இந்தியா-புலிகள் யுத்தத்திற்கு புலிகளின் வன்முறைதான் காரணமா?

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-42) – நிராஜ் டேவிட்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் நடவடிக்கைகளில் இறங்கியதற்கு, புலிகளின் வன்முறைகளே காரணம் என்று இப்பொழுதும் இங்கு பலர் விமர்சித்து வருகின்றார்கள். குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் மரணமடைந்ததைத் தொடர்ந்து சிங்கள மக்கள் மீது புலிகள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதனாலேயே இந்தியப் படைகள் வேறு வழி இல்லாமல் புலிகள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டதாக சில இந்திய படையதிகாரிகள் தமது சுயசரிதைகளிலும், இலங்கை சம்பந்தமாக அவர்கள் எழுதிய புத்தகங்களிலும் தெரிவிக்கின்றார்கள்.


ஆனால் உண்மையிலேயே குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களது மரணத்திற்கு முன்னேயே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும் முடிவை இந்தியாவின் அரசியல் தலைமை எடுத்திருந்ததாக பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அதாவது விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாகசபையை ஏற்காமல் முரண்டு பிடித்ததைத் தொடர்ந்து புலிகள் மீது மிகவும் சினம் கொண்ட இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி புலிகள் அமைப்புக்கு ஒரு பாடம் படிப்பிக்கும் தீர்மானத்தை எடுத்திருந்தார். புலிகளை பலவந்தமாக நீராயுதபாணிகளாக்கினால் மட்டுமே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஒழுங்காக அழுல்படுத்தமுடியும், அந்த ஒப்பந்தத்தின் அறுவடையையும் இந்தியாவினால் பெற்றுக்கொள்ளமுடியும் என்று ராஜிவ் காந்தியும், அவரது ஆலோசகர்களும் எண்ணினார்கள்.
இடைக்கால நிர்வாகசபையை தம்மால் ஏற்கமுடியாது என்ற முடிவை இந்தியத் தூதருக்கு 30.09.1997 அன்று விடுதலைப் புலிகள் அறிவித்த உடனேயே புலிகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முடிவு இந்தியத் தலைமையினால் எடுக்கப்பட்டுவிட்டது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பின்னர் குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட இருந்த போது, அவர்கள் விடயத்தில் தலையிடவேண்டாம் என்று களத்தில் நின்ற இந்தியப்படை அதிகாரிகளுக்கு டில்லியில் இருந்து உத்தரவு வந்ததும், புலிகள் மீது இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள ஆரம்பித்திருந்த தீர்மானத்தின் ஒரு வெளிப்பாடு என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்தியாவின் கடும்போக்கு:
03.10.87இல் பருத்தித்துறைக் கடலில் புலிகளது நடமாட்டம் பற்றிய தகவலை ஸ்ரீலங்காப் படையினருக்கு இந்தியாவே வழங்கியிருந்தது. பின்னர் கைதுசெய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும் மரணத்தின் பாதைக்கு இட்டுச் செல்லும் உத்தரவை 5ம் திகதி வழங்கியது. இவ்வாறு, புலிகளுக்கு எதிரான வெளிப்படையான கடும்போக்கை இந்தியா அக்டோபர் மாதத்தின் ஆரம்பம் முதலே கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
குமரப்பா, புலேந்திரன் போன்றோர் இறந்தது ஆக்டோபர் 5ம் திகதி அன்று. அதன் பின்னரே வடக்கு-கிழக்கில் சிங்கள மக்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்திருந்தன. ஆனால், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இலங்கை விஜயமும், இந்திய இராணுவத்தின் பிரதம தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீயினது இலங்கை விஜயமும், இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னதாகவே தீர்மாணிக்கப்பட்டிருந்தன என்பதும் நோக்கத்தக்கது.
இந்திய இராணுவத்தின் பிரதம தளபதி ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி அக்டோபர் மாதம் 4ம் திகதி கொழும்புக்குச் சென்று ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜேயவர்த்தனாவையும், தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார். புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மாணித்திருக்கும் முடிவை அவர் உத்தியோகபூர்வமாக அங்கு வெளிப்படுத்தி இருந்தார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் புதுடில்லி திரும்பிய இந்தியப்படைத் தளபதி ராஜிவ் காந்தியுடன் ஆலோசனை நடாத்திவிட்டு, குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 போராளிகள் விடயத்தில் இந்தியப்படையினர் ஒதுங்கி நிற்கவேண்டும் என்ற உத்தரவை களத்தில் இருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.
அக்டோபர் 5ம் திகதி 12 போராளிகள் மரணமடைந்த செய்தி கிடைத்ததும், இலங்கையில் இருந்த அனைத்து இந்தியப் படையினருக்கும் அதி உச்ச பாதுகாப்பு நிலையை எடுக்கும்படியான உத்தரவை அவர் பிறப்பித்திருந்தார். அதாவது அக்டோபர் 5ம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சிங்கள மக்களுக்கு எதிரான வன்முறை வடக்குகிழக்கில் வெடிப்பதற்கு முன்பாகவே இந்தியா புலிகளுக்கு எதிரான கடும்போக்கை எடுக்கும் முடிவிற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 6ம் திகதி இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி பலாலி இராணுவத் தளத்திற்கு மறுபடியும் வந்திருந்தார். இந்தியப்படை அதிகாரிகளை அவர் அங்கு சந்தித்து, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் களமிறங்கவேண்டும் என்ற செய்தியைத் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் எவ்வாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பற்றி இந்தியப்படை அதிகாரிகளுடன் பலவிதமான ஆலோசனைகளையும் நடாத்தினார். திட்டங்களையும் தீட்டினார்.

அப்பொழுது இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரியான லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் இந்தக் கலந்துரையாடல்கள் பற்றிக் குறிப்பிடும் போது, “..விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற இந்திய இராணுவத் தளபதியின் நிலைப்பாட்டை நான் வரவேற்கவில்லை. புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் நடவடிக்கைகளில் இறங்குவது அவ்வளவு நல்லதல்ல என்பதை தளபதியிடம் நான் தெளிவாக தெரிவித்திருந்தேன். புலிகளுக்கு எதிராக நாம் இராணுவ அனுகுமுறையைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், அடுத்த 20 வருட காலத்திற்கு இந்தியப் படைகள் மீளமுடியாத இக்கட்டிற்குள் மாட்டிக்கொள்ள நேடிடும் என்பதையும் நான் எடுத்துரைத்தேன். ஆனால் புதுடில்லி திரும்பிய தளபதி சுந்தர்ஜியிடம் இருந்து மறுநாள் கிடைக்கப்பெற்ற செய்தி அதிர்ச்சி தருவதாக இருந்தது. புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டேயாகவேண்டும் என்ற உத்தரவு எனக்கு வழங்கப்பட்டது…|| இவ்வாறு திபீந்தர் சிங் தனது நூலில் தெரிவித்திருந்தார்.
அதாவது புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் இராணுவ நடவடிக்கைகளில் இறங்கவேண்டும் என்ற உத்தியோகபூர்வமான உத்தரவு 7ம் திகதியே யாழ்பாணத்தில் இருந்த இந்தியப்படையினருக்கு வழங்கப்பட்டுவிட்டது.
அக்டோபர் 8ம் திகதி, கடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

இலங்கைக் கடற்பரப்பில் ரோந்துக்கடமைகளில் ஈடுபடவேண்டும் என்ற உத்தரவு இந்தியக் கடற்படையினருக்கு புதுடில்லியால் வழங்கப்பட்டது. இந்தியக் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைளில், ஸ்ரீலங்கா கடற்படையினரும் தம்மை இணைத்துக் கொண்டதும், புலிகளுக்கு எதிரான இந்திய-ஸ்ரீலங்காப் படைகளின் கூட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே தீர்மாணிக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்துவதாக இருந்தது.
இப்படி இருக்கையில், வடக்கு கிழக்கில் புலிகள் சிங்களவர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கி, 260 சிங்களவர்களைக் கொலைசெய்ததன் பிரதிபலிப்பால்தான், இந்தியப்படைகள் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்பட்டது என்று இன்றும் பலர் கூறித்திரிகின்றார்கள். உண்மையிலேயே சிங்கள மக்களுக்கு எதிரான வன்முறைகள் வடக்கு கிழக்கில் வெடிப்பதற்கு முன்னரேயே, புலிகளுக்கு எதிரான கடுமையாக நிலைப்பாட்டை எடுக்கும் தீர்மாணத்திற்கு இந்தியத் தலைமை வந்துவிட்டிருந்தது என்பதுதான் உண்மை.
இந்த உண்மை, புத்திஜீவிகள் என்று தம்மைக் கூறிக்கொண்டு கட்டுரைகள் எழுதித்தள்ளும் சில பிரகிருதிகளுக்குப் புரியாமல் போனதுதான் வேடிக்கை.
புலிகளின் தலைமையைச் சந்திக்கப்புறப்பட்ட இந்தியப்படை அதிகாரிகள்:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படையினரைக் களமிறக்கவேண்டும் என்ற கடுமையான உத்தரவு புதுடில்லியில் இருந்து கிடைக்கப்பெற்றதும், ஈழத்தில் இருந்த இந்தியப் படை உயரதிகாரிகள் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். புலிகளை எதிர்கொள்வது – அதுவும் புலிகளை அவர்களது மண்ணில் எதிர்கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பதை, கடந்த சில மாதங்களாக களத்தில் நின்ற இந்திய அதிகாரிகளால் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. புலிகளின் மன உறுதி, அவர்களின் போர்க்குணம், தியாக மனப்பாண்மை, முக்கியமாக புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு என்பன, புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் இறங்குவதால் ஏற்படக்கூடிய விபரீதத்தை அவர்களுக்கு வெளிப்படித்தின.
மிக முக்கியமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் உறுதியும், நிதானமும் அவர்களை அதிகம் அச்சமடைய வைத்திருந்தன.
அதேவேளை, புலிகளுக்கு எதிராக களமிறங்கியேயாகவேண்டும் என்ற தமது தலைமைப் பீடத்தின் உத்தரவையும் அவர்களால் மீறமுடியவில்லை. அந்த விடயத்தில் இந்தியாவின் அரசியல் தலைமை உறுதியாக இருப்பதையும் அவர்களால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது.
எனினும், புலிகளுடனான யுத்தத்தை தவிர்க்கும் இறுதி முயற்சி ஒன்றில் ஈடுபட்டுப் பார்ப்பதற்கு இலங்கையில் இருந்த இந்தியப் படை உயரதிகாரிகள் திட்டமிட்டார்கள்.
இலங்கையில்; நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்காப்டரில் பறப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

இந்தியத் தலைமையின் முடிவைச் சொல்லி, இடம்பெற இருக்கும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு புலிகள் தமது ஆயுதங்களை உடனடியாக இந்தியப்படையிடம் கையளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்தது.
யாழ் பல்லைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளுக்கு அங்கு பாரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

பகிரல்

கருத்தை பதியுங்கள்