தமிழ் மண்ணை நனைத்த சிங்கள இரத்தம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-90) – நிராஜ் டேவிட்

இந்தியப்படை காலத்தில் கிழக்கில் இடம்பெற்ற மிக முக்கியமான ஒரு சம்பவம் பற்றி இந்த வாரம் அவலங்களின் அத்தியாயத்தில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
விடுதலைப் புலிகளுடன் இனிப் பேசுவதில்லை என்கின்ற முடிவை உறுதியாக எடுப்பதற்கு இந்தியாவையும் சிறிலங்காவையும் நிர்பந்தித்த சம்பவம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலையை ஜே.ஆர் அறிவிப்பதற்குக் காரணமாக அமைந்த சம்பவம் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.
புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்வதற்குக் காரணமாக அமைந்த விடயம் என்றும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அந்த மோசமான சம்பவம், இலங்கையில் பாரிய அரசியல் மாற்றம் உன்று ஏற்படவும், அவலங்களின் அத்தியாயங்கள் பல தமிழர்களின் வாழ்வில் இடம்பெறவும் காரணமாக அமைந்தது.
இலங்கையின் வரலாற்றில் முதன்முதலில் சிங்கள மக்கள் மீது தமிழர் தரப்பு மேற்கொண்ட ஒரு இன வன்முறை நடவடிக்கை என்று இதனைக் குறிப்பிடலாம்.
வடக்கு கிழக்கு மண்னை சிங்கள இரத்தம் நனைத்த முதலாவது சந்தர்ப்பம் என்றும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
இவை பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்தச் சம்பவம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த பின்னணி பற்றிப் பார்ப்பது அவசியம்.
சயனைட் சம்பவம்
3.10.1987 அன்று அதிகாலை 2 மணியளவில், பருத்தித்துறைக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 17 விடுதலைப் புலி முக்கியஸ்தர்களில் 13 பேர் 1987ம் ஆண்டு அக்டோபர் 5ம் திகதி சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.


சிறிலங்கா படையினரால் பலவந்தமாக கொழும்புக்குக் கொண்செல்லப்படவிருந்த நிலையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த தற்கொலை நடவடிக்கையைச் செய்திருந்தார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 போராளிகள் சயனைட் அருந்தித் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, தமிழீழம் முழுவதும் மிக இறுக்கமான ஒரு சூழ்நிலை உருவானது.
அதேவேளை, சயனைட் உட்கொண்டு தம்மை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்ட போராளிகள் சிலரது உடல்களில் காயங்கள் காணப்பட்டதாக வெளிவந்திருந்த செய்தியும் தமிழ் மக்களை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது.
குறிப்பாக புலேந்திரனின் உடலின் முதுகுப் புறத்திலும், பின் கழுத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. துப்பாக்கி முனையில் பொருத்தப்படும் ‘பயனைட்| என்ற கத்தியினால் புலேந்திரன் குத்தப்பட்டதாக விடுதலைப் புலிப் போராளிகள் மிகுந்த சினத்துடன் தெரிவித்திருந்தார்கள். கைதுசெய்யப்பட்ட போராளிகளை உயிருடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லமுடியாத தமது இயலாமையை, ஸ்ரீலங்காப் படையினர் அவர்களின் உயிரற்ற உடல்களின் மீது காண்பித்திருந்தார்கள்.
மாவீரர்களின் இறுதி ஊர்வலத்தின் போதே, போராளிகளின் உடல்கள் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களின் கத்திக்குத்துக்களுக்கு இலக்கான கதை பொதுமக்கள் மத்தியிலும், போராளிகளிடையேயும் பரவியிருந்தது. மரணச் சடங்குகள் முடிவடைந்ததும் மக்களினதும், சக போரளிகளினதும் சோகம் கோபமாக மாற ஆரம்பித்தது.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளியான தினசரிகள் அனைத்துமே, மிக அண்மையில் திருமணமான குமரப்பா, புலேந்திரன் போன்றோரது திருமண புகைப்படங்களை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த தமிழ் மக்களின் மனங்கள் ஏற்கனவே கணன்றுகொண்டிருந்தது. மரணமடைந்தவர்களது உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து மக்களும், போராளிகளும்; தமது கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள்.
சிறிலங்கா இராணுவத்தினர் மீதான புலிகளின் கோபம் உச்சத்தை எட்டியிருந்தது. புலித் தளபதிகளின் இறந்த உடலங்கள் மீது கூட தமது காழ்ப்புணர்வைத் தீர்த்துக்கொள்ளத் தயங்காத சிங்களப் படையினர் மீதான அவர்களது கோபம் படிப்படியாக சிங்கள மக்களை நோக்கியும் திரும்ப ஆரம்பித்தது.
அடுத்த சில நாட்கள், வடக்கு-கிழக்கு இரத்தமயமாகக் காட்சியளித்தது.
சிறிலங்காப் படையினரின் உடல்கள்
6ம் திகதி காலை யாழ் பஸ் நிலையத்தின் முன்னால் 8 ஸ்ரீலங்காப் படைவீரர்களின் உடல்கள் போடப்பட்டிருந்தன. அவர்களது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன.
23.03.1987 அன்று பண்ணை தொலைத்தொடர்பு கோபுர இராணுவ முகாம் தாக்குதல் சம்பவத்தின் பொழுது புலிகளினால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 ஸ்ரீலங்காப் படையினரின் உடல்களே அவை.
புலிகளின் எல்லை கடந்த கோபம் ஸ்ரீலங்காப் படையினரை நோக்கித் திரும்பியிருந்ததை அது வெளிப்படுத்தியது.
சிங்கள இரத்தத்தால் நனைந்த தமிழ் மண்:


காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளர் ஜெயமண்ண மற்றும் உதவி முகாமையாளர் கஜநாயக்க போன்றோர் படுகொலை செய்யப்பட்டு காங்கேசன்துறை சீமேந்துத் தொமிற்சாலையின் முன்பாக வீசியெறியப்பட்டிருந்தன.
சுன்னாகத்தில் பேக்கறி வைத்திருந்த ஒரு சிங்கள முதலாளி கொலைசெய்யப்பட்டார்.
அன்றைய தினம் யாழ்பாணத்தில் தங்கியிருந்த ரூபவாகினி தொலைக்காட்சி ஊழியர்களான அத்தனாயக்க, காமினி ஜெயந்த, நிலாந்த, கருணபால என்ற நான்கு பேர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலைகளைப் புரிந்திருந்ததாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
போராளிகளுக்கு நடந்த nநீதியால் ஆத்திரமடைந்த பொதுமக்களே இதனைச் செய்திருந்ததாக புலிகள் தரப்பு தெரிவித்திருந்தது.
அடுத்த சில தினங்கள், தமிழ் பிரதேசங்கள் எங்கும் இரத்த வெள்ளமாக காட்சி தந்தன.
ஆனால், இம்முறை சிந்தப்பட்ட இரத்தம் தமிழருடையது அல்ல. காலாகாலமாகவே தமிழர்கள் சிந்திய குருதியினால் நனைந்து வந்த தமிழ் மண்ணை, முதல்முறையாக சிங்கள இரத்தம் செந்நிறமாக்கியது.
புலேந்திரன்- குமரப்பா
சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட விடுதலைப் புலித் தளபதிகளில் புலேந்திரன் திருகோணமலையைச் சேர்ந்தவர். திருகோணமலைப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளை வளர்த்ததுடன் நீண்ட காலம் திருகோணமலைப்பிராத்தியத்தில் தளபதியாகப் பணியாற்றியிருந்தவர்.
அதேபோன்று தளபதி குமரப்பா அவர்கள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக புலிகள் அமைப்பின் தளபதியாகப் பணியாற்றியிருந்தவர். பல போராளிகளை அங்கு உருவாக்கியதுடன் ஏராளமான போராளிகளை அந்தப் பிராந்தியத்தில் வளர்த்திருந்தார்.
எனவே இந்தத் தளபதிகளின் மரணம் என்பது இயல்பாகவே கிழக்கில் பாரிய உணர்வலையை போராளிகள் மத்தியில் உருவாக்கிவிட்டிருந்தது. போதாததற்கு விடுதலைப் புலிகளின் தலமைப்பீடத்தின் கண்ணசைவும் கிடைத்ததைத் தொடர்ந்து சிங்கள பாதுகாப்புப் படையினருக்கு எதிராகவும், சிங்கள மக்களுக்கு எதிராகவும் வன்முறைகள் மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தன.
கிழக்கில் பரவிய வன்முறை
மட்டக்களப்பு நகரின் மத்தியில் கம்பீரமாகக் காட்சிதந்துகொண்டிருப்பது சிறிபால கட்டிடம். மட்டக்களப்பில் சிங்கள முதலாளி ஒருவருக்குச் சொந்தமான கடை மற்றும் குடிமனைத்தொகுதி அது. தமிழ் மக்களுக்கு எதிரான ஸ்ரீலங்காப் படையினரின் அடக்குமுறைகள் முனைப்படைய ஆரம்பித்ததின் பின்னர், இந்தக் கட்டிடமும், அதில் வசிப்பவர்களும் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைய ஆரம்பித்திருந்தார்கள். ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படும் தமிழ் இளைஞர்களின் விடுதலை தொடர்பான பேரம்பேசல்கள் இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஸ்ரீலங்காவின் விஷேட அதிரடிப் படையினர் சகட்டுமேனிக்கு கைதுசெய்யும் தமிழ் இளைஞர்களை பணத்தை வாங்கிக்கொண்டு விடுவிக்கும் கைங்காரியத்தை ஸ்ரீபால கட்டிடத்தில் வசித்துவந்த சிங்கள முதலாளிகள் ஒரு வியாபாரமாகவே செய்துவந்தார்கள். (சுறனைகெட்ட சில தமிழர்கள் இதனை ஒரு உதவியாகக் கருதி பாராட்டி வந்தது வேறு விடயம்.)
கிழக்கிற்கு பரவிய கலவரத்திற்கு முதலில் பலியானவர்கள் இந்தச் ஸ்ரீபால கட்டிடவாசிகளே. 06.10.1987ம் திகதி நள்ளிரவில் இந்த கட்டிடத்திற்குள் புகுந்த போராளிகள்; சிலர்;, அங்கிருந்த குடும்ப உறுப்பினர்களை வாளினாலும், கத்திகளினாலும் வெட்டிக்கொன்றார்கள்.


மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட இருதயபுரம் என்ற பிரதேசத்திற்கு அருகாமையில், ஷஜயந்திபுர| என்றொரு சிங்களக் குடியேற்றம் அமைக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பிற்குப் பணியாற்றவென வந்த சிங்களப் பொலிஸ் மற்றும் அரச ஊழியர்களின் குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன. இந்தக் குடியேற்றப் பிரதேசமும் தாக்குதலுக்கு உள்ளானது. பலர் கொல்லப்பட்டார்கள்.
மறுநாள் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்ட புகையிரதமும், வாழைச்சேனை காகித ஆலைக்கு அருகில் வழிமறிக்கப்பட்டது. அதில் பயணம்செய்த 40 சிங்கள மக்கள் கொல்லப்பட்டு, இரயில் பெட்டிகளில் போட்டு எரிக்கப்பட்டார்கள். மயிலங்கரச்சியைச் சேர்ந்த, தமிழ்-சிங்கள கலப்புப் பெற்றோருக்குப் பிறந்த சுனில், ரவி என்ற விடுதலைப் புலி உறுப்பினர்களே இந்தக் கொலைச் சம்பவத்தை முன்னின்று நடாத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கல்குடா பிரதேசத்திலும் அங்கு வாழ்ந்து வந்த சிங்கள மக்களுக்கு எதிராக பாரிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 25 சிங்கவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.

வாழைச்சேனை மற்றும் கல்குh பகுதியில் சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைப் பார்வையிடுவதற்காக சிறிலங்கா அரசாங்கக் குழு ஒன்று பல வாகனங்களில் புறப்பட்டது. சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்க இந்த விசேட குழு மட்டக்களப்பு நகரில் இருந்து புறப்பட்டது. சிறிலங்கா இராணுவஅதிகாரிகள் பெருமளவில் தொடரணியாக வருவதான தகவல்கள் புலிகளுக்குக் கடைத்தது. இந்த தொடரணிமீது தாக்குதலை மேற்கொளளும்படியான திட்டத்தைத் தீட்டிய விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு கொமும்பு நெருஞ்சாலையில் கொம்மாதுறை என்ற இடத்தில் ஒரு கன்னிவெடித்தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். விடுதலைப் புலி போராளியான மேஜர் அகத்தியன் என்பவரால் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் மாவட்ட இணைப்பதிகாரி நிமால் டி சில்வா உட்பட 8 சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டார்கள். விசேட அதிரடிப்படை வாகனத் தொடரனியில் பயணம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அந்தோணிமுத்து உட்பட ஐந்து அரசாங்க அதிகாரிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை. அரச அதிபர் அந்தோனிமுத்துவின் இல்லத்திற்குச் சென்ற புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரான்ஸிஸ், தாரிணி, டிலினி என்ற அரச அதிபரின் இரண்டு மகள்களிடமும் தமது ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்தார்.


தாக்கப்பட்ட சிங்களக் கிராமங்கள்
அக்டோபர் 6, 7 மற்றம் 8ம் திகதிகளில் கிழக்கில் உள்ள பல சிங்களக் கிராமங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களினால் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகின.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிங்கபுர சிங்களக் கிராமம் மீது 6.10.87 நள்ளிரவு நடைபெற்ற தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டார்கள்.
07.10.1987 அன்று அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் மொனராகல வீதியில் அரச பேரூந்து ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த சிங்கள சிவிலியன்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டார்கள். இதேபோன்று புல்மோட்டை வழியாகப் பயணம் மேற்கொண்ட ஒரு தனியார் பேரூந்து ஆயுதம்தாங்கிய சில தமிழ் இளைஞர்களால் இடைமறிக்கப்பட்டு அதில் பயணம் செய்த 11சிங்கள மக்கள் இறக்கியெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.
அதேபோன்று திருகோணமலைப் பிரதேசத்தில் பல சிங்களக் கிரமங்கள் தாக்குதலுக்கு இலக்காகின.
அந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 700 சிங்களவர்கள் தமிழர் தரப்பினரால் கொலைசெய்யப்பட்டதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
கண்டனம்
ஒரு யுத்தத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாத சிவிலியன்கள் கொல்லப்படுவதென்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததும், ஏற்றுக்கொள்ளப்பட முடியாததுமானதே என்பதில் சந்தேகம் இல்லை.
கிழக்கில் சிங்கள மக்களுக்கு எதிராகத் தமிழர் தரப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலை நடவடிக்கைகள் கண்டிக்கப்புடவேண்டியவையே.
என்னதான் உணர்ச்சியின் வேகம் என்று கூறிக்கொண்டாலும், 1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில், வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் மீது தமிழ் தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, மனவருந்தத்தக்க ஒரு நிகழ்வுதான். சிங்களத்தின் வெறித்தனமான பிடிவாதத்தைத் தொடர்ந்து, 12 போராளிகள் அநியாயமாக தமது உயிர்களை இழக்க நேரிட்டதன் சோகம், இப்படியான ஒரு ரூபத்தில் வெளிப்பட்டதாக இந்தச் சம்பவங்களுக்கு காரணம் கற்பிக்கப்பட்டாலும், ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு கறைதான் என்பதில் சந்தேகம் இல்லை.
முக்கிய விடயம்
ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பாகக் குறிப்பிடவேண்டிய மற்றொரு முக்கிய விடயமும் இருக்கின்றது.
1987 அக்டோபர் முதல் வாரத்தில் தமிழர் தரப்பினால் சிங்கள மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டிப்பதற்கும், விமர்சிப்பதற்குமான உரிமை சாதாரன தமிழ் மக்களுக்கு அல்லது சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இருக்கின்றதே தவிர, இந்தச் சம்பவம் பற்றி வாய்திறப்பதற்கான தகுதி சிறிலங்கா அரசாங்கத்திற்கோ, இந்திய அரசாங்கத்திற்கோ அல்லது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக அரசாங்கங்களுக்கோ கிடையாது என்பதுதான் யதார்த்தம்.
1984ம் ஆண்டு, இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி சீக்கியத் தீவிரவாதிகளினால் கொலைசெய்யப்பட்ட போது, ஆத்திரம் அடைந்த இந்திய மக்கள் நாடுமுழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் இறங்கியிருந்தார்கள். இரண்டு நாட்களில் இந்தியா முழுவது நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்தியாவின் இராணுவத்திலும் சரி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இந்தியாவின் விளையாட்டுத்துறையிலும் சரி, பாரிய பங்களிப்பைச் செய்துவந்த சீக்கிய இன மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டார்கள். டெல்லி, கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களின் தெருக்களிலெல்லாம் அப்பாவிச் சீக்கியர்களின் பிணங்கள்.
சில நாட்களில் பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட ராஜிவ் காந்தியிடம், சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைகள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த ராஜீவ் காந்தி, ஷஷஒரு பெரிய மரம் சாயும் போது, சில அதிர்வுகள் அங்கு ஏற்படத்தான் செய்யும். அந்த அதிர்கள் காரணமாக அருகில் இருக்கும் சில புல்பூண்டுகள் அழிந்துவிடுவது தவிர்க்கமுடியாதது|| என்று பதில் அளித்திருந்தார்.
இதேபோன்று, 83ம் ஆண்டு ஜுலையில் புலிகளின் கன்னிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி 13 சிறிலங்காப்படைவீரர்கள் யாழ்பாணத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் அயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால் கோபம் கொண்ட சிங்கள மக்கள் உணர்ச்சிவசப்பட்டு, இப்படியான காரியத்தைப் புரிந்துவிட்டதாக இந்தச் சம்பவத்திற்கு சிறிலங்கா அரச தரப்பால் நியாயம் கற்பிக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், தமிழ் நாட்டிலும், பெங்களுரிலும் வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பொலிசாரினால் வகைதொகையின்றிக் கைதுசெய்யப்பட்டார்கள். அடித்து நொறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார்கள். கடைகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழ் பேசிய பலர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். (இத்தனைக்கும் ராஜீவ்காந்தியை புலிகள்தான் கொலைசெய்தார்கள் என்ற ஒரு சந்தேகம் மட்டுமே அப்பொழுது அங்கு நிலவியிருந்தது). பிரதமரை இழந்த சோகத்தில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்ளுகின்றார்கள் என்று நியாயம் கூறப்பட்டது.
2001ம் ஆண்டு செப்டெம்பர் 11 இல், நியுயோர்க் மற்றும் வோஷிங்டனில் இஸ்லாமிய அல்கயிதா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதிபலிப்பு, முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கத் தெருக்களில் தாக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். போதாததற்கு அமெரிக்க காவல்துறையும் அமெரிக்காவில் வாழ்ந்த பல முஸ்லிம் மக்களை கைதுசெய்து துன்புறுத்தியது. தாடியுடன் தலைப்பாகை அணிந்து காணப்படும் சீக்கியர்களைக் கூட, முஸ்லிம்கள் என்று நினைத்து தாக்குதலை நடாத்தியிருந்தார்கள். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர், ஷஷமக்கள் தமக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத இழப்பினால் கோபம் கொண்டிருக்கின்றார்கள்|| என்று கூறியிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரு உல்லாச ஹோட்டலில் இடம் பெற்ற குண்டுவெடிப்பொன்றில், அவுஸ்திரேலிய பிரஜைகள் சிலரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் பல முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றியும் ஊடகங்களில் அறிய முடிந்தது. இந்தச் சம்பவத்திற்கும், ‘இயல்பான கோபம்| காரணமாகக் கூறப்பட்டது.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், இழப்புகள் நோர்ந்து, தாங்க முடியாத சோகம் ஏற்படும் போது ‘இயல்பான கோபம்| வரலாம்ளூ ஆனால் தமிழ் மக்களுக்கு மட்டும் அப்படியான கோபம் எதுவும் வந்துவிடக் கூடாது.
07.09.1996 இல் கிருஷாந்தி போன்றவர்கள் கொல்லப்பட்டதுடன், யாழ்குடாவில் 600இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படையினரால் கொலை செய்யப்பட்டால், அது புலிகள் முல்லைத்தீவு மீது தாக்குதல் நடாத்தியதால் படைவீரர்களுக்கு ஏற்பட்ட ‘மனப்பாதிப்பின் வெளிப்பாடு| என்று நியாயம் கற்பிக்கும் சிறிலங்கா அரசாங்கம்ளூ
1992ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 9ம் திகதி மைலந்தனையில் 12 சிறுவர்கள் உட்பட 36 தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, – அது டென்சில் கொப்பேகடுவ கொலை செய்யப்பட்டதால் படையினருக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு என்று நியாயம் கற்பிக்கத் தெரிந்த சிங்கள தேசம், – ‘தமிழ் மக்களுக்கு தாங்கமுடியாத சோகம் ஏற்படும்போது, அவர்களுக்கும் கோபம் ஏற்படத்தான் செய்யும்| என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
காலாகாலமாகவே சிங்களவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு, பலவிதமான துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வந்த தமிழ் சமுகம், கிளர்ந்து எழுந்த முதலாவது சந்தர்பம் என்று இதனைக் குறிப்பிடலாம்.
வன்முறைகள் மலிந்திருந்த அந்தக் காலத்தில், அதுவும் குறிப்பாக சிங்களப் படையினராலும், சிங்களக் காடையர்களினாலும் தொடர்ந்து வன்முறைக்கு இலக்காகி வந்த தமிழ் சமுகம், ஆற்றமுடியாத தமது கோபத்தை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பம்தான் என்பதை வேறு வழியில்லாமல் இந்தியா நியாயப்படுத்தியேயாகவேண்டும்.
தமிழ் மக்கள் தமது உரிமையைக் கேட்டாலும் அடி, உண்ணாவிரதம் இருந்தாலும் அடிளூ சத்தியாக்கிரதம் இருந்தாலும் அடிளூ தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடாத்தினால் வெடிளூ சரி எதுவுமே வேண்டாம் என்று கொழும்புக்கு ஒதுங்கிச் சென்றவர்களுக்கு எதிராகவும் வன்முறை, கலவரம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒருவாறு சமாதானம் திரும்பிவிட்டது என்று நினைத்து, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து, படிப்படியாக சுமுக நிலைக்குத் திரும்புகின்ற வேளையில், இப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்றுவிட்டதை நினைத்து தமிழ் சமுகம் சோகமும், ஆதங்கமும், கோபமும் கொள்ளத் தலைப்பட்டதில் உள்ள நியப்பாட்டை வேறுவழியில்லாமல் மேற்குலகமும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
ஏனென்றால் தங்களுடைய தரப்பில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்ற சந்தர்பங்களில் சிறிலங்கா தேசமும், இந்தியாவும், மேற்குலகும் இவற்றை நியாயப்படுத்தியிருக்கின்றனவே…

பகிரல்

கருத்தை பதியுங்கள்