இந்தியா பற்றி புலிகள் வெளியிட்ட அதிர்ச்சிதரும் தகவல்கள்:

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-98) – நிராஜ் டேவிட்

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்த துரோக நடவடிக்கைகள் பற்றி நிறைய விடயங்களைக் கூறமுடியும். இந்திய அரசியல்வாதிகளும், இந்தியப் புலனாய்வு பிரிவினரும் ஈழத் தமிழரின் விடுதலைப் போருக்கு எதிராக மேற்கொண்டிருந்த வரலாற்றுத் துரோகங்கள் பற்றி அக்காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி இருந்தன.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, புலிகளுக்கும் இந்திய படைகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரித்து இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் பற்றியும், இதில் தமது நிலைப்பாடு பற்றியும் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கும் முகமாக புலிகள் இந்த நூலை வெளியிட்டிருந்தனர்.
‘இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும் என்ற தலைப்பில் 1987 டிசம்பர் மாதம் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் இந்த நூல் புலிகளால் வெளியிடப்பட்டது.
அதிர்ச்சிதரக்கூடியவைகளும், சர்ச்சைக்குரியவைகளுமான பல தகவல்கள் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்திய அரசின் துரோக நடவடிக்கைகள் பலவும் இந்த புத்தகத்தில் தோலுரித்துக் காட்டப்பட்டிருந்தன.
அந்தப் புத்தகத்தில் தொரிவிக்கப்பட்டவைகளுள் சில:
“1987 ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ் குடாநாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியருந்ததுடன், வடக்கிலும் கிழக்கிலும் பெரியளவிலான இராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டிருந்தது. வடக்கில் மாத்திரம் இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்ரீலங்காத் துருப்பினர் யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் எமது விடுதலைப் புலிகள் அணியினரோ, பல்வேறு அரங்குகளில் ஸ்ரீலங்கா அரச படையினரை எதிர்த்து வீராவேசத்துடன் போரிட்டு வந்தனர். ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் கூட எமது எதிரியை நாம் மிகவும் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொண்டிருந்தோம்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவி கோரினோம். எமது மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகின்றார்கள் என்பதைச் சுட்டிக் காண்பித்து எமது மக்களை காப்பாற்ற உதவிசெய்யுமாறு நாம் பாரதத்திடம் பலதடவைகள் கோரிக்கைவிடுத்திருந்தோம்.
எமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறிக்கொண்ட பாரதம் மௌனமாகவே இருந்துவந்தது. நாம் கோரிய ஆயுதப் பட்டியல் விபரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்றவற்றைச் சேகரித்த ‘றோ| அதிகாரிகள் அதனை ஸ்ரீலங்கா அரசிடம் சமர்ப்பித்திருந்தார்கள். ‘றோ| அதிகாரியான உன்னிக்கிருஷ்ணனே இந்த விடயத்தில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் வழங்கியிருந்த தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கா இராணுவம் தமது போர் உபாயங்களை வகுத்து யுத்தத்தை தீவிரப்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், களத்தில் நின்று போராடிய எமது இயக்கத்திற்கு ஆயுத உதவி அளித்து எமது மக்களைப் பாதுகாக்கத்தயங்கிய இந்தியா, தமிழ் நாட்டில் செயலிழந்து கிடந்த இயக்கங்களுக்கு பயிற்சியும், ஆயுத உதவியும் வழங்க முன்வந்தது.
அத்தோடு இந்த இயக்கங்களை தமிழ் மக்களுக்காகப் போரடிவரும் எமது அமைப்பிற்கெதிராகத் திருப்பிவிடுவதிலும் இந்தியா கவனம் செலுத்தியது.
இந்த நடவடிக்கையானது எமக்கு இந்தியாமீதிருந்த நம்பிக்கையை தகர்த்தது. இதன் மூலம் இந்திய அரசின் நோக்கம் எமக்கு தெளிவானது.


விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம்வாய்ந்த இராணுவ சக்தியாக உருவெடுத்து ஸ்ரீலங்காப் படையினரைத் தோற்கடிப்பதை இந்தியா விரும்பவில்லை. ‘ஸ்ரீலங்காப் படையினர் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்து, புலிகளை அழித்து, அவர்களை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்தவேண்டும். புலிகளால் தமிழ் மக்களைப் பாதுகாக்கமுடியாத சூழ்நிலை உருவாகவேண்டும். மக்கள் மத்தில் புலிகள் மீதிருந்த நம்பிக்கை தளரவேண்டும். அந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் இரட்சகர் என்ற போர்வையில் நேரடியாக இராணுவரீதியில் தலையிட்டு தனது நலன்களைப் பேணிக்கொள்ளவேண்டும்|.- இப்படித்தான் இந்திய அரசு திட்டமிட்டது.
அதேசமயம் இந்திய அரசு ஜயவர்த்தனவை மிரட்டி ஷஷஏவகணைகள் உட்பட நவீன ஆயுதங்களை ஈழப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கி ஸ்ரீலங்கா இரணுவத்தை முறியடிப்போம். பெரிய அழிவுகளை உண்டுபண்ணுவோம். எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியிடம் உதவிபெற்றாலும் யுத்தத்தில் வெல்லமுடியாமல் பண்ணுவோம்|| என்று மிரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.
தமிழர் நலனில் இந்தியா உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கி தமிழ் மக்களின் அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா அதனை விரும்பவில்லை. புலிகளின் வெற்றிக்கு வழிவகுத்துக்கொடுத்துவிட்டால் தனது தலையீட்டுக்கு வாய்ப்புகள் இல்லாமல்போய்விடும் என்று இந்தியா கருதியது.
ஒரு அப்பட்டமான இனப்படுகொலையைத் தடுக்க வேண்டும் என்கின்ற மனிதாபிமான நிலைப்பாட்டைக் கைவிட்டு, தனது பூகோள நலன்களில் மட்டுமே இந்தியா அக்கறை காண்பித்தது.
இலங்கை-இந்திய ஒப்பந்தமானது தமிழீழ மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. இலங்கையில் வாழும் பல்லின மக்களில்; ஒரு சமுகக் குழுவாகவே தமிழீழ மக்கள் கணிப்பிடப்;படுகின்றார்கள்.
இந்த ஒப்பந்தமானது தமிழர் தாயகத்தையும், அந்தத் தாயகத்தில் தமிழரின் ஒருமைப்பாட்டு உரிமையையும் அங்கீகரிக்கவில்லை.
தற்காலிக வடக்கு-கிழக்கு இனைப்பு பற்றிக் குறிப்பிட்டபோதும், கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தமிழர் தாயகத்தை பிரிவுபடுத்தும் ஆபத்தான விதிகளையும் கொண்டிருக்கின்றது. இப்படி தமிழீழ மக்களுக்கு பாதகமான பல குறையாடுகள் இந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்றது.
இந்திய அரசானது எம்மை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணாகதியடையச் சொல்லுகின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிபந்தனையின்றி ஆதரிக்கச் சொல்லுகின்றது.
நாம் ஆயுதத்தில் காதல்கொண்ட அராஜகவாதிகள் அல்லர். நாம் பலாத்காரத்தை வழிபடும் பயங்கரவாதிகளும் அல்லர். நாம் யுத்த வெறிகொண்ட, இரத்த வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சமாதானத்தையே விரும்புகின்றோம். எமது மக்கள் சமாதானமாக, நிம்மதியாக, சுயகௌரவத்துடன் சுதந்திரமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.
ஒடுக்கப்பட்ட எமது மக்களின் உரிமையை மீட்டெடுக்கவே நாம் ஆயுதங்களை ஏந்தினோம். அந்த இலட்சியத்திற்காகவே நாம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வருகின்றோம். அந்த இலட்சியத்திற்காக இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது வீரர்கள் தமது உயிரை அற்பனித்துள்ளார்கள்.
எமது வீரவரலாற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எம்மைச் சரணாகதி அடையச் சொல்லுகின்றது இந்திய அரசு.
நாம் பாரத நாட்டுடன் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுடன் போர் புரியவும் விரும்பவில்லை. நாம் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கின்றோம். ஆனால் நாம் ஆயுதங்களைக் கையளித்துவிடுவதால் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு தரப்பட்டுவிடுமா? எமது மக்கள் நிம்மதியாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வழி பிறக்குமா?


நாம் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கின்றோம். ஆனால் எமது மக்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். இந்திய அரசு தனது இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு, புலிகளை வேட்டையாடுவதைக் கைவிட்டு, எமது மக்களுக்கு சுபீட்சமான ஒரு வாழ்வை, ஒரு நிரந்தரமான தீர்வைக் காண்பதற்கு முன்வரவேண்டும். அப்பொழுது நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம்.
இந்திய இராணுவம் எமது மண்ணில் நிகழ்த்திவரும் அடாவடித்தனங்களைக் கண்டு நாம் அஞ்சி அடிப்பணிந்து போனால், ஜயவர்த்தன அரசிற்கு எமது தமிழ் இனம் அடிமைகளாகப்போக நேரிடும். இத்தனை காலமாக நாம் இரத்தம்சிந்திப் போரடியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். இன்று நாம் இந்தியாவிற்கு அடிப்பணிந்து போய்விட்டால் அடுத்த எமது தலைமுறை எம்மை மன்னிக்கப்போவதில்லை. நாம் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்களுக்கு அஞ்சப்போவதில்லை.
இந்தியா ஒரு அந்நிய நாடு. இங்கு வந்து எமது மண்ணை ஆக்கிரமித்துக்கொண்டு இந்திய இராணுவம் எம்மை அடிமைப்படுத்துவதை நாம் அனுமதிக்கமுடியாது.
எமது மக்களுக்கு எதிராக தான் செய்யும் அட்டூழியங்களையும், அநியாயங்களையும் இந்திய அரசு உலகின் முன்பாக இருட்டடிப்புச் செய்கின்றது. அபாண்டமான பொய்களைக் கூறிவருகின்றது.
பொய்மையின் திரைகளைக் கிழித்துக்கொண்டு உண்மை ஒருநாள் வெளிவரத்தான் செய்யும். அப்பொழுது பாரதம் உலக மனச்சாட்சியின் முன்பு தலை குணிந்து நிற்கும். அப்பொழுது வரலாறு எமது பக்கம் திரும்பும். அன்றுதான் எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். அதுவரை நாம் உண்மைக்காக, நீதிக்காகப் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம்.||
இவ்வாறு புலிகள்; 1987 டிசம்பர் மாதம் சென்னையில் பிரசுரித்திருந்த ‘இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்சனையும்| என்ற தமது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்கள்.
இதேபோன்று, இந்தியா தமிழ் மக்களுக்கு எதிராக தமிழ் ஈழ மண்ணில் மேற்கொண்டிருந்த அட்டூழியங்களை எல்லாம் பட்டியலிட்டு, புலிகள் ஆங்கிலத்திலும் ஒரு நூலை வெளியிட்டிருந்தார்கள்.
‘இந்தியா….நீயுமா???|(You Too India?) என்ற தலைப்பில் வெளியான இந்த நூலும் இந்தியாவின் பல துரோக நடவடிக்கைகளை தோலுரித்துக் காட்டுவதாக இருந்தது.

அதேபோன்ற Starnic Force என்ற ஒரு ஆவனத்தையும் விடுதலைப் புலிகள் வெளியிட்டு இந்தியா ஈழமண்ணில் புரிந்திருந்த பல அட்டூழியங்களை அம்பலப்படுத்தியிருந்தார்கள்

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்