நிராஜ் டேவிட்

0

நிராஜ் டேவிட் – தமிழ் ஊடகப் பரப்பில் சுமார் 27 வருடங்களாக ஊடகப் பணியாற்றி வருகின்ற ஒரு ஈழத் தமிழ் ஊடகவியலாளர்.
இலத்திரனியல் துறையில் பொறியில் பட்டதாரியான இவர், அந்த துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது பத்திரிகைத்துறையில்; கொண்ட ஆர்வம் காரணமாக பேனாவை ஏந்திக்கொண்டு ஊடகத்துறைக்குள் நுழைந்தார்.

1989 இல் தனது 21வது வயதில் யாழ்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற உதயன் தினசரிப் பத்திரிகையில் பயிற்சி நிரூபராக தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து, கொழும்பில் இருந்து வெளிவந்த தினபதி, The Weekend Express. தினகரன், சுடர் ஒளி பத்திரிகைகள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்றவற்றின் பகுதி நேர பிராந்திய நிருபராகவும், தினக்குரல், சரிநிகர், கனடா உலகத் தமிழர், பரிஸ் ஈழநாடு போன்ற பத்திரிகைகளின் பத்தியாளராகவும், மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த தமிழ் அலை, சுவிட்சலாந்தில் இருந்து வெளிவந்த நிலவரம் போன்ற பத்திரிகைகளின் இணை ஆசிரியராகவும், CTR (Canadian Tamil Radio), CMR (Canadian Multicultural Radio), ETBC (European Tamil Broadcasting Corporation), ITBC (International Tamil Broadcasting Corporation) போன்ற வானொலிகளில் அரசியல் விமர்சகர் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ஊடகப் பணியாற்றினார்.
தரிசனம், தென்றல் மற்றும் GTV தொலைக்காட்சிகளில் செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பொறுப்பாளராகவும், தீபம் தொலைக்காட்சியில் (ஒரு குறுகிய காலப்பகுதியில்) பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
தற்பொழுது, தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணைய சேவைகளை நடாத்துகின்ற IBC- தமிழ் (International Broadcasting Corporation-Tamil) ஊடக நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

இதலியல்துறையில் டிப்ளொமா பட்டப்படிப்பும், வெகுஜன ஊடகத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பும், மனித உரிமைகள், உளவியல் துறை போன்றனவற்றில் டிப்ளொமா கல்வியும் கற்ற இவர், ஈழத்தமிழ் ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க அளவு தன்னை வளர்த்துக்கொண்டு ஊடகப்பணியாற்றிய ஒரு ஊடகவியலாளராக அறியப்படுகின்றார்.

நிராஜ் டேவிட் எழுதிய சில கட்டுரைகள், உருவாக்கிய சில ஆக்கங்களின் தொகுப்புக்கள்தான் இந்தத் தளத்தில் வெளியிடப்படுகின்றன.
பல்வேறு காலகட்டங்களில் நிராஜ் டேவிட்டால் பதியப்பட்ட ஆக்கங்கள் பல்வேறுபட்ட தரப்பினரது அரசியலை, அமைப்புக்களின் நிலைப்பாடுகளை ஓரளவு ஆவனப்படுத்தும்படியாக அமைந்திருக்கின்றது.

ஈழத் தமிழரது வரலாற்றுப் படிமங்களை பதிவிடும் நோக்கத்தில், குறிப்பாக ஈழத் தமிழரது போராட்டத்தின் நியாயப்பாடுகளை இந்தியத் தமிழருக்கும், உலத் தமிழருக்கும் புரியவைக்கும் நோக்கத்தில், வேறு சில உள்ளீடுகளையும் அவரது கட்டுரைகளில் இணைத்திருக்கின்றோம்.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஒரு சில பரிமானங்களை மீட்டுப்பார்ப்பதற்கு நிராஜ் டேவிட்டின் சில ஆவனப் பதிவுகள் உதவும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

– ஆசிரியர் குழு

பகிரல்

கருத்தை பதியுங்கள்