தமிழ் மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்திய தலைவரின் உரை

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-12) – நிராஜ் டேவிட்

ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுவந்த துரோக நடவடிக்கைகளின் உச்சமாக, ஸ்ரீலங்காவுடன் அது செய்துகொண்ட ஒப்பந்தம் அமைந்திருந்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர்களின் நலன்களை அடகுவைத்து எழுதப்பட்டிருந்தது என்பதையும், இந்த ஒப்பந்தத்தை ஏற்றேயாகவேண்டிய நிர்ப்பந்தம் புலிகள் மீது விதிக்கப்பட்டிருந்தது என்பதையும் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், 04.08.1987ம் திகதி மாலை, சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஆற்றிய உரையில் தெளிவாக விளக்கியிருந்தார்.

‘நாங்கள் இந்தியவை நேசிக்கின்றோம்| என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில், அன்றைய காலகட்டத்தின் யதார்த்த நிலையை அவர் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் அவர்களின் பிரசித்திபெற்ற சுதுமலை பேச்சின் சாரம்சம் இதுதான்:

“எனது அன்புக்குரிய தமிழீழ மக்களே!
இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது. எமக்கு அதிர்ச்சி ஊட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, திடீரென்று ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.
எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எங்களையோ கலந்தாலோசிக்காமல் மிகவும் அவசர அவசரமாக, இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அமுலாக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது.

ஆகவே, இந்த ஒப்பந்தத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்திய அரசிடம் தௌ;ளத் தெளிவாக விளக்கினோம்.

ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கியே தீருவோம் என்று இந்தியா கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியம் அடையவில்லை.
இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லரசின் வியூகத்தின் கீழ் ஸ்ரீலங்காவைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருந்தன. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதில் அதிக அக்கரை காண்பித்தது.

அதேசமயம், தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடியதாகவும் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம்.

ஆனால் எமது ஆட்சேபத்தால் பயன் எதுவும் ஏற்படவில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?
15 வருடங்களாக, இரத்தம் சிந்தி, தியாகங்கள் பல புரிந்து, சாதனைகள் செய்து எத்தனையோ உயிர்பலி கொடுத்து கட்டி எழுப்பப்பட்ட போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால், அதனை எம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
இந்தியப் பிரதமரின் உறுதிமொழிகள்:
இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் ராஜீவ் காந்தி என்னைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். நான் அவரிடம் எமது மக்களின் நிலைப்பாட்டையும், எமது பிரச்சனைகளையும் மனம்திறந்து எடுத்துரைத்தேன். இனவாத சிங்கள அரசாங்கத்தின் மீது எனக்கு சிறிதளவேனும் நம்பிக்கை இல்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காண்பித்தேன். இந்த ஒப்பந்தத்தை சிங்கள அரசு ஒரு போதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று எமது அவநம்பிக்கையையும் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உத்தரவாதத்தையிட்டும் அவருடன் பேசினேன். இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத் தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மாணித்துள்ளோம்.

எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தகைய மாபெரும் தியாகங்களை நாங்கள் செய்திருக்கின்றோம். இவற்றையெல்லாம் நாங்கள் மீண்டும் விபரிக்க வேண்டியதில்லை.

ஆயுத ஒப்படைப்பு
ஆயுதங்களை நாம் ஒப்படைப்பதானது, எம்மிடையேயுள்ள பொறுப்புக்களை கைமாற்றிக் கொடுப்பதையே காட்டுகின்றது. ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப்படைகளுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை. நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.
எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப்படைகள் ஏற்கின்றன. எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப் பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

தனித் தமிழீழம்
எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவும் இல்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம்.

இருப்பினும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிட்டுமென்று நான் கருதவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இவ்வொப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கான நிரந்தரத் தீர்வு, தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும்.

ஒரு விடயத்தை இங்கு எத்தகைய சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவுபடுத்த விரும்புகின்றேன். தமிழ் ஈழம் என்ற குறிக்கோளினை அடையும் வரை நான் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பேன்.

எமது போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது குறிக்கோளினை அடைவதற்கான போராட்டங்கள் மாறப்போவதேயில்லை.

எமது குறிக்கோளினை ஈடேற்றுவதற்கு எமது மக்களாகிய உங்கள் முழுமனதுடனான, முழுமையான ஒன்றிணைந்த ஆதரவு எப்பொழுதும் எமக்கு இருக்கவேண்டும்.

தமிழீழ மக்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு, இடைக்கால நிர்வாக அமைப்பில் நாம் இணையக்கூடிய அல்லது தேர்தலில் நிற்கக்கூடிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எச்சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ அல்லது முதன் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.||

புலிகளின் தலைவர் வே.பிரபாகன் அவர்களின் சுதுமலைப் பேச்சு வித்தியாசமான பல உணர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன.

புலிகள் விரும்பாத ஒரு விடயத்தை இந்திய அரசு தமிழ் மக்கள் மீது திணிக்க முனைகின்றதோ என்கின்ற சந்தேகம் மக்கள் மத்தியில் முதன்முதலாக ஏற்பட ஆரம்பித்தது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பாதகமான சில காரியங்கள் நடைபெறக்கூடியதான அபாயநிலை ஏற்பட்டுள்ளதா என்கின்ற அச்சம் தமிழ் மக்கள் மனங்களை படிப்படியாக ஆட்கொள்ள ஆரம்பித்தது.

ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற சரத்துக்கள் பற்றியும், இந்தியப்படைகளின் வருகையைப் பற்றியும் தமிழ் மக்கள் சந்தேகம்கொள்ள ஆரம்பித்தார்கள்.

கொடிய யுத்தம் நின்றுபோயிருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஈழத்தமிழர்கள், நிதானமாக சிந்திக்க ஆரம்பித்தார்கள். இந்தியாவின் நகர்வுகள் பற்றியும், அது மேற்கொள்ள ஆரம்பித்திருந்த நடவடிக்கைகள் பற்றியும், ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகள் பற்றியும் மக்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தியாவின் உள்நோக்கம் பற்றிய சந்தேகம் படிப்படியாக மக்கள் மனங்களில் தோன்ற ஆரம்பித்தன.

மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்டு, மிகவும் உணர்ச்சிகரமாக வழங்கப்பட்டிருந்த பிரபாகரன் அவர்களின் சுதுமலை உரை, இத்தனை காரியங்களையும் தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்த்த ஆரம்பித்திருந்தது.

பகிரல்

கருத்தை பதியுங்கள்