சிறிலங்காவின் சதிவலைகளில் இந்தியா

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-28) – நிராஜ் டேவிட்


ஈழத் தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற பல துரோகங்களுள், ஸ்ரீலங்கா அரசின் சதிவலைகளில் இந்தியா வீழ்ந்துகொண்டதும் மிக முக்கியமானவையாகக் கூறப்படுகின்றது.
ஈழத் தமிழருக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு, குறிப்பாக ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா, அத்துலத் முதலி போன்றோர் மேற்கொண்ட சதிநடவடிக்கைளுக்கு, இந்தியாவும் தெரிந்துகொண்டே தன்னை பலியாக்கி;கொண்டதானது, ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா செய்துகொண்ட மிகப் பெரிய துரோகங்களுள் ஒன்று என்பது நோக்கத்தக்கது.
ஸ்ரீலங்கா அரசின் நயவஞ்கம் பற்றி இந்தியா நன்கு அறிந்திருந்தும், இதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட இருந்த பாதகங்கள் பற்றி நன்கு தெரிந்திருந்தும் கூட, பல சந்தர்ப்பங்களிலும் இந்தியா, ஸ்ரீலங்கா அரசின் சதி வேலைகளுக்கு துணைபோயிருந்தது. ஈழத் தமிழர் பற்றிய உண்மையான அக்கறை இந்திய அரசிற்கு இல்லாதிருந்ததும், விடுதலைப் புலிகள் பற்றிய வெறுப்புணர்வு இந்தியாவிடம் மிகுந்து காணப்பட்டதுமே இதற்கு காரணம்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் பின்நாட்களில் இந்தியாவிற்கு மிக மோசமான பின்னடைவுகள் பல ஏற்படுவதற்கு, ஸ்ரீலங்கா அரசின் குள்ளநரித்தனங்களுக்கு துணைபோன இந்தியாவின் இந்த நடவடிக்கைகளே காரணமாக இருந்தன.

ஜே.ஆருக்கு ஏற்பட்டிருந்த நிர்ப்பந்தங்கள்:


ஈழப் பிரச்சனையில் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிக்கு அக்கால கட்டத்தில் இரண்டுவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன. முதலாவது விடுதலைப் புலிகளின் இராணுவ சக்தி காரணமாக ஏற்பட்டிருந்த பிரச்சனை.
இரண்டாவது இந்தியாவின் நேரடித் தலையீடு காரணமாக ஏற்பட்டிருந்த பிரச்சனை.
புலிகள் மீது 1987 இல் ஸ்ரீலங்கா இராணுவம் ஷஒப்பரேசன் லீபரேசன்| இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு, யாழ் குடாவின் வடமாராட்சி பிரதேசத்தின் பெரும் பகுதியை கைப்பற்றி இருந்தாலும், முழு யாழ்பாணத்தையும் கைப்பற்றுவதோ, அல்லது கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதென்பதோ முடியாத ஒன்றாகவே இருந்தது. புலிகள் அத்தனை பலம் பொருந்தியவர்களாக இருந்ததே இதற்கு காரணம்.
அடுத்தது, இந்தியா சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனித்துக்கொண்டிருந்தது.
இந்த இரண்டு பிரச்சனையையும் தீர்க்கக்கூடிய வகையில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களைப் பறிக்கும் நோக்கத்துடனேயே, ஜே.ஆர். இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தச் சம்மதித்திருந்தார். இந்தியாவைக்கொண்டு புலிகளை அழித்துவிடும் திட்டத்துடனேயே ஜே.ஆர். காய்களை நகர்த்திக்கொண்டிருந்தார். அரசியலில் அதிக அனுபவம் வாய்ந்த ஒரு கிழட்டு நரியாக இருந்த ஜே.ஆர், அரசியல் கற்றுக்குட்டியாக இருந்த ரஜீவ் காந்தியை, சரியான சந்தர்ப்பம் பார்த்து தனது வலைக்குள் சிக்கவைத்துவிடலாம் என்று திட்டமிட்டு செயலாற்றிவந்தார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினால் புலிகளை முறியடிப்பது கடினம் என்பதை, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஒரு தடவை ஜே.ஆர். தெரிவித்திருந்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தம் தொடர்பாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த அமைச்சர்கள் மத்தியில் இதனை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.


12.08.1987 அன்று உடன்படிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு என்று ஜே.ஆர். ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். பிரதம மந்திரி பிரேமதாசா, பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, காமினி திஸாநாயக்க, காமினி ஜெயசூரிய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தன, பாதுகாப்புத்துறை அமைச்சின் செயலாளர் சேபால ஆட்டிக்கல, கூட்டுப்படைகளின் தலைமை கட்டளை அதிகாரி ஜெனரல் சிறில் ரணதுங்க, உட்பட பல முக்கிய பிரமுகர்கள் அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
யுத்தத்தின் முலம் புலிகளை வெல்ல முடியாது என்ற உண்மையை அங்கு ஜே.ஆர். வெளிப்படுத்தி இருந்தார்.
‘ஒப்பரேசன் லிபரேசன்| படை நடவடிக்கையின் போது ஸ்ரீலங்காவின் கூட்டுப்படை தளபதியாக இருந்த ஜெனரல் சிறில் ரணதுங்கவை, யாழ் இராணுவ நிலவரம் பற்றி விளக்கம் அளிப்பதற்கு ஜே.ஆர். பணித்தார்.

பேசுவதற்கு எழுந்த ஜெனரல் சிறில் ரணதுங்க, பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்களுடன்; அங்கு அமர்ந்திருந்த அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் அமைதியாக ஒரு முறை பார்த்தார். பெருமூச்சொன்றை விட்டபடி, வடபகுதி இராணுவ நிலமைகளை ஒவ்வொன்றாக மிக நிதானமாக தெரிவிக்க ஆரம்பித்தார்:
ஷஷயாழ் நகரை ஸ்ரீலங்காப் படைகளால் முழுமையாகக் கைப்பற்ற முடியாமல் போனதற்கு, எம்மிடம் போதிய படைப்பலம் இல்லாமையே பிரதான காரணம். யாழ் நகரை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, எமது இராணுவத்தினருக்கு மேலும் நான்கு பட்டாலியன்கள் தேவையாக இருந்தது. அடுத்ததாக யாழ் நகரில் எமது இராணுவம் மற்றொரு பிரச்சனையையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. நகரை கைப்பற்றுவது ஒரு புறம் இருக்க, அதனை தக்கவைத்துக்கொள்வதில் எமக்கு பாரிய சிக்கல்கள் பல இருந்தன. இதற்கு மேலதிகமாக எமக்கு 4000 துருப்புக்கள் தேவையாக இருந்தது.
வடமாராட்சி நடவடிக்கைகளின் போது நாம் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. பருத்தித்துறையை நாம் கைப்பற்றிய போது, நாள் முழுவதும் புலிகளின் மோட்டார் தாக்குதல்களை நாம் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. புலிகளுக்கு அந்தப் பிரதேசத்தின் மூலைமுடுக்குகளெல்லாம் அத்துபடியாக இருந்ததால், எம்மீது கெரில்லாத் தாக்குதல்களை மேற்கொள்ளுவது அவர்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது. அதேவேளை அதனை எதிர்கொள்வதற்கு எமது தரப்பில் நாங்கள் அதிக விலைகொடுத்தாகவேண்டி இருந்தது.

ஒரு வேளை எமது படைகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி இருந்தால், யாழ் நகரைச் சூழ உள்ள பகுதிகளில் இருந்து எம்மைக் குறிவைத்து மோட்டார் தாக்குதல்களை புலிகள் தொடர்ந்து மேற்கொண்டிருப்பார்கள். அதில் இருந்து படையினரின் நடமாட்டத்தையும், போக்குவரத்தையும் காப்பாற்ற எமக்கு அதிக அளவில் கவச வாகனங்கள் தேவைப்பட்டிருக்கும். ஆனால் அந்த வசதிகள் எம்மிடம் போதிய அளவு இல்லை. அத்தோடு, யாழ் நகரில் நிலைகொள்ளும் எமது படையினருக்கு உணவு வினியோகத்தை பலாலியில் இருந்தே நாம் மேற்கொள்ளவேண்டும். அதற்கு மேலதிகமாக எமக்கு இரண்டு பட்டாலியன்கள் தேலையாக இருந்தது. இந்தப் பகுதியின் ஒவ்வொரு அங்குலம் பற்றியும் புலிகள் நன்கு தெரிந்து வைத்துள்ளதால், அவர்களால் எம்மீது எப்படியான தாக்குதல்களையும் மேற்கொள்ள முடியும்.
யாழ் நகர் மீது எம்மால் முடிந்த அளவிற்கு நாம் தாக்குதல்களை நடாத்தியிருந்தோம். ஆனால் அங்கு நாம் நிலைகொள்ள எத்தனிக்கவில்லை. எனெனில் அதில் பாதகமான விடயங்கள் நிறைய உள்ளன. அடுத்ததாக இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதிலும் பலத்த சவால்களை நாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இப்படியான பாதகமான அம்சங்களை வைத்துக்கொண்டு யாழ் நகரைக் கைப்பற்றும் நடவடிக்கைளில் நாம் இறங்கியிருந்தால், பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பாhகள். அத்தோடு யாழ்பாணத்தின் ஒரு பகுதியை மட்டுமே எம்மால் கைப்பற்ற முடிந்திருக்கும் என்பதுடன் அதற்காக பெரும் விலையையும் நாம் செலுத்த வேண்டி இருந்திருக்கும்.
மிக முக்கியமாக வடமாராட்சி நடவடிக்கைகளின் போது புலிகள் எம்மீது பிரயோகித்த போர் உபாயங்கள் எமக்கு மிகவும் புதியவைகளாகவே இருந்தன. கட்டிடங்களினுள்ளும், வீடுகளிலும் புலிகள் மிதி வெடிகளையும், கன்னி வெடிகளையும் புதைத்திருந்தார்கள். வீடொன்றுக்குள் சென்ற எமது படைவீரன் ஒருவன் மின் இணைப்பிற்கான ‘சுவிட்ச்| ஒன்றை போட்ட போது, வீடே தகர்த்தெறியப்பட்டு அவன் மீது விழுந்தது. அந்த இடத்திலேயே அவன் கொல்லப்பட்டான். இது போன்ற

பல பொறிகள் யாழ் நகரிலும் புலிகளால் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு நிலையில் யாழ் நகருக்குள் செல்வது என்பது பயனற்ற ஒரு நடவடிக்கையாகவே இருந்திருக்கும்.
எமது நடவடிக்கையின் இறுதியில் எமது விமானம் ஒன்று புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து எமது விமானிகள் அங்கு செல்வதற்கு அச்சம் கொண்டுள்ளதுடன், யாழ் செல்ல மறுப்புத் தெரிவித்தும் வருகின்றார்கள். அத்தோடு, எமக்கு வினியோகத்திலும் பலத்த பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.||
இவ்வாறு ஜெனரல் சிறில் ரணதுங்க யாழ்பாணத்தின் யதார்த்த நிலையை விளக்கிய பொழுது, அங்கு ஈ ஆடவில்லை. அமைச்சர்கள் அனைவரும் மிகவும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் தவித்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜே.ஆர். பேச எழுந்தார். தனது அரசியல் காய் நகர்த்தல்கள் பற்றிய விபரத்தை ஒவ்வொன்றாக, நிதானமாக, வெளிப்படுத்தினார். ஸ்ரீலங்காப் படைகளின் இயலாமையையும், இந்தியாவைக் கொண்டே ஈழப்போராட்டத்தை அடக்கவேண்டிய அவசியத்தையும் விளக்கிய அவர், அதுதான் அரசியல் சானக்கியம் என்பதையும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவைக் கொண்டே புலிகளை செயலிழக்கச் செய்வதற்கான அனைத்து பொறுப்புக்களையுத் தன்னை நம்பி ஒப்படைத்துவிடும்படி அவர் அமைச்சர்களை கேட்டுக்கொண்டார். ஜே.ஆரின் அரசியல் காய்நகர்த்தல்கள் பற்றி அமைச்சர்களுக்கு போதிய நம்பிக்கை இருக்கவே செய்தது. நிலமைகளை ஓரளவு புரிந்து கொண்ட அமைச்சர்கள், நிலமையை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் ஜே.ஆரின் திட்டத்தில் நம்பிக்கை கொண்டதுடன், புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் சிண்டு முடிக்கும் நல்ல சந்தர்ப்பம் ஒன்றிற்காக காத்திருக்க புறப்பட்டார்கள்.

இந்தியாவையும், புலிகளையும் பிரித்துவிடும் சந்தர்ப்பங்கள் விரைவிலேயே அடுத்தடுத்ததாக வந்தன.
ஸ்ரீலங்காவின் சூழ்சிக்கு இந்தியா, தெரிந்துகொண்டே பலியானது. ஸ்ரீலங்காவைத் திருப்திப்படுத்துவதற்காக இந்தியா ஈழத் தமிழர்களைக் கைவிட்ட ஆரம்பித்தது.
இது, ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய துரோகம் என்பதில் சந்தேகம் இல்லை.

பகிரல்

கருத்தை பதியுங்கள்