உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-4) – நிராஜ் டேவிட்

0

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷ் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் விசாரிக்கப்படுவதான வீடியோ காட்சி பற்றி கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.
உலகத் தமிழர் மத்தியில் ஒருவகை உளவியல் பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தோடே அந்த காட்சி சிறிலங்காப் புலனாய்வுப் பிரிவின் உளவியல் நடவடிக்கைப் பிரிவினரால் வெளியே கசியவிடப்பட்டதற்கான சாத்தியம் பற்றியும் கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.
ரமேஷ் என்ற புலிகளின் முக்கிய தளபதி சிங்களப் படையினரிடம் சடணடைந்திருப்பது, அந்தப் படையினரைப்; பார்த்து மிரளுவது, சிங்களப் படையினரிடம் கெஞ்சுவது, இதுபோன்ற காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கின்றது.


ரமேஷ் தொடர்பான அந்த வீடியோக் காட்சி உலகத் தமிழர் மனங்களில் ஏற்படுத்தியிருந்த உளவியல் தாக்கம் பற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக, ரமேஷ் என்ற போராளி தொடர்பான ஒரு சில விடயங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இந்தியப் படையினருடைய ஆக்கிரமிப்பு காலம் முதற்கொண்டு மட்டக்களப்பு வாழ் மக்கள் மத்தியிலும் போராளிகள் மத்தியிலும் மிகவும் பிரபல்யம் பெற்ற ஒருவராகவே ரமேஷ் இருந்து வந்துள்ளார்.
ரமேஷ் இந்தியப் படை காலத்தில் ரீகன் என்ற தளபதியின் தலைமையிலான அணியில் இருந்தபடி போராடிக்கொண்டிருந்தார்.
ரமேஷ் மட்டக்களப்பின் படுவான்கரையிலுள்ள அரசடித்தீவைப் பிறப்பிடமாக் கொண்டவர். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் க.பொ.த. உயர் தரம் படித்துக்கொண்டிருக்கையில் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். படுவான்கரை பிரதேசத்தில் இந்தியப் படையினருக்கு சிம்மசொப்பனமாக இருந்த பல போராளிகளுள் ரமேஷூம் ஒருவர்.
ஒரு சந்தர்ப்பத்தில் மண்முனைத்துறையில் முகாம் அமைத்துத்தங்கியிருந்த இந்தியப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ரமேஷ் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த அவரைப் போராளிகள் வயல் பிரதேசங்களுக்குள் நகர்த்தினார்கள். திக்கோடைப் பிரதேசத்தில் வைத்து அவரது காயங்களுக்கு முதலுதவி அளித்துவிட்டு வாவி ஓரத்தில் அமைந்துள்ள கண்ணாக் காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.

ரமேஷின் இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட அந்தப் படுகாயம் சரியாக பராமரிக்கப்படவில்லை. பராமரிக்கும் வசதிகளும் அப்பொழுது புலிகளிடம் இருக்கவில்லை. நாளாந்த உணவிற்கும், அப்பிரதேசம் முழுவதும் பரவியிருந்த இந்திய ஜவான்களின் கண்களில் இருந்து தப்புவதற்கும் அதிக கரிசனை செலுத்தவேண்டி இருந்ததால், அவர்கள் தமது உடலில் ஏற்பட்ட காயங்கள் பற்றி சிந்திப்பதற்கு நேரம் இல்லாமல் இருந்தது.
கண்ணாக் காடுகள் என்பது மூன்று முதல் ஆறு அடிகள் மட்டுமே உயரமான, செறிவான பற்றைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பின் வாவியை அண்டிய பகுதிகளில் இந்தக் கண்ணாக்காடுகள் பரந்து காணப்படுகின்றன. இந்தப் பற்றைகளின் மத்தியிலேயே அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிப் போராளிகள் மறைந்திருந்து செயற்படுவது வழக்கம்.


இந்தியப் படையினருக்கும் இந்த விடயம் நன்றாகத் தெரியும்.
அவர்களுடன் கூடத்திரிந்த தமிழ் இயக்க உறுப்பினர்கள் இதனை அவர்களுக்கு தெரிவித்திருந்தார்கள்.
ஆனாலும், கண்ணாக் காடுகளுக்குள் மறைந்திருக்கும் புலிப் போராளிகளைக்; குறிவைப்பதில் இந்தியப் படையினருக்குச் சில சிக்கல்கள் இருந்தன. மட்டக்களப்பு முழவதும் குறுக்கு நெருக்காக ஓடிக்கொண்டிருக்கும் வாவிக்கரையை அண்டி பல மீற்றர்கள் பரந்து காணப்படும் கண்ணாக் காடுகளுள் குறிப்பாக எந்தப் பகுதியில் போராளிகள் மறைந்திருக்கின்றார்கள் என்று அவர்களுக்கு அறிந்துகொள்வது கஷ்டம். அடுத்தது கண்ணாக் காடுகளுக்குள் நுழைந்தால், அங்கு பதுங்கி நிலை எடுத்திருக்கும் புலிகளின் துப்பாக்கிக்கு, அல்லது புலிகள் விரித்து வைத்திருக்கும் பொறிகளுக்கு இலகுவாக இரையாகக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. அதனால் புலிகள் மறைந்திருந்த பகுதிகளுக்கு சில அடிகள் தொலைவிற்கு வந்தும்கூட, அங்கு பதுங்கியிருக்கும் போராளிகளை எதுவும் செய்யமுடியாமல் திரும்பிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் அடிக்கடி ஏற்படுவது வழக்கம்.
ஆனாலும் ஒரு வேலையை மட்டும் இந்திய இராணுவத்தினரால் சாதாரணமாகச் செய்யமுடிந்தது. கண்ணாக்காடுகளை அண்டிய பிரதேசங்கள்; வழியாக இந்தியப் படையினர் பயணம் செய்யும் சந்தர்ப்பங்களிலெல்லாம், கண்ணாக்காடுகளை நோக்கி சகட்டுமேனிக்குத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவிட்டு செல்வது வழக்கம். அதிஷ்டவசமாக துப்பாக்கிச் சூட்டில் அப்பட்டு புலிகள் செத்துத் தொலைக்கட்டும் என்பது அவர்களது எண்ணம். சிலவேளைகளில் புலிகள் பதுங்கியிருப்பதாக அவர்கள் சந்தேகித்துவிட்டால், குறிப்பிட்ட அந்தப் பகுதிகளை நோக்கி செல்தாக்குதல்களை மேற்கொண்டு அந்தப் பகுதியையே சுடுகாடாக்கிவிடுவார்கள். இதில் அகப்பட்டு பல போராளிகளும், ஆதரவாளர்களும் கொல்லட்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான ஒரு ஆபத்தான இடத்தில்தான் ரமேஷ் மறைந்திருக்கவேண்டி ஏற்பட்டது.
ரமேஷ் மறைந்திருந்த கண்ணாக் காட்டை அண்டிய பிரதேசத்தில் ஒரு இந்தியப் படைப் பிரிவு வந்து முகாம் அமைத்து தங்க ஆரம்பித்தது. சாதாரணமாகவே இதுபோன்று வரும் காவல் உலா அணிகள், ஏதாவது ஒரு பகுதியில் தங்கிவிட்டு பொழுதுபட்டதும் முகாமிற்கு திரும்பிவிடுவார்கள். ஆனால் அன்று அங்கு வந்த காவல் உலா அணி, சிறிய கூடாரம்; ஒன்றை அமைத்து, அங்கேயே தங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தப் பிரதேசத்தை அண்டிய கிராமத்தில் இந்தியப் படையினர் பாரிய முகாம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டடிருந்தார்கள். அந்த முகாம் அமைத்து முடிக்கும் வரை, முகாம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்குடன், அண்டைய பிரதேசங்களில் பல படைப்பிரிவினர் சிறிய சிறிய முகாம்களை அமைத்து நிலை கொண்டிருந்தார்கள். ரமேஷின் போதாத காலம், அவர் பதுங்கியிருந்த கண்ணாக் காட்டிற்கு அருகிலும் ஒரு இந்தியப் படைப்பிரிவு கூடாரம் அமைத்து நிலைகொள்ள ஆரம்பித்தது.
மிகவும் இக்கட்டான நிலை. சிறிது அசைந்தாலும் இந்தியப் படையினரின் பார்வையில் பட்டுவிடும் அபாயம். உணவு எதுவும் இல்லை. இயற்கை உபாதைகளைக்கூடத் தீர்க்கமுடியாத நிலை. போராளிகள் தமக்குள் பேசிக்கொள்ளமுடியாது. கண்களாலும், சைகைகளினாலும் மட்டுமே தொடர்புகளை பேண முடிந்தது.
இந்தியப் படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிக்கவும் முடியவில்லை. ஏனெனில் புலிகளிடம் கைவசம் சிறிய அளவு அயுதங்களே இருந்தன. ரமேஷ் வேறு படுகாயம் அடைந்து நகர முடியாமல் இருந்தார். அதை விட, இந்தியப் படையினர்மீது தாக்குதல் நடாத்திவிட்டு எங்குமே தப்பிப்போகமுடியாத அளவிற்கு அப்பிராந்தியம் முழுவதும் இந்தியப் படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள்.
ரமேஷின் காயம் மிகமோசமான கட்டத்தை அடைந்தது. எந்தவித சிக்சையும் அளிக்கமுடியாத இக்கட்டான நிலை.
உயிர்போகும் வலி.
வாய்விட்டு முனகக்கூட முடியாத அபாயம்.
சிறு சத்தம் வெளிவந்தால்கூடப் போதும். கூட இருந்த மற்றய போராளிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
அடுத்து என்ன நடக்கும் என்று ஒவ்வொரு கணமும் நகர்ந்துகொண்டிருந்த நேரத்தில், திகைப்பின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும் மற்றொரு சம்பவம் ரமேஷூக்கு ஏற்பட்டது.
எதேச்சையாக தனது காயத்தில் கைவைத்த ரமேஷ் அதிர்ச்சி அடைந்தார்.
தனது இடுப்புக் காயத்தில் இருந்து சிறிய சிறிய புழுக்கள் வெளிவருவதை ரமேஷ் உணர்ந்தார்.
அவருடன் கூடப் பதுங்கியிருந்த மற்றைய போராளிகளுக்கும் தனது நிலையை சைகையால் தெரிவித்தார்.
என்ன செய்வது என்று எவருக்குமே தெரியவில்லை.

இத்தனைக்கும் இந்தியப் படையின் அந்தக் காவல் உலா அணி அந்தப் பகுதியில் கூடாரம் அடித்து தங்க ஆரம்பத்து மூன்று நாட்டகளாகிவிட்டன. பத்துப் பேரடங்கிய அந்த அணி தமது கூடாரத்திற்கு அருகில் தீ மூட்டி சப்பாத்தி தயாரித்து, குறுமா தயாரித்து சாப்பிட்டபடி பொழுதைப் போக்கிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் எப்பொழுது அந்த இடத்தை விட்டு கிழம்புவார்கள் என்பதும் எவருக்கும் தெரியவில்லை.
பதுங்கியிருந்த போராளிகளுக்கு உணவு வசதிகள் எதுவும் இல்லை. கைவசம் இருந்த ஓரிரு பிஸ்கட் பக்கெட்டுகளும் எப்பொழுதோ காலியாகிவிட்டிருந்தன. தண்ணீர் போத்தலிலும் ஒரு சொட்டு நீர் கிடையாது.
ரமேஷ் ஒரு முடிவுக்கு வந்தார்.
சயனைட்டை உட்கொண்டு தன்னை மாய்த்துக்கொள்வதே வலியில் இருந்து மீட்சி பெறுவதற்கும், தன்னுடன் இருந்த மற்றைய போராளிகளைக் காப்பாற்றுவதற்கும் உள்ள ஒரே வழி என்று அவர் நினைத்தார். தனது உயிர்போகும் வலியால் ஒருவேளை தன்னையும் அறியாமல் கத்தித் தொலைத்துவிட்டால், தன்னுடன் தங்கியிருக்கும் மற்றைய போராளிகளின் கதி அதோ கதியாகிவிடும் என்பதே அவரது பிரதான அச்சம்.
சையணைட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கண்களால் விடை கோரினார்.
மற்றயப் போராளிகள் அவசரப்படவேண்டாம் என்று சைகையால் கெஞ்சினார்கள்.
கண்ணாக் காட்டினுள் இப்படி இழுபறி நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், வெளியே ஒரு அதிசயம் நடைபெற ஆரம்பித்தது.
கடந்த மூன்று நாட்களாக அங்கு கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த இந்தியப் படையினர் தமது மூட்டை முடிச்சுக்கள் சகிதமாக அங்கிருந்து கிழம்ப ஆயத்தமானார்கள். அவர்களது பேச்சிலிருந்து மறைந்திருந்த புலிகளால் இதனை உணரக் கூடியதாக இருந்தது.
ரமேசுடன் பதுங்கியிருந்த ஒரு போராளியின் பெயர் முராண்டி (இயற்பெயர் வரதன்). கோவில் போரதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மிகவும் திறமைசாலி. மெதுவாக நகர்ந்து கண்ணாக்காட்டின் எல்லைக்குச் சென்று நிலமையை நோட்டம் விட்டார். திரும்பிவந்து ரமேஷிடம் இந்தியப் படையினர் வெளியேறிக்கொண்டிருக்கும் செய்தியை சைகையால் தெரிவித்தார். ரமேஷிடம் இருந்த சையனைட்டையும் பறித்தெடுத்தார்.
ஒருவாறாக இந்தியப் படையினர் அங்கிருந்து கிளம்பினார்கள்.
அன்று இரவு ரமேஷூம் மற்றைய போராளிகளும் வெளியேறி மாவட்டத்தின் எல்லைக் கிராமம் ஒன்றிக்கு சென்றார்கள். அங்கு தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டு, அயலிலுள்ள சிங்களக் கிராமம் ஒன்றிற்கு பொதுமக்கள் போல் சென்றார்கள். ரமேஷிட்கு அங்கு சிகிட்சை அளிக்கப்பட்டது.
கிழக்கைப் பொறுத்தவரையில் ரமேஷ் என்பவன் ஒரு கதாநாயகன்.
கருணாவின் பிரிவைத் தொடர்ந்து மட்டக்களப்பை மீட்கும் நோக்கோடு விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்களல்லவா? அந்த படை நடவடிக்கையில் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளான சொர்ணம், பாணு, சூசை, தற்பொழுது புலிகளின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கின்ற சுரேஷ் போன்றவர்கள் உட்பட பல சிரேஷ்ட தளபதிகள் நேரடியாக பங்குபற்றியிருந்த பொழுதும், அந்த படைநடவடிக்கையின் கட்டளைத் தளபதியாக விடுதலைப் புலிகளின் தலைமையால் அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு தளபதி ரமேஷ் முக்கியத்துவம் பெற்றிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


அப்படிப்பட்ட ரமேஷ் சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்து, அந்தப் படையினரிம் கெஞ்சிக்கொண்டிருப்பதான காட்சி நிச்சயம் பாரிய உளவியல் தாக்கத்தினை ரமேஷை அறிந்தவர்களுக்கும், ரமேஷ் சார்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பை நேசிப்பவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்ததாக, ஊடகங்களில் வெளியான ரமேஷ் தொடர்பான காட்சிகள் எப்படியான பாதிப்பினை ஏற்படுத்திருந்தது என்பதை அறியும் நோக்கோடு, ரமேஷை அறிந்த, அவருடன் நெருங்கிப் பழகிய, பலரைத் தொடர்புகொண்டு இந்தச் சம்பவம் தொடர்பான ஒரு கருத்துப் பகிர்வை மேற்கொண்டேன்.
அவர்களிடம் இணர்டு கேள்விகளைக் கேட்டேன்.
1. ரமேஈ; தொடர்பான வீடியோக் காட்சி உங்களுக்கு எப்படியான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது?
2. எங்கே அந்த வீடியோ காட்சியைப் பார்த்தீர்கள்?
இது தொடர்பாக அவர்களுடன் பேசிய பொழுது, அவர்களில் பலரை அந்தக் காட்சி உளவியல் ரீதியாகப் பலவீனமடைய வைத்திருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி என்னால் உணரக்கூடியதாக இருந்தது.
பலர் பல நாட்கள் துக்கமின்றி இருந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த வீடியோக் காட்சியைத் தாம் திரும்பத் திரும்ப பார்த்ததாகவும், பல நாட்கள் அந்தக் காட்சி தமது கண்களை விட்டு அகலாமல் இருந்ததாகவும் தெரிவித்தார்கள்.
சிலரோ விடுதலைப் புலிகள் தொடர்பாக தங்களது மனங்களில் இருந்த கம்பீரம், இந்தச் சம்பவத்தைப் பார்த்ததன் பின்னர் சிறிய அளவிலாவது குறைந்துவிட்டிருந்ததை ஒப்புக்கொண்டார்கள். எதிரியிடம் சரணடைந்த பல போராளிகளுக்கு தண்டணை வழங்கிய செயலைச் செய்த தளபதிகளே எதிரியிடம் மண்டியிடுவது போன்ற காட்சி ஒருவகை விரக்தியை ஏற்படுத்தியதாக பலர் கூறினார்கள்.
சிலருக்கு இனம் புரியாத அச்சம் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்கள்.
மொத்தத்தில் இந்தக் காட்சி உலகத் தமிழர் மனங்களில் ஒருவித உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்திவிட்டிருந்தது என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
ஏனென்றால் ரமேஷ் என்கின்ற தளபதியை அறிந்தவர்களுக்கு அவரது கம்பீரம், கட்டுப்பாடு, செயல், போர்குணம் போன்ற விடயங்களில் ஒரு கதாநாயகனாகத்தான் அவர் இருந்திருக்கின்றார். அப்படிப்பட்ட ரமேஷ் கூணிக், குறுகி எதிரியிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் காட்சியை எவராலும் இலகுவில் ஜீரணிக்க முடியவில்லை.
அடுத்ததாக, இந்த வீடியோக் காட்சியை எங்கே பார்த்தீர்கள் என்ற கேள்விக்கு, அனேகருடையது அல்ல – அனைவரது பதிலுமே: தமிழ் தேசிய ஊடகங்கள் என்றே வந்ததே.
நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அனைவருமே ரமேஷ் தொடர்பான காட்சியை தமிழ் தேசிய ஊடகங்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இணையத் தளங்கள், தமிழருக்குச் சார்பாக, தமிழர் நலனில் அக்கறைப்படும் ஊடகங்கள் என்பனவற்றில்தான் தாம் பார்த்ததாகத் தெரிவித்திருந்தார்கள்.
ஆக மொத்தத்தில், ரமேஷினுடைய இந்த வீடியோக் காட்சி விடையத்தில் மூன்று முக்கிய விடயங்களை இங்கு நான் சுட்டிக் காண்பிக்க விரும்புகின்றேன்.
முதலாவது: உலகத் தமிழர் மனங்களில் பல்வேறு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு எதிரியானவன் ஒரு வீடியோக் காட்சியை வெளியிட்டுள்ளான்.
இரண்டாவது: அந்த வீடியோக் காட்சி உலகத் தமிழர் மத்தியில் பல்வேறு உளவியல் தாக்கத்தினை ஏற்படுத்தத்தான் செய்தது.
மூன்றாவது: எதிரியின் அந்த உளவியல் யுத்தத்தை தம்மை அறியாமல் எமது தமிழ் தேசிய ஊடகங்களே முன்னெடுத்து இருக்கின்றன.

நாம் மிகவும் அக்கறைப்பட்டு பார்க்கவேண்டிய விடயம் இது.
‘ஊடக தர்மம், அறிந்துகொள்ளும் உரிமை, அறிவிக்கவேண்டிய கடமை, நாம் வெளியிடாவிட்டாலும் எதிரி வேறு வழியாக வெளியிடத்தானே செய்வான்’ -என்பதுபோன்ற பல வாதங்களை நீங்கள் முன்வைக்கலாம்.
நானும் அதில் உடன்படுகின்றேன் ஒரு ஊடகவிலயாளனாக.
ஆனால் எமது எதிரி எம்மை நாசமாக்கும் நோக்குடன் எமக்கு எதிராக மேற்கொள்ளுகின்ற ஒரு உளவியல் போருக்கு, எமது ஊடகங்களே வலுச்சேர்ப்பது போன்று செயற்படுவது சரியா என்று எழுகின்ற கேள்விக்கு, என்னால் சரியான பதிலைக் கூறமுடியாமலே இருக்கின்றது ஒரு தமிழனாக.
இப்படியான ஒரு சூழ்நிலையில் எமது ஊடகங்கள் எப்படிச் செயற்பட வேண்டும்?
உலகத் தமிழரைக் குறிவைத்து எதிரிகள் மேற்கொள்ளும் உளவியல் போரை நாம் எப்படி முறியடிக்கலாம்?
எதிரி மேற்கொள்ளும் உளவியல் நடவடிக்கைகளுக்கு எமது தமிழ் ஊடகங்களையே அவன் பயன்படுத்துவதை எப்படி நாம் தவிர்க்கலாம்?
இதுபோன்று பலரது மனங்களில் எழும்பும் கேள்விகளுக்கு பதிலைத் தேடுவதானால், முதலில் உளவில் நடவடிக்கை என்றால் என்ன என்று எமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படும் உளவியல் நடவடிக்கைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றி நாம் சரியாக அறிந்து வைத்திருக்கவேண்டும்.
எதிர்வரும் வாரங்களில் இவை பற்றித்தாம் ஆராய இருக்கின்றோம்.
உலக சரித்திரித்தில், முக்கியமான யுத்தங்களில் ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள்…..
ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்….
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் மற்றும் அதனது உளவுப் பிரிவான ஆய்வுப் பகுப்பாய்வுப் பிரிவு (Research and Analyze Wing -RAW) மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்….
1ம் கட்டம் முதல் 4ம் கட்டம் வரையிலான ஈழ யுத்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள்…
இவைகள் பற்றித்தான் அடுத்த வாரம் முதல் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்
தொடரும்..

 

பகிரல்

கருத்தை பதியுங்கள்