22 கோடி பேரம்பேசப்பட்டது உண்மையா? தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சில கேள்விகள்!

0

சிறிலங்காவின் அதிபர் கோட்டாபாய நாட்டைவிட்டுத் தப்பி ஓடியநிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் டளஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்தது.

தமிழ் மக்கள் சார்ந்து த.தே.கூட்டமைப்பு எடுத்திருந்த நிலைப்பாடு தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எழுப்பப்படுகின்ற சில கேள்விகளை, ஒரு ஊடகமாக த.தே.கூட்டமைப்பின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்பும் வைக்கின்றோம்.

தமிழ் மக்களின் சில நலன்களை அடிப்படையாகவைத்த ஒப்பந்தம் ஒன்று டளஸ் அழகப்பெருமவுடன் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறினீர்களே- கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் எங்கே?
அந்த ஒப்பந்தம் ஏன் ஊடகங்களுக்கு இதுவரை காண்பிக்கப்படவில்லை?
ஏன் உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அந்த ஒப்பந்தம் காண்பிக்கப்படவில்லை?
நீங்கள் வழமையாகக் கூறிவருகின்ற மற்றைய ‘பொய்கள்’ போலவே, ‘தமிழ் மக்களின் சிலபிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு டளஸ் முன்வந்தார்’ என்பதும் பொய்யா?
தமிழ் மக்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட அந்தக் கோரிக்கைகள் மற்றைய இரண்டு (ரணில், அணுரகுமார) வேட்பாளர்களிடமும் முன்வைக்கப்பட்டதா?
தமிழ் மக்கள் சார்பில் உங்களால் முன்வைக்கப்பட்ட அந்தக் கோரிக்கைகளை மற்றைய இருவரும் நிராகரித்திருந்தார்களா?
அப்படி அவர்கள் நிராகரித்திருந்தால் அதனை ஏன் நீங்கள் மக்களிடம் கூறவில்லை?
அப்படி இல்லை என்றால், அந்தக் கோரிக்கையை எதற்காக டளஸ் அளகப்பெருமவிடம் மாத்திரம் கொடுத்தீர்கள்?
அதிபர் தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தலா 22 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அது போன்ற பேரங்கள் தமிழ் தலைமைகளுடனும் பேசப்பட்டதா?
சிறிலங்காவின் அதிபர் தெரிவில் தமிழ் மக்கள் சார்பில் நீங்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஏதாவது சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன், அல்லது கல்விசார் சமூகத்துடன், துறைசார் வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து அவர்களது ஆலோசனைகளைச் செவிமடுத்திருந்தீர்களா?
சிறிலங்காவின் அதிபர் தெரிவில் யாரை ஆதரிப்பது என்று உங்கள் கட்சிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், மத்தியகுழு உறுப்பினர்கள், இளைஞர் மற்றும் மகளீர் பிரிவுகளுடனாவது கலந்தாலோசனை நடாத்தினீர்களா?
வெறுமனே சுமந்திரன் என்ற தனி நபரின் கபடத்தந்திரத்திற்கு முழுத் த.தே.கூட்டமைப்பும் பலியாகிவிட்டது என்று கூட்டமைப்பின் ஒரு தரப்பு கூறுவது உண்மையானால், நீங்கள் என்ன விரல் சூப்பிக்கொண்டிருக்கவா நாடாளுமன்றம் சென்றீர்கள்?
‘இந்தியா சொல்லித்தான் செய்தோம்.’. ‘அமெரிக்கா சொல்லித்தான் இந்த முடிவெடுத்தோம்..’ என்று நீங்கள் கூறுவீர்களேயானால், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடையாளம் எதற்கு உங்களுக்கு?
தமிழ் மக்களின் நலன்களை விட இந்தியாவினதும், அமெரிக்காவினதும் நலன்கள்தான் உங்களுக்கு முக்கியம் என்றால், நீங்கள் இந்திய, அமெரிக்க தூதரகங்களின் காவலாளி பணிக்குச் செல்லலாமே? எதற்கு தமிழ் இனத்துக்கும், தமிழ்மக்களின் விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிக்கொண்டவர்களுக்கும்- ஏன் உங்களுக்குமே கூட – துரோகம் செய்துகொண்டு இருக்கின்றீர்கள்?
பின் குறிப்பு: சிறிலங்கா தேசத்தின் வாக்கு அரசியலுக்குள் வந்துவிட்ட நீங்கள் சிறிலங்கா நாடாளுமன்றில் நடைபெற்ற தேர்தலில் சிறிலங்காவுக்கான ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கும் ஒரு ஆயுதத்தை வாக்களித்தோ அல்லது புறக்கணித்தோ பயன்படுத்தியேயாகவேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

நீங்கள் ரணிலுக்கோ அல்லது டளஸுக்கோ அல்லது அனுரவிற்கோ வாக்களிக்க நிலைப்பாடு எடுப்பது என்ற முடிவிலும் எங்களுக்குப் பிரச்சனையல்ல.

பகிரல்

கருத்தை பதியுங்கள்