இந்தியப் படை ஜவான்கள் புறப்பட்டார்கள் – மனித வேட்டைக்கு

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-62) – நிராஜ் டேவிட்

யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்ட பவான் இராணுவ நடவடிக்கையின் நகர்வுகள் அனைத்துமே புலிகளின் கடுமையான இடைமறிப்புத் தாக்குதல்களினால் பலத்த நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன.
இந்தியாவினதும், இந்திய இராணுவத்தினதும், இந்திய அரசியல் தலைமைகளினதும் மானமும், மரியாதையும், இந்தியத் துருப்புக்கள் எப்படியாவது யாழ்பாணத்தைக் கைப்பற்றிவிடுவதிலேயே தங்கியிருந்தது. என்ன விலை கொடுத்தாவது, எதைச் செய்தாவது யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற உத்தரவுகள் களத்தில் இருந்த படை அணிகளுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தன.
இந்தியப் படையினரின் நகர்வுகள்:
அக்டோபர் 11ம் திகதி நாவற்குழியில் தரையிறக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் 18வது காலாட் படைப்பிரிவின்(18 Infantry Brigade) 4வது மராத்தியப் படையணி கோப்பாய் வடக்கை நோக்கி நகர்வதற்கு முயன்றபோதும், ஏழு தடவைகள் அந்தப் படையணி புலிகளின் பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. அதனைத் தொடர்ந்து, தமது நகர்வுகளை தற்காலிகமாக இடை நிறுத்திக் கொண்டு, பின்னர் 13ம் திகதியே மீண்டும் முன்னேற ஆரம்பித்திருந்தது.
இந்த அணி, 13ம் திகதி கோப்பாய் தெற்கு வழியாக முன்னேற முயன்ற போதும் கடுமையாக எதிர்ப்பைச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் முன்னேறிய அணி வெடிமருந்து கையிருப்பு தீர்ந்த நிலையில் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கையில், முன்னேறிய அணியைப் பின்தொடர்ந்த அந்தப் படைப்பிரிவின் நான்காவது ரைபிள் கொம்பணி (fourth rifle company) மிகவும் கஷ்டப்பட்டு முற்றுகைக்குள்ளாகியிருந்த படைப்பிரிவை மீட்டது. அப்படி இருந்தும் அவர்களால் நாவற்குழிக்கு மேற்காக சுமார் மூன்று கி.மீற்றர் மட்டுமே நகர முடிந்தது. தொடர்ந்து சண்டையிட்டபடி நிலை கொண்டிருந்த அந்தப் படைப்பிரிவினரால் 20 திகதி அளவில்தான் யாழ் நகரை நோக்கி மேலும் முன்னேறிச் செல்லக் கூடியதாக இருந்தது.

இதேபோன்று, சுன்னாகம் வழியாக முன்னேறிய 91வது காலட் படைப் பிரிவின் (91 Infantry Brigade) 5வது மெட்ராஸ் ரெஜிமென்ட் (Madras Regiment) சுன்னாகம் வழியாகவும், 8வது மராத்திய படைப்பிரிவு நாவாந்துறை வழியாகவும் முன்னேறின. இந்தப் படை அணியின்; முதலாவது மராத்திய படைப்பிரிவு கடல் வழியான தரையிறக்க முயற்சிகள் சிலவற்றை மேற்கொண்ட போதும், புலிகளின் கடுமையான எதிர்ப்புகள் காரணமாகவும், தரையிறக்கப் பிரதேசங்களில் கன்னிவெடிகள் அதிக அளவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாகவும், அந்த முயற்சிகள் இடை நடுவே கைவிடப்பட்டன.
யாழ் நகரை நோக்கிய நகர்வின் போது அதிக இழப்புக்களைச் சந்தித்த அணி இது என்றே கூறப்படுகின்றது. இந்த பிரிகேட்டில் அங்கம் வகித்த 5வது மெட்ராஸ் அணியே இறுதியில் சுண்ணாகம் பிரதேசத்தைக் கைப்பற்றியிருந்தது. தமிழர்களை அதிகமாகக் கொண்ட இந்தப் படைப்பிரிவு தனது முன்னேற்ற நடவடிக்கைகளின் போது கூடியவரை பொதுமக்கள் இழப்புக்களைக் குறைத்தபடியே முன்;னேறியது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த அணியுடன் இணைந்து கொண்ட 8வது மராத்திய அணி, அப்பிரதேசத்தில் பாரிய மனித வேட்டையில் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது

இதேபோன்று சண்டிலிப்பாயில் இருந்து 41வது காலட் பிரிவும்(41 Infantry Brigade) புதூர் வழியாக 115வது காலாட் படைப் பிரிவும்( 115 Infantry Brigade) நகர்வினை மேற்கொண்டிருந்தன. புலிகளின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும், மற்றய படைப் பிரிவுகள் முற்றுகைக்குள்ளாகும் பட்சத்தில் அந்தப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து முற்றுகையை உடைப்பதற்குமே இந்த அணிகள் களம் இறக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டு படைப்பிரிவுகளும், ஒரு பாதையால் யாழ் நகரை நோக்கி முன்னேறாது, பல திசைகளிலும் வழைந்து நெளிந்து தமது நகர்வினை மேற்கொண்டிருந்தன.
களமிறக்கப்பட்ட புதிய படை அணிகள்:
புலிகளுடனான யுத்தம் நினைத்ததைவிட மிகக் கடுமையாக இருந்ததால், இந்தியாவில் இருந்து அவசர அவசரமாக பல படை அணிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தன.
72வது காலாட் படைப்பிரிவு (HQ 72 Infantry Brigade)4/5 GR (FF) படைப்பிரிவு, மற்றும் 13வது சீக்கிய இலகு காலாட் படைப்பிரிலு (13 Sikh Light Infantry) போன்றன பலாலிக்கு கொண்டுவரப்பட்டு, களம் இறக்கப்பட்டன.
இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாகவோ, அல்லது இந்திய அமைதிகாக்கும் பணி தொடர்பாகவே எந்தவித விளக்கமும் கொடுக்கப்படாது ஈழமண்ணில் தரையிறக்கப்பட்ட இந்தப் புதிய படை அணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்துடன் இணைந்து யாழ் நகரை நோக்கி முன்னேற ஆரம்பித்தன. அவர்களது கண்களில் தென்பட்டவர்கள் அனைவருமே புலிகளாகவே அவர்களுக்குத் தெரிந்தார்கள். அவர்கள் சென்ற பிரதேசங்கள் அனைத்துமே எதிரியின் கோட்டைகளாகவே அவர்களுக்கு தென்பட்டன. வசாவிளான் வழியாக முன்னேறிய இந்தப் படைப்பிரிவு நீர்வேலி, உரும்பிராய் பிரதேசங்களில் அதிக மனித வேட்டைகளை நடாத்தியபடி நகர்ந்தன.


யுத்தக் கல்லூரிகள்:
இதேவேளை, யுத்த நகர்வுகள் பற்றி போதிய அறிவை இந்தியப் படை ஜவான்களுக்கு வழங்கும் முகமாக, பலாலி மற்றும் திருகோணமலைத் தளங்களில் அவசர அவசரமாக இரண்டு யுத்தக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு டிவிசன்களான 54வது காலட் படை அணி(54 Infantry Division) மற்றும் 36வது காலட் படை அணி(36 Infantry Division) என்பன இந்த யுத்தக் கல்லூரிகளை நிறுவியிருந்தன. புதிதாக தரையிறக்கப்படும் படை அணிகளுக்கு இலங்கையின் பிரதேசங்கள், தரை அமைப்பு பற்றியும், புலிகள் பற்றியும், அவர்களது போர் நுனுக்கங்கள், நடவடிக்கைகள் பற்றியும் இந்த யுத்தக் கல்லூரிகளில் போதிக்கப்பட்டன. கன்னி வெடிகளை எதிர்கொள்ளுவது எப்படி, புலிகள் எப்படியெப்படியெல்லாம் தாக்குதல் நடாத்துவார்கள், எப்படியெப்படியெல்லாம் செயற்படுவார்கள் என்ற நடைமுறை விளக்கங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இதுபோன்ற பயிற்சிகளின் பின்னரே புதிதாக இலங்கை வரும் இந்தியப் படையினர் களம் இறக்கப்படவேண்டும் என்பது இந்தியத் தலைமையின் உத்தரவாக இருந்தது.
அவசரஅவசரமாக இலங்கை வந்திறங்கும் புதிய இந்தியப் படை அணிகள், அடிதடியாக முன்னேறி புலிகளிடம் தொடர்ந்து வாங்கிக்கட்டிக்கொண்டிருந்ததால், இந்தியப் படைத்துறைத் தலைமை இத்தகைய ஏற்பாடுகளை செய்திருந்தது.


புதிய பிரதேசம் ஒன்றினுள் யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளுவது என்று கல்லூரி அமைத்துப் பாடம் நடாத்தத் தெரிந்த இந்தியத் தலைமைக்கு, அந்தப் பிரதேசத்தினுள் காணப்படும் அப்பாவிச் சனங்களை இம்சிக்கக்கூடாது என்ற பாடத்தை தமது ஜவான்களுக்கு போதிக்கவேண்டும் என்று தோன்றவில்லை. அப்பாவித் தமிழ் மக்களை இம்சிக்கக்கூடாது என்று அவர்கள் அமைத்த யுத்தக் கல்லூரிகளில் சொல்லிக்கொடுக்கவில்லை.
அதேவேளை, படையினர் தமது உணர்வுகளுக்கு தாமே வடிகால்களைத் தேடிக்கொள்வது பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என்றும் இந்தியப் படைத்துறைத் தலைமை நினைத்திருந்தது. ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் போது, ஆக்கிரமிப்புப் படைகள் கொலைகள் புரிவதும், கொள்ளை அடிப்பதும், பாலியல் வல்லுறவு புரிவது சகஜம் என்றே இந்தியப் படைத்துறைத் தலைமை நினைத்திருந்தது. அதனால் இதுபோன்ற தீய செயலை செய்யக்கூடாது என்று தமது ஜவான்களுக்குப் போதிக்க அவர்கள் நினைக்கவில்லை. அவ்வாறு ஆலோசனை வழங்கி தமது ஜவான்களின் உற்சாகத்திற்கு கடிவாளம் போட அவர்கள் விரும்பவும் இல்லை.
ஈழ மண்ணில் புதிதாக வந்திறங்கிய இந்தியப் படை ஜவான்கள், யுத்தக் கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சியை முடித்துவிட்டு, “ஜெய்-ஹிந்|| என்ற கோஷத்துடன் உற்சாகமாப் புறப்பட்டார்கள் – மனித வேட்டைக்கு.

தொடரும்…

பகிரல்

கருத்தை பதியுங்கள்