உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-5) – நிராஜ் டேவிட்

0

வன்னியில் யுத்தம் மிகக் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டம்.
அந்த நேரத்தில் புலம்பெயர் தேசங்களில் இயங்கிய அனேகமான தொலைக்காட்சிச் சேவைகள், வானொலிகள், பத்திரிகைகள், இணையத் தளங்கள் என்று புலம் பெயர் தமிழர்களால் நடாத்தப்பட்ட அனைத்து ஊடகங்களும் மிகவும் மும்முரமாக சில காரியங்களைச் செய்துகொண்டிருந்தன.
புலம் பெயர்ந்த நாடுகளில் ஆயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் ஈழத் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான ஒருகிணைப்பை இந்த ஊடகங்கள் கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தன.
புலம்பெயர் தேசங்களில் ஈழத் தமிழ் ஆதரவுத் தளத்தைத் தக்கவைத்திருப்பதற்கான காரியங்களை இந்த ஊடகங்கள் மிகவும் செம்மையாகச் செய்துகொண்டிருந்தன. வதந்திகள் பரவாமல் தடுத்தது, களத்தையும் புலத்தையும் இணைத்துவைத்திருந்தது- என்று தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக பலவிதமான பணிகளை புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் செய்திருந்தன.
இவை அனைத்தையும் கடந்து, இந்தக் காலப் பகுதிகளில் ஒரு முக்கிய பணியையும், புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் செய்துகொண்டிருந்தன.


அதுதான் ‘உளவியல் நடவடிக்கைகள்’ (Psychological Operations)
யுத்த காலப்பகுதியில் எதிரிக்கு எதிராக தமிழ் ஊடகங்கள் செய்த உளவியல் நடவடிக்கைகள் என்பது வெளியில் தெரியாதவைகள்.
ஆனால் ஆக்கபூர்வமானவை.
தமிழர் தரப்பு நடாத்திய போராட்டத்திற்கு மிகவும் இன்றியமையாதவை.
Psycops- Psychological Operations அல்லது Psychological War என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற இந்த உளவியல் யுத்தத்தை தமிழ் ஊடகங்கள் எவ்வாறு மேற்கொண்டன, அந்த உளவியல் யுத்தத்தை மேற்கொள்வதில் தமிழ் ஊடகங்கள் எந்தனை தூரம் வெற்றிகண்டன என்பன பற்றித்தான் முதலில் நாம் ஆராய இருக்கின்றோம்.

இந்த விடயம் பற்றி விரிவாக நாம் பார்ப்பதற்கு முன்னதாக, ஒரு முக்கிய உண்மையை நாம் நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும். புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் வெளியாகின்ற அத்தனை விடயங்களும், அந்தந்த நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரங்களினாலும், சிறிலங்கா ஆதரவுக்; குழுக்களினாலும் கச்சிதமாகப் பதிவு செய்யப்பட்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறிலங்கா அரச மற்றும் இராணுவத்தின் தீர்மானம் எடுக்கம் சக்திகளுக்கு அனுப்பிவைக்ககப்பட்டுக்கொண்டிருந்தன. அதாவது புலம் பெயர் தேசங்களில் வெளிவந்த விடையங்கள் அனைத்துமே, எமது மக்களுக்குச் சென்றடைந்தன என்பதற்கு அப்பால், எமது எதிரிக்கும் சென்றடைந்தகன என்கின்ற உண்மையை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் உள்வாங்கிக் கொண்டு, உளவியல் போர் என்கின்ற விடயத்திற்குள் நுழைவோம்.

உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்ற ஒரு அம்சமும் இருக்கின்றது. அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psychological Operations) இருக்கின்றது.
குறிப்பிட்ட இந்த உளவியல் நடவடிக்கையை போரிடுகின்ற அனைத்துத் தரப்புக்களுமே செய்வது வளக்கம்.


மிகப் பெரிய போர் வலுக்கொண்ட அமெரிக்கா கூட, எதிரிக்கு பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதான உளவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அப்கான் மற்றம் ஈராக் யுத்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஒப்பீட்டளவில் அமெரிக்காவை விட பல ஆயிரம் மடங்கு குறைந்த படைவலுவைக்கொண்ட அப்கானிஸ்தான் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் யுத்தம் புரியச் செல்லமுன்னதாகவே, அமெரிக்கா அப்கானிஸ்தானில் தான் பாவிக்க இருக்கும் நவீன ஆயுதங்கள் பற்றி பிரச்சாரத்தை செய்யத் தொடங்கியிருந்தது. அப்பானிஸ்தானில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்னதாகவே, அமெரிக்காவின் இந்த ஆயுத விபரங்கள் அப்கானில் போராடும் தலிபான்களுக்குச் சென்றடையவேண்டும் என்பதில் அமெரிக்க உளவியல் பிரிவினர் மும்முரமாக இருந்தனர். அப்கானிஸ்தானின் டோராபோரா மலைப் பகுதிகளில் மறைந்திருக்கும் தலிபான்களையும், அல்கைதா உறுப்பினர்களையும் அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பான ‘டெஸ்சி கட்டர்'(Daisy Cutter) என்கின்ற குண்டுகள் எப்படித் தாக்கி அழிக்கப்போகின்றன என்று விபரித்து செய்திப்படம் தயாரித்து வெளியிட்டிருந்தார்கள்.
எதிரிக்கு அச்சத்தை, திகைப்பை, பிரமிப்பை ஏற்படுத்தி, எதியின் உளவியலைச் சிதைப்பதென்பது, உளவியல் போரின் ஒரு முக்கிய செயற்பாடு.

இந்த வகை உளவியல் நடவடிக்கை இந்த நவீன உலக யுத்தங்களில் மாத்திரம் உபயோகிக்கப்படுத்தப்படுவதில்லை. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பதாகவே, எதிரிக்கு திகைப்பை, குழப்பத்தை ஏற்படுத்தி எதிரியின் உளவியலைக் குறிவைக்கும் நடவடிக்கைகளை மாகா அலெக்சாந்தர் (Alexander the Great of Macedonia) மேற்கொண்டதாக, சரித்திரம் தெரிவிக்கின்றது.
கிறிஸ்துவுக்கு முன்னர் 323ஆம் ஆண்டு காப்பகுதிகளில் உலகத்தின் பல பாகங்களையும் வெற்றிகொண்ட மாபெருவீரனும், போரியல் மேதையுமான மகா அலெக்சாந்தர், எதிரிக்கு திகைப்பை ஏற்படுத்தம் உளவியல் நடவடிக்கையை மேற்கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
உலகின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியபடி அலெக்சாந்தர் முன்னேறிக்கொண்டிருந்த போது, தாம் கைப்பற்றி நிலப் பிரதேசங்களில் தனது படை அணியின் சில பிரிவினரை நிறுத்தி விட்டே முன்னேறிக்கொண்டிருந்தார். கைப்பற்றிய பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காகவே அவர் இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தார். பல நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்த அலெக்சாந்தர் ஒரு சந்தர்ப்பத்தில் தனது நிலமை மோசமான ஒரு கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை உணரத் தலைப்பட்டார். கைப்பற்றிய நிலங்களைப் பாதுகாப்பதற்கென்று பல நாடுகளிலும் ஏராளமான படைவீரர்களை நிறுத்திவிட்டு வந்ததால், அவர்வசமிருந்த படைவீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்து காணப்பட்டதை அவர் உணர்ந்தார்.
இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் எதிரி தமது தரப்பு மீது தாக்குதலை மேற்கொண்டால், தம்மால் சமாளிக்கமுடியாத ஒரு நிலை ஏற்பட்டு விடும். தற்பொழுது உள்ளது போன்று தெலைத் தொடர்பின் மூலம் தொடர்புகொண்டு மேலதிக துருப்புக்களை வரவளைக்க முடியாது. அலெக்சாந்தரின் காலப்பகுதியோ கி.மு. 353 முதல் 323 ஆண்டு காலப்பகுதி. அலெக்சாண்டர் தீர்மானித்தார்.


கைப்பற்றிய சில இடங்களை விட்டு பின்வாங்குவதென்று தீர்மனித்தார்.
அதிலும் ஒரு சிக்கல்,
முன்னேறிவந்த அலெக்சான்டரின் படைகள் பின்வாங்குகின்றதென்ற செய்தி எதிரிக்குக் கிடைத்தால், அலெக்சாண்டர் படைகளின் பலவீனம் எதிரிக்குத் தெரிந்துவிடும். பின்வாங்குகின்ற அலெக்சாந்தரின் சிறிய எண்ணிக்கையயினாலான படைகளைத் துரத்திவந்து எதிரி தாக்க முற்பட்டால், பாரிய ஆபத்து ஏற்பட்டுவிடும்.
உடனே அலெக்சாந்தர் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். எதிரிக்கு ஆச்சரியத்தையும், அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தக் கூடியதான ஒரு உலவியல் நடவடிக்கையை எதிரி மீது மேற்கொண்டார் அலெக்சாந்தர்.
உலகப் போரியல் வரலாற்றில் பதிவாகியுள்ள முதலாவது உளவியல் நடவடிக்கை என்று அந்த நடவடிக்கையைக் குறிப்பிடலாம்.
அலெக்சாண்டர் ஒரு உத்தரவை தனது கவசத் தயாரிப்பாளர்களுக்கு இட்டார். சுமார் 7- 9 அடி மனிதர்கள் அணியக் கூடியதான கவசங்களையும், தலைக் கவசசங்களையும், பாரிய வாழ்களையும், தயார்செய்யம்படி உத்தரவிட்டார். அவ்வாறு தயார் செய்யப்பட்ட கவசங்களை கைவிட்டுவிட்டு, அலெக்சாண்டர் படைகள் பின்வாங்கின.
அலெக்சான்டரின் படைகள் கைவிட்டுச் சென்ற கவசங்களையும், ஆயுதங்களையும் கண்ட எதிரிப் படைகள் ஆச்சரியப்பட்டன. மகா அலக்சாண்டரின் படைகள் என்பது பூதங்களைப் போர் வீரர்களாகக் கொhண்ட படை என்று நினைத்து நடுநடுங்கின. இப்படிப்பட்ட படைகளுடன் சண்டை பிடிப்பது தமது அழிவுக்கே வழிகோலும் என்று அச்சப்பட்ட எதிரிப் படைகள், பின்வாங்கிச் சென்ற அலெக்சாண்டரின் சிறிய படையைத் துரத்திச் சென்று தாக்கத் தணியாமல், அப்படியே நின்றுவிட்டன.
எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பது ஒரு முக்கிய உளவியல் போர்.
இந்த உளவியல் போரினைத்தான் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் யுத்த காலங்களில் மேற்கொண்டிருந்தன.
வன்னியில் விடுதலைப் புலிகள் பாரிய முற்றுகைக்குள் உள்ளாகி, தோல்வி தமிழர் தரப்பை நெருங்கிக்கொண்டிருந்த நேரங்களில், விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலுக்குத் தயராகிக் கொண்டிருக்கின்றார்கள், இதோ அடிக்கப் போகின்றார்கள், ஸ்டாலின்கிராட் யுத்தம் போன்ற ஒன்றை மேற்கொண்டு வன்னியில் கால் பதிக்கும் அத்தனை சிறிலங்காப் படையினரையும் அழித்துவிடத் தயாராகின்றார்கள் என்று செய்திகளைக் கசியவிட்டார்கள். எதிரியை அச்சுறுத்தினார்கள்.
விடுதலைப் புலிகளின் பலம், பலவீனம் பற்றிய கச்சிதமான தகவல்கள் உள்ளிருந்தும், மேற்குலகப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்தும், சிறிலங்காப் படையினருக்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த போதிலும், புலிகளின் உண்மையான நிலவரம் பற்றிய தெளிவான பிம்பங்களை பல்வேறு நாடுகளின் செயற்கைக்கோள்கள் தொடர்ந்து வினியோகித்துக்கொண்டிருந்த போதிலும், விடுதலைப் புலிகளின் உயர் பீடங்கள் மேற்கொண்ட செய்மதித் தொலைபேசி உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் பதிவுசெய்யப்பட்டு செய்மதி நிறுவனங்களால் எதிரிக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலும்;, புலம்பெயர் ஊடகங்களில் வெளியாகின்கொண்டிருந்த பிரமிப்பை ஏற்படுத்தும் செய்திகள் சிறிலங்காப் படையினரின் வேகமான நகர்வுகளை ஓரளவாவது தாமதப்படுத்தியிருந்ததை, சிறிலங்காப் படையதிகாரிகள் பின்நாட்களின் ஒப்புக்கொள்ளவே செய்திருந்தார்கள்.
யாழ்க்குடாவை மீட்கும் நோக்கோடு, நோமண்டித் தரையிறக்கம் போன்ற ஒரு கடல்வளித் தரையிறக்கத்தை விடுதலைப் புலிகள் செய்வதற்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள் என்று புலம் பெயர் ஊடகங்களில் வெளியான செய்தியும், அதற்காகவே ஷயாழ்செல்லும் படைஅணி| என்ற பெயரில் பல ஆயிரம் போராளிகளை புலிகள் தாயர் நிலையில் வைத்திருக்கின்றார்கள் என்ற தகவலும் சிறிலங்கா தேசத்தை போரின் இறுதிக்கட்டம்வரை அச்ச நிலையிலேயே வைத்திருந்தது.
கிளிநோச்சியை சிறிலங்காப் படைகள் ஆக்கிரமிக்கும் வரையில் சுமார் 40000 துருப்புக்களை யாழ்மண்ணில் சிறிலங்காப் படையினர் வெறுமனே நிறுத்திவைத்திருந்தது, இந்த யாழ் செல்லும் படை அணி தொடர்பாக வெளியான செய்தி காரணமாகத்தான்.


செய்தி ஊடகங்களைப் பாவித்து எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பது ஒரு முக்கிய உளவியல் போர். இந்தப் போரியை யுத்த காலங்களில் புலம்பெயர் தமிழ் ஊடகங்களில் அனேகமானவை கச்சிதமாகச் செய்திருந்தன என்பதில் சந்தேகம் இல்லை.
யுத்த காலங்களில் எதிரியைக் குழப்பி, எதிரியை அதிpர்ச்சியடைய, பலமிழக்கவைக்கும் உளவியல் நடவடிக்கைகளை, உலகச் சரித்திரத்தில் பல ஊடகங்கள் செய்திருக்கின்றன.
உலகப் பிரசித்தி பெற்றி பீ.பீ.சி கூட, 2ம் உலக மகா யுத்த காலத்தில் இதுபோன்ற உளவியில் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.
வியட்னாம் யுத்தத்தின் போது அமெரிக்கா படுதோல்வி அடைவதற்கு வியட்னாம் வானொலி மேற்கொண்ட உளவியல் யுத்தமே காணம் என்றும் போரியல் ஆய்வாரள்கள் கூறுகின்றார்கள்.
ஈழத் தமிழழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துவிட்டுள்ள இன்றைய நிலையில், இந்த அடுத்த கட்டப் போராட்டத்தில் உளவியல் நடவடிக்கைகள் நிச்சயம் முக்கியமான பங்கினை வகிக்கப்போகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்படுகின்ற உளவியல் நடவடிக்கைகள் பற்றி, அடுத்த வாரம் முதல் விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்..

பகிரல்

கருத்தை பதியுங்கள்