உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-15) – நிராஜ் டேவிட்

0

விடுதலைப் புலிகள் தமது போராட்டங்களின் பொழுது உபயோகித்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி தற்பொழுது இந்தத் தொடரில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
அதுவும் குறிப்பாக, கருணாவிற்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பொழுது, புலிகள் உபயோகித் உளவியல் நடவடிக்கைகள் பற்றி இந்தப் பத்தியில் ஆராயும்படி ஒரு வாசகர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அது பற்றி கடந்த இரண்டு வாரங்களாகச் சற்று விரிவாகப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

கருணா பிரிந்ததாக அறிவித்து, கருணா பெரும் படை பலத்துடன் மட்டக்களப்பில் ஆட்சி செலுத்திய அந்த 41 நாட்களின் தாற்பரியம் பற்றியும், கருணாவின் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவந்த விடுதலைப் புலிகளின் படை நடவடிக்கை பற்றியும் கடந்த வாரங்களில் பார்த்திருந்தோம்.

அந்த 41 நாட்கள் காலகட்டத்தில், கிழக்கில் கருணா உண்மையிலேயே பலமான நிலையிலேயே இருந்தார். பெரும்பாண்மையாக என்று கூறாவிட்டாலும், பெரும்பாலான மக்களின் ஆதரவு கருணாவின் பிரதேசவாதத்திற்கு அங்கு இருக்கத்தான் செய்தது. கருணாவின் கீழ் அமைப்பில் இணைக்கப்பட்டு, கருணாவினால் வளர்க்கப்பட்டு, கருணாவின் கட்டளைகளின் கீழ் நீண்டகாலம் செயற்பட்டுப் பழக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள், அங்கு இருந்ததென்பது, உண்மையிலேயே கருணாவிற்கு அப்பொழுது இருந்த பெரிய பலம்தான்.
சாதாரணமாக வடக்கில் போராளிகள் மற்றும் தளபதிகளின் வீடுகளில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படம் மாட்டிவைக்கப்பட்டிருப்பது வழக்கம். ஆனால் கிழக்கைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைப் பொறுத்தவரையில் அந்தக் காலகட்டங்களில் தலைவர் பிரபாகரனுடன் புலிகளின் தளபதி கருணா ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம்தான் மாட்டிவைக்கப்பட்டிருப்பது வளக்கம். புலிகளின் தலைவருக்கு அடுத்ததாக அல்லது புலிகளின் தலைவருக்கு நிகரான ஒரு கௌரவம் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கருணாவிற்கு போராளிகளாலும், தளபதிகளாலும் வளங்கப்பட்டு வந்தது.

சாதாரணமாக தற்கொலைத் தாக்குதலுக்குப் புறப்படும் போராளிகள் புலிகளின் தலைவருடன் விருந்துண்டு அவருடன் நின்று புகைப்படம் எடுக்கும் வளக்கம் இருந்தது. ஆனால் கிழக்கில் தற்கொலைத் தாக்குதலுக்குச் செல்லும் போராளிகள், புலிகள் அமைப்பின் மட்-அம்பாறை மாவட்ட தளபதி கேணல் கருணா அம்மானுடன் நின்று புகைப்படம் எடுத்துத்தான் புறப்படுவது வளக்கம்.
அந்த அளவிற்கு கருணா என்கின்ற தளபதி கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் குறிப்பாக போராளிகள் தளபதிகள் மத்தியில் மிகவும் மதிப்புக்குரிய ஒருவராக இருந்தார்.
அதுமாத்திரமல்ல, விடுதலைப் புலிகள் அமைப்பிலும் அந்த நேரத்திற்கு கருணாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. புலிகள் அமைப்பில் எந்தத் தளபதிக்கும் இல்லாத அதிகாரம் கருணாவிற்கு வழங்கப்பட்டிருந்தது. மட்-அம்பாறை மாவட்டங்களில் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் (தேசிய புலனாய்வுப் பிரிவு தவிர்ந்த) அனைத்து பிரிவுகளும் கருணாவிற்கு கீழேயே செயற்பட்டன. இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்ற ஒரு பிரிவு கருணாவின் கீழேயே செயற்பட்டது. 2003ம் ஆண்டின் ஆரம்பத்தில் புலிகளின் தேசிய புலனாய்வுப் பிரிவினிடையே பிழவு ஏற்பட்டு சுமார் 60 புலனாய்வுப் பிரிவு போராளிகள் மட்டக்களப்பு புலனாய்வுப் பிரிவுத் தளபதி றெஜனோல்ட் தலைமையில் பொட்டம்மணுக்கு எதிராகப் போர்கொடி தூக்கிய பொழுது, புலிகளின் வரலாற்றில் இல்லாத வகையில் அத்தனை போராளிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு, கருணாவின் கீழ் தொடர்ந்து செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது கருணா என்கின்ற தளபதிக்கு புலிகள் அமைப்பில் இருந்த செல்வாக்கையும், அதிகாரத்தையும் போராளிகளுக்கு நிரூபித்த பல சம்பவங்களுள் ஒன்று என்று கூறலாம்.
கருணாவிற்கு புலிகளின் தலைவர் கொடுத்த முக்கியத்துவம் என்கின்ற தலைப்பில் பிரபல இராணுவ ஆய்வாளர் தரக்கி சிவராம் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளைக்கூட எழுதியிருந்தார். புலிகளின் தலைவர் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், புலிகளின் தலைவருக்கு அருகில் கருணாவுக்கு வழங்கப்பட்ட ஆசனம் முதல், அந்த மாநாட்டில் கருணாவை உயர்த்தும்படியாக வழங்கப்பட்ட தலைவரின் கருத்துக்கள் என்பன, புலிகள் அமைப்பில் கருணா பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருப்பதாக தரக்கி சிவராம் குறிப்பிட்டிருந்தார்.
ஆக, கருணா என்கின்ற புலிகளின் தளபதி நிகரில்லாத ஒரு தளபதிகளாக, தலைவனாக மட்-அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிப் போராளிகளால், தளபதிகளால், மக்களால் பார்க்கப்பட்ட நிலையில்தான் கருணாவின் பிரிவு இடம்பெற்றது.
அந்த காலகட்டத்தில் கிழக்கில் கருணாவிற்கு இருந்த நிலை என்பது, கருணாவிற்கு மிகப் பெரிய பலத்தை ஏற்படுத்தியிருந்தது.
கிழக்குப் பல்கலைக் கழகம் கருணாவிற்கு சார்பாக களமிறங்கியருந்தது.
தேர்தலில் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட 8 வேட்பாளர்களில் ஜோசப் பரராஜசிங்கம் தவிர மற்றைய அனைவருமே கருணாவின் நிலைப்பாட்டுக்குச் சார்பாகவே தமது பிரச்சாரங்களை வடிவமைத்து மேற்கொண்டார்கள். ஒரு சிலர் சற்று மேலே சென்று புலிகளின் தலைவரது கொடும்பாவியை எரியூட்டி கருணாவின் பாசத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். மட்டக்களப்பு மாமாங்கீஸ்வரர் ஆலயத்தில் கருணாவிற்குச் சார்பாக பாடசாலை மாணவர்கள் தொடர் உண்ணாவிரதங்களை ஆரம்பித்திருந்தார்கள்.
ஆரம்பத்தில் கிழக்கில் கருணா என்ற தலைவர் அசைக்க முடியாத பலத்துடன்தான் காணப்பட்டார்.
இது அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. அந்த மிகப்பெரிய சவாலை புலிகள் தமது உளவியல் நடவடிக்கைகளினூடாவே சந்திக்கவேண்டி இருந்தது.

அந்த காலகட்டத்தில் கருணாவிற்கு அங்கிருந்த மிகப் பெரிய பலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு முக்கிய உளவியல் பலவீனத்தை கண்டிருந்தார்கள். அந்தப் பலவீனத்தை தமது பலமாக மாற்றுவதில் புலிகள் அமைப்பு பெற்றிருந்த வெற்றிதான், கருணாவை புலிகள் தோற்கடிக்கக் காரணமாக அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில் கருணாவின் பக்கம் நின்ற அனைவருமே தேசியத் தலைமையில் அன்பும், மதிப்பும் கொண்டிருந்ததுதான், கருணா தரப்பில் அப்பொழுதிருந்த மிகப்பெரிய பலவீனம் என்பதை புலிகள் அறிந்துகொண்டார்கள். கருணாவின் கீழ் அப்பொழுதிருந்த போராளிகள், தளபதிகள் அனைவருமே புலிகளின் தலைமைக்குத் தமது விசுவாசத்தையும், கீழ்ப்படிவையும் காண்பிப்பதாகக் கூறித்தான் சத்தியப்பிரமானம் எடுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைத்தான் அவர்கள் தமது நெஞ்சங்களில் சுமந்துகொண்டிருந்தார்கள். இந்த யதார்த்ததை தமது உளவியல் நடவடிக்கைக்குப் பயன்படுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு தீர்மாணித்தது.

முதலாவதாக தமிழ் ஊடகங்கள், தமிழ் ஊடகவியலாளர்களை தமது பக்கம் முற்றாகவே ஈர்த்துக்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பு, தனது உளவியல் யுத்தத்திற்கான அத்திவாரத்தைப் போட்டுக்கொண்டது.
அதன் பின்னர் தேசியத் தலைமை தொடர்பாக கிழக்கு தளபதிகளுக்கு இருந்த விசுவாசத்தைப் பயன்படுத்தி, கருணா பக்கம் நின்ற அவர்களில் பலரை வன்னிக்கு வரவளைத்தது. இந்த அழைப்பை ஏற்று கௌசல்யன், ரமேஷ், ராம், தயாமோகன், ரமணன், கரிகாலன், பிரபா, குயிலின்பன், சேனாதி என்று ஒரு பெரும் தொகையிலானவர்கள் கருணாவைக் கைவிட்டு புலிகளின் தலைமையயின் பின்னால் அணிதிரண்டார்கள்.
அடுத்ததாக, கருணா ஒரு புலிகள் அமைப்பு தளபதி என்றிருந்த இமேஜை இல்லாதொழிக்கும் நோக்கில், கருணாவை புலிகள் அமைப்பில் இருந்து நீக்குவதான அறிவிப்பை, புலிகள் அமைப்பு வெளியிட்டது.
தனி மணிதனாக மாற்றப்பட்ட கருணாவை மேலும் அன்னியப்படுத்தும் நோக்கத்துடன், தொலைபேசிகள், ஊடகங்கள், தொலைத்தொடர்புக் கருவிகளைப் பாவித்து, விடுதலைப் புலிகளின் பல்வேறு தளபதிகள் உளவியல் போரினை ஆரம்பித்தார்கள்.
அந்த காலகட்டத்தில் கிழக்கில் தொலைபேசி இணைப்பு வைத்திருந்த அத்தனை சிவிலியன்களையும் ரமேஷ், கௌசல்யன் உட்பட புலிகளின் முக்கிய கிழக்குத் தளபதிகளாக தொடர்புகொண்டு அவர்களது உளவியலில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார்கள். யாரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. தொலைபேசி உரையால் ஊடான இந்த உளவியல் நடவடிக்கைகள் என்பது அழுது பரிதாபத்தைத் தேடுவது முதல் மிரட்டிப் பணியவைப்பது என்பது வரை தொடர்ந்தன.

இந்த இடத்தில் தமிழ் ஊடகங்களைப் பாவித்து புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும்.

தமிழ் ஊடகங்கள் அந்த காலகட்டத்தில் கருணாவிற்கு எதிராக மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் என்பது, கருணாவின் இமேஜை பெரிதும் பாதித்தது என்பதை கூறித்தான் ஆகவேண்டும். கிழக்கு வாழ் மக்கள் மனங்களில் ஒரு மிகப் பெரிய கதாநாயகனாக வலம்வந்துகொண்டிருந்த கருணாவை ஒரு துரோகியாக அடையாளப்படுத்தியதில் தமிழ் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது. நடேசன், சிவராம் என்று பின்நாட்களின் கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்கள் தேடித் தேடி அழிக்கப்படவும், மிகுதியானவர்கள் கொலைவேட்டைக்காகத் துரத்தப்படவும், கருணா காலத்தில் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகளுக்குத் தமிழ் ஊடகவியலாளர்கள் பெருமளவில் துணைபோனதே காரணமாக இருந்தது.

தொலைபேசிகள், தொலைத்தொடர்பு கருவிகள் ஊடாக புலிகளின் தலைவரின் பெயரால் விடுக்கப்பட்ட அழைப்பினைக் கேட்டு ஏராளமான போராளிகள் மனம்மாறி, கருணாவை விட்டு வெளியேறி புலிகள் தரப்பில் இணைந்தார்கள்.
வெருகல் ஆற்றின் ஒருபக்கம் கருணா ஆதரவு அணியினரும், மறுபக்கம் விடுதலைப் புலிகள் அணியினரும் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில், ஆற்றின் ஒருபகுதியில் முன்னணியில் வந்துநின்றுகொண்ட தளபதி சொர்ண்ணம் அவர்கள், ஆற்றின் மறுகரையில் நிலைகொண்டிருந்த கருணா தரப்பு போராளிகளைப் பார்த்து, ‘நாங்கள் தலைவர் பிரபாகரனின் போராளிகள் வந்து நிற்கின்றோம். தலைவரின் பிள்ளைகளுக்கு எதிராகச் சண்டை பிடித்து துரோகிகளாகச் சாக விரும்புபவர்கள் தாராளமாக முன்னுக்கு வரலாம்..’ என்று அறைகூவல் விடுத்திருந்தார். இந்த அறைகூவல், கருணா தரப்பில் நின்ற ஏராளமாக போராளிகளை விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தாமல் தடுத்தது.
அதேபோன்று, கருணா அணியினருக்கு எதிராண சண்டைகள் மூண்டதைத் தொடர்ந்து ஏராளமான ஷமெகா போன்களை| (Mega Phones) பயன்படுத்திய புலிகள், தாங்கள் தேசியத் தலைவரின் பிள்ளைகள் என்றும், தங்களுக்கு எதிராகச் சண்டையிடுபவர்கள் துரோகிகள் என்றும் திரும்பத் திரும்பக் கூறி, கருணா தரப்பில் நிறுத்தப்பட்டிருந்த போராளிகளின் உளவியலை மிகவும் பலவீனமாக மாற்றியிருந்தார்கள்.
எந்த ஒரு புலிப் போராளியும், ‘துரோகி| என்ற பதத்தை தாங்குவதற்கு விரும்பாதவன். அடுத்ததாக தேசியத் தலைமைக்கு எதிராகச் செயற்படவும் எவனும் இலகுவில் துணியமாட்டான். ஒவ்வொரு போராளியினதும் இந்த உளவியலைப் பாவித்தே இரத்தம் பெருமளவில் சிந்தாத ஒரு வெற்றியை அன்று கிழக்கில் புலிகள் அமைப்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, கிழக்கில் மாறுவேடங்களில் தலைமறைவாகச் செயற்பட்ட புலிகளின் அரசியல் துறையினர் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகளின் பெயரில் நூற்றுக்ககணக்கான போராளிகளின் பெற்றோர்கள் கருணாவின் மீனகத் தளத்தை முற்றுகையிட்டு, தங்களின் பிள்ளைகளை விடுவிக்கும்படி அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்கள். சிங்கள இராணுவத்தினருடன் போராடவே தாங்கள் தமது பிள்ளைகளை தந்ததாகவும், தமிழர்களுக்கு எதிராக அதுவும் தேசியத் தலைவரின் படைக்கு எதிராகப் போராட தாங்கள் தமது பிள்ளைகளை தரவில்லை என்றும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்கள். திரண்டிருந்த பெற்றோர்களை கலைப்பதற்கு அவர்களின் கால்களின் கீழ் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவேண்டிய அளவிற்கு நிலமை மோசமாகப் போயிருந்தது.

இது இவ்வாறு இருக்க, புலிகள் மேற்கொண்ட நுணுக்கமான உளவியல் நடவடிக்கை காரணமாக, கருணா அணியின் போராளிகள் தரப்பில் இருந்தும் திடீர் திடீர் என்று பல எதிர்புக்கள் கிழம்ப ஆரம்பித்திருந்தன. சில போராளிகள் இரகசியமாக வன்னியில் இருந்த விடுதலைப் புலி தளபதிகளுக்கு விசுவாசமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். பலர் சண்டை பிடிக்க முன்வராத மனநிலையில் காணப்பட்டார்கள். சண்டைகளுக்கு என்று கிழம்பிய போராளிகள் ஆயுதங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தலைமறைவாகிவிடவும் ஆரம்பித்திருந்தார்கள். இதனால் எந்த போராளிகளையுமே நம்ப முடியாத ஒரு நிலை கருணா தரப்பு பொறுப்பாளர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் நெருக்குதல்கள் ஏற்பட, போராளிகளை அவர்கள் இஷ்டப்படி வெளியேற அனுமதிப்பதைத் தவிர ஒரு சந்தர்பத்தில் கருணா தரப்பிற்கு வேறு எந்த மார்க்கமும் இருக்கவில்லை.
11.04.2004 ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் புலிகளின் மீனகம் இராணுவத்தளத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் சாரைசாரையாக வெளியேறி தமது வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.
12.04.2004 திங்கட் கிழமை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களும் விடுதலைப் புலிகளின் கரங்களில் மிக இலகுவாக வீழ்ந்தன.
ஆரம்பம் முதலே விடுதலைப் புலிகளின் தலைமை ஒருவிடயத்தில் தெளிவாக இருந்தது. அதிக இரத்தம் சிந்தாமல், மட்டக்களப்பில் உள்ள போராளிகளுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்புக்கள் எதுவம் ஏற்படாமலேயே மட்டக்களப்பை மீட்கவேண்டும் என்பதே அந்த எண்ணம். புலிகள் மேற்கொண்ட மிகத் திட்டமிட்ட உளவியல் யுத்தமே அந்த எண்ணத்தை ஈடேற்றியிருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

சரி, உளவியல் நடவடிக்கைகள் என்ற இந்த நீண்ட பார்வையில் மற்றொரு முக்கிய பரிமாணத்தை ஆராயவேண்டிய கட்டத்திற்கு தற்பொழுது நாம் வந்திருக்கின்றோம்.
அதாவது, விடுதலைப் புலிகள் மிக மிகத் திறமையாக பல உளவியல் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொண்டிருந்தார்கள் என்று கடந்த வாரங்களில் பார்த்திருந்தோம் அல்லவா? அப்படிப்படிப்பட்ட உளவியல் நடவடிக்கைகளையும் கடந்து சிறிலங்காப் படைகளால் விடுதலைப் புலிகளை எவ்வாறு முறியடிக்க முடிந்தது?
விடுதலைப் புலிகளின் உபாயங்களை எதிர்கொள்ள சிறிலங்கா இராணும் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் என்ன?
இவை பற்றி தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாக ஆராய்வோம்

தொடரும்

பகிரல்

கருத்தை பதியுங்கள்