற்பனையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இந்தச் செய்தியை கேள்விக்குறியுடன் வெளியிட்ட மற்றய பத்திரிகைகள், நக்கீரன் பத்திரிகையில் வெளியான செய்தியையும், புகைப்படத்தையும் அடிப்படையாக வைத்து தாங்கள் சந்தேகத்துடன் வெளியிட்ட செய்தியை நியாயப்படுத்திக்கொண்டன.
அந்தச் சந்தர்ப்பத்தில் நக்கீரன் பத்திரிகை தமிழ் நாட்டில் ஒருவகையான ஊடகப் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. நமிழ்நாடு முழுவதும் நக்கீரன் பத்திரிகை விற்றுத் தீர்த்தது. நக்கீரன் பிரதிகள் சில இடங்களில் இருபது ரூபாய்குக்கூட (அக்காலத்தில் நக்கீரன் பத்திரிகை வெறும் ஒரு ரூபாய் மட்டும்தான்) விட்கப்பட்டதாத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால், இத்தனைக்கும், நக்கீரன் தனது முகப்பு அட்டையில் வெளியிட்டிருந்த பிரபாகரனின் புகைப்படம் ஒன்றும் உண்மையானது அல்ல. பொய்யாகத் தயாரிக்கப்பட்ட புகைப்படத்தை முகப்பு அட்டையில் வெளியிட்டே கோபால் இத்தனை காரியத்தையும் சாதித்திருந்தார்.
பிரபாகரன் போன்ற தோற்றமுடைய ஒரவரின் கையில் தினமலரைக் கொடுத்து படம் பிடித்தார். பின்னர் அந்தப் புகைப்படத்தில் பிரபாகரன் அவர்களின் தலையை கச்சிதமாகப் பொருத்திவிட்டார். ‘நக்கீரன்| கோபால் ஒரு சிறந்த ஓவியர் என்பதால் இந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்துமுடித்தார்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட பின்னரே கோபால் தனது கைங்காரியம் பற்றிய இரகசியத்தை தனது வாசகர்களுக்கு தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

மண்கௌவிய இந்தியப் படை:
பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார் என்கின்ற செய்தியை விடுதலைப்புலிகள் ஒரு ஒளிநாடா மூலமாக வெளியிட்டிருந்தார்கள். அந்த ஒளி நாடாவில் பிரபாகரன்; தான் கொல்லப்பட்டாக செய்தி வெளியான உள்ளூர் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார். அருகில் மாத்தையா, கிட்டு, யோகி ஆகியோர் அமர்ந்திருந்தாhகள். யோகி எழுந்து கமராவின் முன் வந்து ஷஷஇந்தியப் படை வன்னியில் மன் கௌவியிருக்கின்றது. எங்கள் தலைவரை நெருங்க முடியாதவர்கள் தங்கள் கையாலாகாத தனத்தினால் பொய்யான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றார்கள்..| என்று தெரிவித்தார்.
இந்த ஒளிப்படக் கசட்டை விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான மாணிக்கசோதி என்பவர் ஏ.பி. செய்தி நிறுவனத்தில் வைத்து போட்டுக் காண்பித்தார்.
பின்னர் இலங்கை ரூபவாகினியிலும் இந்த ஒளிப்பதிவு காண்பிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்களிலும் இது ஒளிபரப்பபட்டது.

‘பிரபாகரன் கொல்லப்பட்டார்| என்கின்ற செய்தியை வன்னிக்காட்டில் இருந்தபடி பிரபாகரன் அவர்கள் இரசித்துக்கேட்டார்.
இந்தச் சம்பவம் பற்றி பின்னாட்களில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரபாகரன் அவர்கள், ஷஷஎனக்கே நான் உயிருடன் இருக்கின்றேனா என்று சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்|| என்று தெரிவித்திருந்தார்.

இந்தியப் படையினர் மேற்கொண்ட ஒரு மிகப் பெரிய உளவியல் நடவடிக்கை மிகப் பெரிய தோல்வியில் முடிவடைந்த சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதே பிரபாகரன்; இறந்துவிட்டதாக ஒரு வதந்தியைக் கட்டவிழ்த்து விட்டு ஒரு மிகப் பெரிய உளவியல் அனுகூலத்தை பெற்ற வரலாறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு இருக்கின்றது. நாலாம் கட்ட ஈழ யுத்தத்தில் சிறிலங்கா பெற்ற மிகப் பெரிய வெற்றிக்கு அத்திவாரமாக அமைந்த ஒரு முக்கிய உளவியல் நடவடிக்கையாக போரியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்ற அந்த உளவியல் நடவடிக்கை பற்றி தொடர்ந்து வரும் வாரங்களில் நாம் விரிவாக ஆராய்வோம்.

தொடரும்..

பகிரல்

கருத்தை பதியுங்கள்