உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-20) – நிராஜ் டேவிட்

0

உளவியல் போர் அல்லது உளவியல் நடவடிக்கைகள்;( Psy ops- Psychological Operations அல்லது Psychological War ) என்கின்ற யுத்த நடவடிக்கை பற்றி இந்தத் தொடரில் ஓரளவு விரிவாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடர் கட்டுரையில் சர்வதேச மட்டத்தில் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ள டோக்கியோ ரோஸ், கனொய் கன்னா, பீ.பீ.சி. செய்தி ஊடகம், கெங்கிஸ்கான் மண்ணன், மகா அலெக்சாண்டர், அமெரிக்க இராணுவம் போன்ற தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

அதேபோன்று 1ம், 2ம், 3ம் மற்றும் நான்காம் கட்ட ஈழ யுத்தங்களின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட சில உளவியல் நடவடிக்கைகள் பற்றியும் நாம் விரிவாக ஆராய்ந்திருந்தோம்.

இந்தியப் படையினரின் ஆக்கிரமிப்பு காலத்தில் இந்திய இராணுவமும் அதன் உளவு அமைப்பும் மேற்கொண்ட ஓரிரு உளவியல் நடவடிக்கை பற்றியும் ஆராய்ந்திருந்தோம்.
தற்பொழுது ஒரு முக்கியமான தரப்பின் உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பார்க்கப் போகின்றோம்.


ஈழத் தமிழர்களையும், அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் குறிவைத்து சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட, மேற்கொண்டு வருகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி நாம் பார்க்க இருக்கின்றோம்.
சிறிலங்கா இராணுவத்தின் திறமையான பக்கங்களை பார்ப்பதற்கு அல்லது ஒப்புக்கொள்வதற்கு எம்மில் சிலர் விரும்புவது கிடையாது. ‘சிங்களவர்கள் மொக்கர்கள்’ என்று எமக்குள் ஒரு முன்சார்பு நிலையை (prejudice) வைத்துக்கொண்டு, யாதார்த்தத்தை இலகுவாக கவணிக்கத் தவறிவிடுகின்றோம்.

தமிழர் தரப்பின் மிகப் பெரிய பலவீனம் இது.

சண்டை என்றோ அல்லது போட்டி என்றோ வருகின்ற பொழுது முதலில் எமது பலம் எமக்கும் தெரியவேண்டும். அத்தோடு எமது பலவீனமும் எமக்குத் தெரியவேண்டும். அதேபோன்று எமது எதிரியின் பலமும் பலவீனமும் எமக்கு நன்றாகத்தெரிந்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் நாம் ஒரு போட்டியில் ஆரோக்கியமாக ஈடுபடமுடியும். வெற்றிக்கனியைப் பறிக்கவும் முடியும்.
ஆனால் எம்மில் சிலருக்கு எமது பலமும் எதிரியின் பலவீனமும் தெரிந்துவிட்டால் போதும் என்ற நினைப்பு மாத்திரமே இருக்கின்றது. எமது பலவீனத்தை மற்றவர்களுக்கு மாத்திரமல்ல தங்களுக்கே மறைத்துவிட விரும்புகின்றார்கள். அதேபோன்று எதிரியின் பலத்தையும் அவர்கள் கணக்கிடத் தவறிவிடுகின்றார்கள். இது தமிழர் தரப்பில் இருக்கின்ற மிகப் பெரிய பலவீனம்.

எம்மில் ஒரு சிலர் நினைப்பது போன்று சிறிலங்கா இராணுவமும் அதனது உளவியல் நடவடிக்கைப் பிரிவும் பலவீனமான அல்லது மடத்தனமான ஒரு தரப்பு அல்ல.

அதி புத்திசாலிகள் என்கின்ற மமதை கொண்ட தமிழர்களையே கலங்க அடிக்கக்கூடிய திறமை எமது எதிரியின் உளவியல் பிரிவிடம் இருக்கின்றது. இதனை அவர்கள் அன்மைய வரலாற்றில் நிரூபித்தும் காண்பித்திருக்கின்றார்கள். எனவே எமது எதிரியின் பலம் பற்றி நாம் நன்கு அறிந்து வைத்திருப்பது, எதிர்கால நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எமது எதிரியின் உளவியல் நடவடிக்கைகளின் திறமை பற்றித் தமிழ் மக்களுக்குத் தெரிவிப்பது, எதிரி பற்றிய அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்துதுவதோடு, அதுவே அவர்களைக் குறிவைத்த ஒரு உளவியல் நடவடிக்கையாக அமைந்துவிடாதா என்கின்ற ஒரு சந்தேகம் எனக்கும் எழுந்தது உண்மைதான். ஆனாலும், தமிழர் தரப்பிற்கு உளவியல் நடவடிக்கை பற்றியும் எதிரியின் செயற்பாடுகள் பற்றிய தெளிவையும் வளங்குவதற்கு இதைத் தவிர வேறு வழி எனக்குக் கிடையாது. கூடுமானவரையில் எதிரி பற்றிய தரவுகள் புலம்பெயர் உறவுகளுக்கு ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தாமல் விழிப்புணர்வை மாத்திரம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு எழுதுவதற்கு முனைகின்றேன்.
இன்று எதிரியிடம் இருக்கின்ற இராணுவக் கட்டமைப்புகள், அவர்கள் வைத்திருக்கின்ற விமானங்கள், அவர்கள் கைத்திருக்கின்ற பயங்கர ஆயுதங்கள் எம்மை எதுவும் செய்துவிட முடியாது. ஏனென்றால் எமது கருத்துக்களுக்கான மிகப் பெரிய சுதந்திரம் உள்ள மேற்குலக நாடுகளில் நாம் இன்று வாழ்ந்துகொண்டு, செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் சிறிலங்கா இராணுவத்தின் கொடுர கரங்களுக்குள் சிக்கமுடியாமல் புலம்பெயர் மண்ணில் சுதந்திரமாக அடுத்தகட்டப் போராட்டம் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற புலம் பெயர் தமிழர்களை சிறிலங்காவின் உளவியல் பிரிவு மிக மோசமாகத் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்கின்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். எமது எதிரியின் மிக நுன்ணியமான ஒரு உளவியல் நடவடிக்கைக்கு எம்மை அறியாமலேயே நாம் உள்ளாகிக்கொண்டிருக்கின்றோம். எனவே எமது எதிரி பற்றியும், அவனது உளவியல் நடவடிக்கை பற்றியும் நன்கு அறிந்து செயற்படவேண்டிய காலச் சுழலுக்குள் நாம் இன்று நின்றுகொண்டிருக்கின்றோம்.

அதனால் ஈழ யுத்தங்களின் பொழுது, சிறிலங்கா அரசாங்கமும், அதன் படைத்துறையும் உபயோகித்த சில உளவியல் யுத்தங்கள் பற்றி இந்த வாரமும், அடுத்த சில வாரங்களிலும் ஓரளவு சுரூக்கமாகப்; பார்ப்போம்.

அனைத்து விடயங்களிலும் பிரித்தானியாவின் இராணுவ கட்டமைப்பபை பின்பற்றிவருகின்ற ஸ்ரீலங்காவின் படைத்துறையானது, 1983ம் ஆண்டு ஆரம்பமான ஈழ யுத்தத்தைத் தொடர்ந்தே, இந்த உளவியல் நடவடிக்கை தொடர்பான அவசியத்தை முதன்முதலில் உணர ஆரம்பித்திருந்தது.

கொழும்பில் இருந்து இயங்கிய இரண்டு ஊடகவியலாளர்கள், மற்றும் தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்பில் இருந்து இலங்கைப் படையிடம் சரனடைந்த ஒரு நபர் அடங்கலான ஒரு சிறிய பிரிவினரே, ஸ்ரீலங்காவின் உளவியல் யுத்த நடவடிக்கைளுக்கு ஆரம்ப காலத்தில் பொறுப்பாக இருந்தார்கள். ஸ்ரீலங்கா இராணுவத்தில் பின்னர் தளபதியாக பதவிவகித்த லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பல்லேகல்ல அவர்களே, அப்பொழுது ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தார். அவரது தலைமையின் கீழ், 1984ம் ஆண்டு முதல் ஸ்ரீலங்கா இராணுவத்தின் இந்த உளவியல் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினர், வடக்கு-கிழக்கில் ஷதமிழீழ கமியூனிஸ கட்சி| என்ற பெயரில் ஒரு இரகசிய வானொலி சேவையை நடாத்தினார்கள். மிகவும் இரகசியமான முறையில் நடாத்தப்பட்ட இந்த வானொலிசேவையானது, இந்தப் பிரிவினருக்கு பல சாதகமான பலன்களைப் பெற்றுத்தந்தது என்றே கூறவேண்டும். அந்தக் காலத்தில் வடக்கு கிழக்கில் மிகவும் ஈடுபாட்டுடன் இயங்கிவந்த பல தமிழ் போராட்ட அமைப்புக்களிடையே குழப்ப நிலையைத் தோற்றுவிப்பதில் இந்த வானொலிசேவை ஓரளவு வெற்றி பெற்றிருந்தது.

தமிழ் இயக்கங்களிடையேயும், இயக்க உறுப்பினர்களிடையேயும் பரிமாறப்பட்ட தொலைத்தொடர்புப் பரிவர்த்தனைகளை ஸ்ரீலங்காவின் புலனாய்வுத் துறையினர் கவனமாக ஒட்டுக்கேட்டு, முக்கியமான தகவல்களை இந்த இரகசிய உளவியல் பிரிவினருக்கு அறிவிப்பார்கள். இப்படியான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் செய்தி அறிக்கைகளும், நிகழ்ச்சிகளும், ‘தமிழீழ கமியூனிஸக் கட்சி| இனது வானொலி சேவையில் ஒலிபரப்பப்படும். இந்த வானொலி சேவையில் ஒலிபரப்பப்பட்ட செய்திகளில் அனேகமானவை உண்மையில் நடைபெற்றவையாகவே இருந்ததால், தமிழ் மக்கள் படிப்படியான இந்த வானொலியை நம்ப ஆரம்பித்திருந்தார்கள். இந்த வானொலி சேவையை தமிழ் விடுதலை இயக்கமொன்று இரகசியமாக நடாத்தும் ஒரு சேவை என்றே மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் 1987இல் வடமாராட்சி மீதான ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கையின் போது, மக்களையும், போராளிகளையும் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கு இந்த வானொலி துணைபோனதைத் தொடர்ந்துதான், இந்த வானோலி பற்றிய உண்மை தமிழ் மக்களுக்கு விளங்கியது.

அந்தக் கால கட்டத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக, ஸ்ரீலங்கா இரணுவத்தின் உளவியல் பிரிவினரும், அதன் வானொலி சேவையும் தொடர்ந்து இயங்கமுடியாமல் போயிருந்தது.

சில வருடங்களின் பின்னர் விடுதலைப் புலிகளுடனான தமது யுத்த நடவடிக்கைகளுக்கு உளவியல் நகர்வுகளினதும் அவசியத்தை உணர்ந்துகொண்ட ஸ்ரீலங்கா இராணுவத் தலைமை, ‘உளவியல் நடவடிக்கைகளுக்கான பணியகம்| ( Directorate of Psychological Operation – DPO)

இந்தப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களையும், புலிகள் அமைப்பினரையும் குறிவைத்து, மிகவும் புத்திசாலித்தனமான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை மூலம் ஒலிபரப்பபட்ட, தமிழ் மக்களிடையே மிகவும் பிரபல்யம் அடைந்திருந்த ‘மக்கள் குரல்| ஒலிபரப்பு, மற்றும் ‘வானம்பாடி| ஒலிபரப்பு போன்றன, தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து அன்னியப்படுத்தும் நோக்கத்துடன் நடாத்தப்பட்டன. (‘மக்கள் குரல் , அந்த நேரத்தில் ஈ.பி.டி.பி. அமைப்பின் இரண்டாவது தலைவர் என்று கூறப்பட்ட ரமேஷ் என்பவரால் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

மட்டக்களப்பில், இந்த உளவியல் நடவடிக்கைப் பிரிவினர், ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்தே பணியாற்றினார்கள். மட்டக்களப்பு மக்களிடையே வடக்கு கிழக்கு பிரதேச வேறுபாடுகளைத் தூண்டும்படியான பிரசுரங்களை இவர்கள் வெளியிட்டதுடன், சுவரொட்டிகளையும் ஒட்டினார்கள்.

பின்னைய காலகட்டத்தில் அதாவது 2000ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்த உளவியல் நடவடிக்கைப் பணியகத்தின் செயற்பாடுகள், அமெரிக்காவின் விஷேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, இதன் நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்ரீலங்காப் படைத்துறையினரின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுக்கொள்ளும்படியாக அமைய ஆரம்பித்தன.

அமெரிக்க இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு (US Army Psychological Operation Group) , ஸ்ரீலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பணியகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு பலவிதமான பயிற்சிகளை வழங்கியது.
2000ம் ஆண்டில் வழங்கப்பட்ட ஒரு பயிற்சியின் போது, தமிழ் மக்களிடையேயும், விடுதலைப் புலிகளிடையேயும், உளவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு அதிநவீன நுட்பங்களை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றியும் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்தாகக் கூறப்படுகின்றது. இந்த விபரங்கள்றி பிபர இராணுவ ஆய்வாளர் தரக்கி சிவராம் ழேசவா நுயளவநசn ர்நசயடன என்ற ஆங்கிலப் பத்திரிகைளில் விபரமாக எழுதியிருந்தார்.

ஸ்ரீலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பணியகம் பிறிகேடியர் பி.பண்ணிபிட்டிய என்ற அதிகாரியின் தலமையின் கீழ் இயங்கிவந்த காலகட்டத்திலேயே அது நவீன வளர்ச்சிகளைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா இராணுவத்தின் மரபுப்போர் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், அதன் உளவியல் போர் நடவடிக்கைகள் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டிருந்தது என்றே கூறவேண்டி உள்ளது.

இவ்வாறு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டிருந்த தனது உளவியல் நடவடிக்கைப் பிரினருடன்தான் சிறிலங்காவின் இராணும் 4ம் கட்ட ஈழத்தைச் சந்தித்தது. வெற்றி கண்டது.
தற்போழுது சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு பிரிகேடியர் அருணா வன்னியாராய்ச்சி என்பவர் தலைமையில் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு செயற்படுகின்றது. புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்ததான உளவியல் நடவடிக்கைகள் ஜெனரல் சிறிநாத் ராஜ பக்ஷ என்பரது தலைமையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவைதான் சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைகள் பற்றிய சுருக்கமான பார்வை.
தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தின் உளவியல் நடவடிக்கைப் பிரிவு மேற்கொண்ட சில வெற்றிகரமான உளவியல் நடவடிக்கைகள் பற்றித் தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

பகிரல்

கருத்தை பதியுங்கள்