இந்திய இராணுவம் மேற்கொண்ட இரகசிய நடவடிக்கைகள்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-93) – நிராஜ் டேவிட்

80களின் பிற்பகுதியில் இந்தியப் படைகள் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதி.
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் துருப்புக்கள், இந்தியாவின் முப்படைகள், ஆயிரக்கணக்கான இந்தியச் சார்பு தமிழ் ஆயதக்குழுக்கள் என்பன, தமிழீழ மக்கள் மீது பாரிய ஆக்கிரமிப்பொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
தமிழீழம் ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் கைதிகளாகவே நடத்தப்பட்டார்கள். வகைதொகையின்றி தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்கள். கொள்ளைகள், கொலைகள் பரவலாகவே இடம்பெற்றுக் கொண்டிருந்தன.
இப்படி பல காரியங்கள் ஒரு பக்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், மறுபக்கத்தில் மற்றொரு முக்கியமான காரியத்தை இந்தியப் படையின் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தார்கள்.
மிகவும் இரகசியமாக, அதேவேளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைக்; குறிவைத்து பரந்த அளவில் இந்தக் காரியத்தை அவர்கள் செய்துகொண்டிருந்தார்கள்.

கஞ்சாச் செய்கை.
வடக்கு கிழக்கு முழுவதிலும் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் கஞ்சா விதைகளை தூவி, கஞ்சா செடிகளை உருவாக்கும் காரியத்தைத்தான் அவர்கள் அதிசிரத்தையுடன்; செய்துகொண்டிருந்தார்கள்.
வடக்கு கிழக்கில் உள்ள கிராமங்களிலும், காடுகளிலும் இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான கஞ்சாச் செடிகளை இந்தியப் படைகள் உருவாக்கினார்கள்.

இந்திpயப் படைகள் வடக்கு கிழக்கில் கஞ்சாச் செடிகளை இத்தனை ஆர்வமாக உருவாக்குவதற்கு காணம் என்ன ?

அப்பொழுது இந்த விடயத்தைப் பற்றி தமிழ் மக்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்ளவில்லை. அக்காலகட்டத்தில் இந்தியப் படை ஜவான்கள் ஈழத்தில் பல வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள். வெளிநாட்டு மின்சார உபகரணங்களை மலிவு விலையில் கொள்வனவு செய்து இந்தியாவிற்கு கொண்டு செல்வது முதல், நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த பாரிய மரங்களை வெட்டி இந்தியாவிற்கு கொண்டு செல்வது வரை, பல வியாபார நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள். கஞ்சா செடிகளை உருவாக்கி கஞ்சாவை இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காகவே இந்தியப் படையினர் கஞ்சா செய்கையில் ஆர்வம் காண்பிப்பதாக நினைத்து தமிழ் மக்கள் இந்த விடயத்தில் அத்தனை ஆர்வம் காண்பிக்கவில்லை.
ஆனால் ஈழத்து இளைஞர்கள் மத்தியில் கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே, இந்தியா இத்தகைய கைங்காரியத்தைச் செய்து வருகின்றது என்று பாவம் எமது மக்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

கேவலமான சதி:
தமிழர் பிரதேசங்களில் இந்தியப் படைகள் கஞ்சா செடிகளை வளர்த்ததற்கு பல காரணங்கள் இருந்தன.
முதலாவது, தமிழ் மக்களை கஞ்சா வியாபாரம் செய்வதற்குத் தூண்டுவது. யுத்த நிலை காரணமாக அக்காலகட்டத்தில் பல தமிழ் விவசாயக் குடும்பங்கள் பொருளாதார இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். நல்ல வருமானமுள்ள ஒரு தொழிலாக கஞ்சா வியாபாரத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயக் குடும்பங்களை, கஞ்சாப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுத்தமுடியும் என்று இந்தியத் தரப்பினர் நினைத்திருக்கலாம்.

ஆனால், இந்தியப் படையினர் வடக்கு கிழக்கு மாகாணத்தில் கஞ்சா பயிர்ச் செய்கையை பாரிய அளவில் மேற்கொள்ளுவதற்கு, மேற் கூறப்பட்டதை விட மற்றொரு மற்றொரு முக்கிய நோக்கம் அவர்களுக்கு இருந்ததாக பின்நாட்களில் விடுதலைப் புலிகள் குற்றம ;சுமத்தியிருந்தார்கள். வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்களை கஞ்சாப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் ஒரு கேவலமான நோக்கம் இந்தியாவிடம் காணப்பட்டதாக புலிகள் தெரிவித்திருந்தார்கள்.
கஞ்சா புழக்கம் தமிழ் பிரதேசங்களில் அதிகமாக, அதிகமாக, தமிழ் இளைஞர்கள் கஞ்சாவைப் புகைக்க ஆரம்பிப்பார்கள். படிப்படியாக கஞ்சாப் பழக்கம் தமிழ் இளைஞர்களிடையே பரவிவிடும்.

கஞ்சா புகைப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எம்மில் அனேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கும். எதற்கும் கவலைப்படாமல், அனைத்திற்குமே சிரித்தபடி, ஒருவித போதை மிதப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு கோபம் என்பது ஒருபோதும் வராது. எந்தவித உணர்ச்சியும் ஏற்படாது. எப்படியான நிகழ்வுகளும் அவர்களைப் பாதிக்காது. ஒரு முறை கஞ்சாவை உட்கொண்டவர்கள், தொடர்ந்து கஞ்சாவை உள்கொள்ளும்படியான போதைக்கு அடிமைகளாக மாறிவிடுவார்கள். இதுதான் கஞ்சாவின் மகிமை.

இப்படிப்பட்ட போதைக்கு, தமிழ் இளைஞர்களை அடிமையாக்க இந்தியா ஏன் விரும்பியது?

சிதைக்கும் நோக்கம்:
ஈழத்தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்ச்சிகளை அழிக்க இந்தியா விரும்பியது. எதிர்கால ஈழத் தமிழ் சந்ததியினரை, தமது இனம் சார்ந்த எந்தவித பிரஞ்சையும் இல்லாத ஒரு சந்ததியாக உருவாகவேண்டும் என்று இந்தியா திட்டமிட்டது. தனது இந்த கேவலமான சதியின் ஒரு நகர்வாகத்தான், இந்தியத் தரப்பினர் தமிழீழப் பிரதேசங்களில் கஞ்சாச் செடிகளை இலட்சக்கணக்கில் உருவாக்கியிருந்தார்கள்.
இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகள், தற்பொழுது கூட வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இந்தியப் படையினர் உருவாக்கியிருந்த கஞ்சாச் செடிகளை அழிக்க, இந்தியப் படையின் வெளியேற்றத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் வனவளத்துறை கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்ததாக புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஒருதடவை ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார். மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சண்டைகள் அதிகம் இடம்பெறும் பிரதேசங்களான வாகநேரி, பொண்டுகள்சேனை, காயங்கேணி, குளத்துமேடு போன்ற பிரதேசங்களில் இந்தியப் படையினர் விதைத்த இலட்சக்கணக்கான கஞ்சாச் செடிகள் இப்பொழுதும் இருக்கத்தான் செய்கின்றன.

முகாம்களிலும்:
தமிழ் இளைஞர்களிடையே போதைப் பழக்கவழக்கத்தை உருவாக்கும் நோக்குடன் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த நடவடிக்கையின் மற்றொரு பக்கம், அக்காலங்களில் இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக் குழக்களின் முகாம்களில் அரங்கேறியிருந்தது. தமிழ் குழுக்களது முகாம்களுக்கு இந்திய ‘ரம்’ மதுப்புட்டிகள் பெட்டி பெட்டியாக வினியோகிக்கப்பட்டன. தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் இந்தியாவின் விஷேட மதுபானமான ரம் இற்கு அடிமையாகியிருந்தார்கள். அத்துடன் வெற்றிலை பாக்குடன் ஒரு வகைப் போதை வஸ்தை கலந்து தயாரிக்கப்படும் ‘பாண் பராக்’ எனப்படும்- மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பொருளுக்கும், தமிழ் ஆயுதக் குழுக்களில் அங்கம் வகித்த இளைஞர்களில் பலர் திட்டமிட்டு அடிமையாக்கப்பட்டிருந்தார்கள்.

பங்காளதேஷிலும்….
இந்த கஞ்சாச் செடி வளர்க்கும் சதியை இந்தியா ஈழத்தில் மட்டும் அரங்கேற்றியிருக்கவில்லை. ஏற்கனவே பங்காளதேஷை விடுவிக்கவென்று இந்தியப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்த காலத்திலும், இதே வகையான பயிர் வளர்ப்பை அங்கு மேற்கொண்டிருந்தார்கள். ஈழத்தைப் போலல்லாது பங்காளதேஷில் இந்தியா தனது சதியின் பயனை அறுவடைசெய்து வருகின்றது. முன்னர் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்த பங்கானதேஷ் நாட்டின் இன்றைய தலைமுறையினரில் அதிகமானவர்கள் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள். பங்காளதேஷின் இளம் தலைமுறையினரிடையே இன்று புரையோடிக் காணப்படும் போதை வஸ்துப் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்பதற்கு அந்நாட்டு அரசு இன்றைக்கும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் விடுதலைப் போராட்டம் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நாகலாந்து, மனிப்பூர் மாநிலங்களிலுள்ள காடுகளிலும், கிராமங்களிலும் கூட இந்தியப் படைகள் கஞ்சாப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதும் நோக்கத்தக்கது.

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்