திலீபனின் மரணம் ஏற்படுத்திய சோகம்:

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-26) – நிராஜ் டேவிட்

திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன்.
யாழ்ப்பாணம் ஊரெழுதை பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.
உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் முடித்துக்கொண்ட திலீபன், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்தபோதுதான், தமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்பணித்திருந்தார்.
யாழ்பாணம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் யாழ்குடா பொறுப்பாளராக இருந்த கிட்டுவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களில் திலீபன் பங்குபற்றியிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் வட்டுக்கோட்டைப் பகுதி பிரச்சாரப் பொறுப்பாளர், நவாலி பிரதேசப் பொறுப்பாளர், யாழ் அரசியல் பொறுப்பாளர் என்று திலீபன் கடமையாற்றியதால், மக்களுடன் நெருங்கிப் பழகி, யாழ் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும், நட்பையும் திலீபன் பெற்றிருந்தார்.
இதனால், திலீபன் இறந்துவிட்டான் என்ற செய்தி மக்கள் மத்தியில் பரவியபோது, மக்களால் தமது சோகத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.


யாழ் குடாவே சோகத்தில் மூழ்கியது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் திலீபனின் உருவப் படம் தாங்கிய சிறிய கூடுகள் ஓலையாலும், சீலையாலும் அமைக்கப்பட்டு, அவற்றினுள் தீபம் ஏற்றப்பட்டிருந்தன. வீதியெங்கு வாழை மரங்களாலும், குருத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அந்த தியாக இளைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு தமது மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்த தயாராக இருந்தன.
யாழ் குடாவில் அழாத மக்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒப்பாரிகள் முகாரிகளாக ஒலித்தபடி இருந்தன. போதாதற்கு ஒவ்வொரு வீதிகளிலும், கோவில்களிலும், பாடசாலைகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளில் சோகக் கீதங்களும், சோக நாதங்களும் ஒலித்தபடி இருந்தன.
இதே நிலமை வடக்கு கிழக்கு முழுவதிலும் காணப்பட்டது. ஒவ்வொரு தமிழன் மனதிலும் தாங்கமுடியாத வேதனை. இந்திய அரசு மீது வெறுப்பும், கோபமும், அதனைத் தீர்த்துக்கொள்ள முடியாத தமது இயலாமையை நினைத்து அவமானமும் குடிகொண்டிருந்தன. சிலருக்கு புலிகளின் பதிலடி எப்படி இருக்கும் என்ற பயமும் ஏற்பட்டிருந்தது. மொத்தத்தில் தமிழ் இனமே பலதரப்பட்ட உணர்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டது.
இராணுவச் சீருடை தரித்து, புலிக்கொடியால் போர்த்தப்பட்டு, மலர்ப்போர்வையால் மூடப்பட்ட ஷஅமரர்| ஊர்தியில், கரும்புலிகளின் அணிவகுப்புடன் திலீபனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. யாழ் குடாவில் கிராமம் கிராமமாக இறுதிப்பயணம் மேற்கொண்ட தங்களது வரலாற்றுத் தியாகிக்கு, இதய அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தார்கள்.
சத்தியாக்கிரகத்தின் பிதாமகர் என்று கூறப்படுகின்ற மகாத்மா காந்தியையே, நீராகாரம்கூட அருந்தாத தனது உண்ணாவிரதத்தினாலும், தற்கொடைத் தியாகத்தினாலும் விஞ்சியிருந்த அந்த வீர இளைஞனுக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்த, ஒவ்வொரு தமிழ் மகனும் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

தலைவரின் செய்தி:


திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
“எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைச் செய்திருக்கின்றது. வீர காவியங்களைப் படைத்திருக்கின்றது. இவை எல்லாமே எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள்.
ஆனால் எமது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது.
சாத்வீகப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து திலீபன் ஈடுஇணையற்ற தியாகத்தைப் புரிந்துள்ளான்.
அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி.
தமிழீழ தேசிய ஆண்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி.
பாரத தேசத்தை தலைகுணியவைத்த நிகழ்ச்சி.
உலகத்தின் மனச்சாட்சியைத் தீண்டிவிட்ட நிகழ்ச்சி.
திலீபன் தமிழ் மக்களுக்காகவே இறந்தான். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே இறந்தான். தமிழ் மக்களின் மண்ணுக்காக இறந்தான். தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக இறந்தான். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக திலீபன் தன்னை மாய்த்துக்கொண்டான்.
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமைளூ எமது சுதந்திரம்ளூ எமது கௌரவம்.
நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு…|| என்று தெடர்ந்த தலைவரின் இரங்கல் செய்தியில், இந்தியாவின் பாராமுகத்தையும் அவர் பகிரங்கமாக கண்டித்திருந்தார்.

பாரதத்துடன் தர்மயுத்தம்:


“திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கின்றது. இது அர்த்தமற்ற சாவு என்று இந்தியத் தூதுவர் கூறியிருக்கின்றார். தமது உறுதிமொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். ஆனால், உண்மையில் நடந்தது என்ன, நடந்துகொண்டிருப்பது என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.
எமது உரிமைகள் வழங்கப்படும்ளூ எமது மக்களுக்கும், எமது மண்ணுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்ளூ தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத்தாமே ஆழும் வாய்ப்பு அளிக்கப்படும் – இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி, நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.
இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எமது மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிரமங்களுக்குச் செல்லமுடியாமல் அகதி முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க, சிங்களக் குடியேற்றம் துரித கதியில் தமிழ் மண்ணை விழுங்க ஆரம்பித்தது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது. சிங்கள இனவாத அரச இயந்திரம் அவசரஅவசரமாக தமிழ் பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில், சமாதானப் படைகளின் அனுசரனையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலைகொள்ள முயன்றது.
இந்தப் பேரபாயத்தை உணர்ந்துகொண்ட திலீபன், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க திடசங்கற்பம் கொண்டான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. பாரதம்தான் எமது இனப் பிரச்சனையில் தலையிட்டு, எம்மிடம் இருந்த ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆகவே பாரத அரசிடம்தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டியிருந்தது.
எனவேதான் திலீபன் பாரதத்துடன் தர்மயுத்தம் ஒன்றை ஆரம்பித்தான். பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாகவும் அவன் எடுத்திருந்தான்.
நீராகாரம் கூட அருந்தாது மரண நோன்பைத் திலீபன் தழுவிக்கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே இந்தியத் தூதுவர் திக்ஷித்துக்கு நாம் முன்னறிவித்தல் கொடுத்திருந்தோம். உண்ணாவிரதம் ஆரம்பமாகி எட்டு நாட்கள் வரை எதுவுமே நடைபெறவில்லை. பதிலுக்கு இந்திய அரசின் கீழுள்ள தொடர்பு சாதனங்கள் எம்மீது விஷமத்தனமான பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டன. திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தின.
உண்ணாவிரதம் ஆரம்பமாகி ஒன்பதாவது நாளே இந்தியத் தூதர் வந்தார். உருப்படியில்லாத உறுதி மொழிகளைத் தந்தார். வெறும் உறுதிமொழிகளை நம்பி காலாகாலமாக எமது இனம் ஏமாற்றப்பட்டு வருகின்றது. உருப்படியான திட்டங்களை முன்வையுங்கள்ளூ எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வையுங்கள்: அதுவரை உண்ணாவிரதத்தை கைவிட திலீபன் சம்மதிக்கமாட்டான் என்பதை அவருக்கு தெரியப்படுத்தினோம்.
ஷஉங்களுக்கு திலீபனின் உயிர் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், நீங்கள் அவனை வந்து பாருங்கள். எமது மக்கள் முன்னிலையில் அவனிடம் உறுதிமொழியினைக் கூறுங்கள். அப்பொழுதுதான் திலீபன் உண்ணா விரதத்தை கைவிடுவான்| என்று அவரிடம் கூறினேன். அதற்கு இந்தியத் தூதுவர் மறுத்துவிட்டார்…|| இவ்வாறு பிரபாகரன் அவர்களின் செய்தி தொடர்ந்தது.

ஈழப் பிரச்சனையின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா:
திலீபனின் மரணமும், அது தொடர்பான உணர்வலைகளும் தமிழ் மக்களை ஆட்கொண்டிருந்த அதேவேளை, இந்திய இராணுவம் தனது 36வது காலாட் படைப்பிரிவை மிகவும் இரகசியமாக யாழ்குடாவிற்கு நகர்த்த ஆரம்பித்தது.
சென்னை, பறங்கிமலைப் பகுதியில் உள்ள ஷனுநகநnஉந ஊழடழலெ| இல் ஏற்கனவே முகாம் அமைத்து நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் இந்தப் படைப்பிரிவு, சிறிது சிறிதாக யாழ்குடாவை நோக்கி நகர்த்தப்பட்டது.
இந்தியா, ஈழப் பிரச்சனையின் அடுத்த கட்டத்திற்குள் தன்னை நுழைத்துக்கொள்வதற்கு தயாரானது.

பகிரல்

கருத்தை பதியுங்கள்