தமிழ் மண்ணை நனைத்த சிங்கள இரத்தம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-37) – நிராஜ் டேவிட்

இறந்தவர் உடல்களில் காயங்கள்?
குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் மரணமடைந்த செய்தி மக்கள் மத்தியிலும், விடுதலைப் புலி போராளிகள் மத்தியிலும் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரு தொகுதி மக்கள் மத்தியில் சோகம், இயலாமை போன்ற உணர்வுகள் ஏற்பட்டிருந்த போதிலும், பெரும்பாண்மையான தமிழ் மக்கள் மத்தியில் பயங்கரமான கோப உணர்வு ஏற்பட்டிருந்தது.
தமது போராளிகள் அநியாயமாக இறக்க நேரிட்டது பற்றி தமிழ் மக்கள் மிகுந்த அச்சம் கொண்டார்கள்.
அதேவேளை, சயனைட் உட்கொண்டு தம்மை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்ட போராளிகள் சிலரது உடல்களில் காயங்கள் காணப்பட்டதாக வெளிவந்திருந்த செய்தியும் தமிழ் மக்களை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது.
குறிப்பாக புலேந்திரனின் உடலின் முதுகுப் புறத்திலும், பின் கழுத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டிருந்தன. துப்பாக்கி முனையில் பொருத்தப்படும் ‘பயனைட்| என்ற கத்தியினால் புலேந்திரன் குத்தப்பட்டதாக விடுதலைப் புலிப் போராளிகள் மிகுந்த சினத்துடன் தெரிவித்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்ட போராளிகளை உயிருடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லமுடியாத தமது இயலாமையை, ஸ்ரீலங்காப் படையினர் அவர்களின் உயிரற்ற உடல்களின் மீது காண்பித்திருந்தார்கள்.
மாவீரர்களின் இறுதி ஊர்வலத்தின் போதே, போராளிகளின் உடல்கள் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களின் கத்திக்குத்துக்களுக்கு இலக்கான கதை பொதுமக்கள் மத்தியிலும், போராளிகளிடையேயும் பரவியிருந்தது. மரணச் சடங்குகள் முடிவடைந்ததும் மக்களினதும், சக போரளிகளினதும் சோகம் கோபமாக மாற ஆரம்பித்தது.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளியான தினசரிகள் அனைத்துமே, மிக அண்மையில் திருமணமான குமரப்பா, புலேந்திரன் போன்றோரது திருமண புகைப்படங்களை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த தமிழ் மக்களின் மனங்கள் ஏற்கனவே கணன்றுகொண்டிருந்தது. மரணமடைந்தவர்களது உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து மக்கள் தமது கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள்.
அடுத்த சில நாட்கள், வடக்கு-கிழக்கு இரத்தமயமாகக் காட்சியளித்தது.

இரத்தம் தோய்ந்த நாட்கள்:
வல்வெட்டித்துறையில், இறந்த 12 போராளிகளினதும் மரணச் சடங்கு முடிந்து, மிகுந்த கோபத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிலரது கண்களில் ஒரு சிங்கள இராணுவ வீரன் தென்பட்டான். மதுபாணச் சாலை ஒன்றில் மது அருந்துவிட்டு நிறை போதையுடன் வெளிவந்த அந்தச் சிங்களப் படை வீரனைக் கண்டதும், ஏற்கனவே ஸ்ரீலங்காப் படையினர் மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்த அந்தக் கூட்டத்தினருக்கு மிகுந்து எரிச்சல் ஏற்பட்டது.
‘சிங்கள நாய்கள்.. எங்கள் ஊருக்குள்ள வந்து எங்கட பொடியளிலையோ கைவைக்கிறியள்?..| என்று கேட்டபடி ஒரு பெரியவர் அந்த இராணுவ வீரரை தாக்க ஆரம்பித்தார். அந்தக் கூட்டத்தில் வந்தவர்களும் பெரியவருடன் சேர்ந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில் அந்த இராணுவ வீரன் உணச்சிவசப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தின் கோபத்திற்கு பலியானான்.

விடுதலைப் புலி உறுப்பினர்களும் ஸ்ரீலங்காப் படையினர் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தார்கள். தமது முக்கிய தளபதிகள் உட்பட 12 போராளிகளினதும் மரணங்களின் காரணமாக, அவர்களது உச்சக்கட்ட கோபம் ஸ்ரீலங்காப் படையினர் மீது திரும்பியிருந்தது.
கொல்லப்பட்ட படையினர்:
6ம் திகதி காலை யாழ் பஸ் நிலையத்தின் முன்னால் 8 ஸ்ரீலங்காப் படைவீரர்களின் உடல்கள் போடப்பட்டிருந்தன. அவர்களது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன.
ஏற்கனவே சண்டையொன்றின் போது புலிகளினால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 ஸ்ரீலங்காப் படையினரின் உடல்களே அவை.


புலிகளின் எல்லை கடந்த கோபம் ஸ்ரீலங்காப் படையினரை நோக்கித் திரும்பியிருந்ததை அது வெளிப்படுத்தியது.
அவலத்தைத் தந்தவனுக்கே அதனைத் திருப்பிக்கொடுக்கும் பாணியைப் புலிகள் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. நியாயமான யுத்த முறைகள் எதனையும் ஸ்ரீலங்காப் படையினர் கடைப்பிடிக்க மறுத்ததுடன், நேர்மையான யுத்த வழிமுறைகள் எதனையும் பின்பற்றும் பக்குவத்தையும் ஸ்ரீலங்காப் படையினர் இழந்து, அக்காலத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் ஸ்ரீலங்காப் படையினரின் பாணியில் செயற்பட்டால் மட்டுமே புலிகளின் போராட்டத்தின் பாஷையை அவர்களுக்கு புரியவைக்கமுடியும்; என்பதைப் புலிகள் உணர்ந்துகொண்டு, அந்த முறையிலேயே பதில் கொடுக்கவும் ஆரம்பித்திருந்த காலம் அது.
அந்தவகையில், 8 ஸ்ரீலங்காப் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் மூலம் புலிகள் தமது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். இது ஸ்ரீலங்காப் படையினருக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக நெல்லியடியில் புலிகள் தமது முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடாத்தி மூன்று மாதங்களே கடந்துவிட்டிருந்தது. புலிகளின் கோபம் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் வடிவத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீலங்காப் படை முகாம்களின் மீது நடைபெற்றுவிடலாம் என்ற அச்சம் ஸ்ரீலங்காப் படைத்துறைத் தலைமையினிடையே ஏற்பட்டிருந்தது. புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் விழைவு எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீலங்காப் படையினர் அனுபவவாயிலாக நன்றாகவே அறிந்திருந்தார்கள். எனவே தமது முகாம்களை புலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு இந்தியப்படையினரிடம் அவர்கள் உதவி கோரினார்கள். ஜே.ஆர். இனது வேண்டுகோளின்படி, ஸ்ரீலங்காப் படையினரின் முகாம்களைப் பாதுகாக்கும் பணிப்புரை இந்தியப்படைகளுக்கு தீட்ஷித்தினால் வழங்கப்பட்டது.
இது விடுதலைப் புலிகளை மேலும் சினமூட்டியது.
தமது போராளிகளுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்திருந்த இந்தியப்படை, ஸ்ரீலங்கா படையினருக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்ததைக்கண்டு விடுதலைப் புலிகள் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்கள்.
அடுத்த சில தினங்களில் பொதுமக்களுடன் இனைந்து சில விடுதலைப் புலி உறுப்பினர்களும், தமது கோபத்தை சிங்களப் படையினருக்கும், சிங்கள மக்களுக்கும் எதிராகத் வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.


சிங்கள இரத்தத்தால் நனைந்த தமிழ் மண்:
காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளர் ஜெயமண்ண மற்றும் உதவி முகாமையாளர் கஜநாயக்க போறோர் விருந்தினர் விடுதி ஒன்றில் ‘உற்சாக பாணம்| அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் உள்ளூர் பொறியியலாளர்களான சோதிலிங்கம், வேலாயுதம் போன்றோரும் இருந்தார்கள்.
தமிழ் தேசமே சோகத்தில் மூழ்கி இருக்கையில் இவர்கள் விருந்து உட்கொண்டு மகிழும் விடயம் சில இளைஞர்களுக்கு சினத்தை ஏற்படுத்தி இருந்தது. ஷபுலேந்திரன் இறந்ததை, சில சிங்களவர்கள் விருந்து வைத்துக் கொண்டாடி மகிழ்வதாக| செய்தி பரவியதைத் தொடர்ந்து, ஆதிரம் கொண்ட ஒரு கூட்டம் விருந்தினர் விடுதியைச் சூழ்ந்துகொண்டது.
இரண்டு சிங்கள அதிகாரிகளும் வெளியில் இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார்கள். மறுநாள் அவர்களிருவரது உடல்களும் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் முன்பாக கிடந்தன. அவர்களுடம் இணைந்து விருந்துண்ட தமிழ் பொறியியலாளர்களும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.
சுன்னாகத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. சுன்னாகத்தில் பேக்கறி வைத்திருந்த ஒரு சிங்கள முதலாளி, ‘போராளிகளை ஸ்ரீலங்காப் படையினர் கைது செய்தது சரியே| என்று உள்ளூர்வாசிகளுடன் விவாதம் நடாத்திக்கொண்டிருந்தார். ஏற்கனவே பலவித உணர்ச்சிகளுடன் காணப்பட்டிருந்த இளைஞர்களுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது. வாய்த்தர்க்கம் வன்செயலாக வடிவெடுத்தது. இறுதியில் அந்த பேக்கரி உரிமையாளர் கொலைசெய்யப்பட்டார்.
தமிழ் பிரதேசங்கள் முழுவதும் வன்முறை வெடித்தது. 83ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தமிழ் மக்களின் மனங்களில் பல ஆண்டுகளாகக் கனன்றுகொண்டிருந்தது. அதற்குப் பதில் வழங்கச் சரியான ஒரு தருணம் இதுவென்று பல இளைஞர்கள் பேசிக்கொண்டார்கள். தமது போராளிகளை அனியாயமாகச் சாகடித்துவிட்ட சிங்களவர்களைப் பலிவாங்கவென்று மேலும் பல இளைஞர்கள் புறப்பட்டார்கள்.
அடுத்த சில தினங்கள், தமிழ் பிரதேசங்கள் எங்கும் இரத்த வெள்ளமாக காட்சி தந்தன.
ஆனால், இம்முறை சிந்தப்பட்ட இரத்தம் தமிழருடையது அல்ல. காலாகாலமாகவே தமிழர்கள் சிந்திய குருதியினால் நனைந்து வந்த தமிழ் மண்ணை, முதல்முறையாக சிங்கள இரத்தம் செந்நிறமாக்கியது.

பகிரல்

கருத்தை பதியுங்கள்