உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-7) – நிராஜ் டேவிட்

0

உளவியல் நடவடிக்கைகள் அல்லது உளவியல் யுத்தம் என்கின்ற விடயம் பற்றி சற்று விரிவாக இப்பத்தியில் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.

Psycops- Psychological Operations என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற உளவியல் யுத்தத்தை ஊடகங்கள் எவ்வாறு மேற்கொண்டன, கடந்த காலங்களில் அந்த உளவியல் யுத்தத்தை மேற்கொள்வதில் ஊடகங்கள் எந்தனை தூரம் வெற்றிகண்டன என்பன பற்றி ஆராய்ந்து வருகின்றோம்.

உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்ற ஒரு அம்சமும் இருக்கின்றது என்று கடந்த வாரம் பார்த்திருந்தோம்..
அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய அம்சம் உளவியல் நடவடிக்கையில் (Psycops- Psychological Operations ) இருக்கின்றது.
குறிப்பிட்ட இந்த உளவியல் நடவடிக்கையை போரிடுகின்ற அனைத்துத் தரப்புக்களுமே செய்வது வளக்கம்.

கிறிஸ்துவுக்கு முன்னர் 323ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் உலகத்தின் பல பாகங்களையும் வெற்றிகொண்ட மாபெரும் வீரனும், போரியல் மேதையுமான மகா அலெக்சாந்தர் (Alexander the Great of Macedonia), எதிரிக்கு திகைப்பை ஏற்படுத்தும் உளவியல் நடவடிக்கையை எவ்வாறு மேற்கொண்டார் என்று இந்த தொடரில் முன்னர் பார்த்திருந்தோம்.
அதேபோன்று, 1162 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரசித்தி பெற்ற ஆட்சியையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொண்டு சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த மொங்கோலியத் தலைவர் கெங்கிஸ்கான், இந்த வகையிலான உளவியல் யுதத்தினை எவ்வாறு மேற்கொண்டார் என்றும் பார்த்திருந்தோம்.
அதேபோன்று அப்கானிஸ்தான் யுத்தத்தின் போது அமெரிக்கா எவ்வாறு உளவியல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது என்றும் பார்த்திருந்தோம்.

இதேபோன்று, யுத்த காலங்களில் தமிழ் ஊடகங்கள் மேற்கொண்ட உளவியல் யுத்த நடவடிக்கை பற்றியும் மேலோட்டமாக ஆராய்ந்திருந்தோம்.

புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களில் வெளியாகின்ற அத்தனை விடயங்களும், அந்தந்த நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரங்களினாலும், ஒட்டுக் குழுக்களினாலும் கச்சிதமாகப் பதிவு செய்யப்பட்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டு சிறிலங்கா அரச மற்றும் இராணுவத்தின் தீர்மானம் எடுக்கம் சக்திகளுக்கு அனுப்பிவைக்ககப்பட்டுக்கொண்டிருந்தன. அதாவது புலம் பெயர் தேசங்களில் வெளிவந்த விடையங்கள் அனைத்துமே, எமது மக்களுக்குச் சென்றடைந்தன என்பதற்கு அப்பால், எமது எதிரிக்கும் சென்றடைந்தன.

இதனைப் பயன்படுத்திக்கொண்டு, புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் பலவிதமான உளவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. தற்பொழுதும் மேற்கொண்டு வருகின்றன. இதே நடவடிக்கையை எமது எதிரிகளும் தமிழ் ஊடகங்களைப் பாவித்து எமக்கெதிராக மேற்கொண்டு வருகின்றார்கள்.
தமிழ் ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உளவியல் யுத்த நடவடிக்கைகள் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், மற்றும் சில முக்கிய உளவியல் நடவடிக்கள் பற்றிய உதாரணங்களைப் பார்ப்பது அவசியம் என்று நினைக்கின்றேன்.

எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பதான முக்கியமான உளவியல் போரினை சர்வதேச செய்தி ஊடகங்கள் எப்படிச் செய்தன என்பது பற்றித்தான் தொடர்ந்து நாம் விரிவாகப் பார்க்க இருக்கி;றோம்.

செய்தி ஊடகங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள் என்று கூறும்பொழுது, போரியல் பதிவுகளில் கனோய் கன்னா(Hanoi Hannah), மற்றும் டோக்கி ரோஸ் ((“Tokyo Rose”) என்கின்ற பெயர்கள் மிகவும் பிரபல்யம் பெற்றன.
இந்த இரண்டு பெயர்களினாலும் மேற்கொள்ளப்பட்ட உளவியல் நடவடிக்கைகள், யுத்தக் களமுனைகளில் ஏற்படுத்திய தாக்கங்கள், இந்த இரண்டு பெயர்களுக்கும் உளவியல் போர் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்துக்கொடுத்திருந்தன.

இரண்டாம் உலக யுத்த காலங்களில் டோக்கி ரோஸ் ((“Tokyo Rose”) என்கின்ற ஜப்பானியப் பெண்ஊடகவியலாளர் மேற்கொண்ட உளவியல் போர், அந்த நேரத்தில் ஜப்பானுக்கு எதிpராகப் போரிட்ட அமெரிக்க மற்றும் நேசநாட்டுப் படையினர் மத்தியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோன்று, வியட்னாம் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில், கனோய் கன்னா(Hanoi Hannah), என்ற பெண் ஊடகவியலாளர் மேற்கொண்டிருந்த உளவியல் போர், உலகின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவம், வியட்னாமின் வியட்கொங் கெரிலாக்களிடம் படுதோல்வியைச் சந்திக்கக் காரணமாக இருந்ததாக, போரியல் ஆய்வுகள் தொரிவிக்கின்றன.

செய்தி ஊடகங்களைப் பாவித்து எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பதான முக்கியமான அந்த உளவியல் போரினை, இந்த கனோய் கன்னா, மற்றும் டோக்கி ரோஸ் போன்ற ஊடகவியலாளர்கள் எப்படி மேற்கொண்டார்கள் என்பது பற்றித்தான் நாம் இன்றைய கள நிலவரத்தில் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.


கனோய் கண்ணா – வியட்னாமில் அமெரிக்கப்படைகள் ஆக்கிரமிப்பினை மேற்கொண்டிருந்த காலப்பகுதிகளில் இந்தப் பெயர் மிகவும் பிரபல்யமானது.
வியட்னாமியப் பெண்ணான கனோய் கண்ணாவின் பெயர் வியட்னாமியர்கள் மத்தியில் பிரபல்யமானதைவிட, அமெரிக்கப் படையினர் மத்தியில்தான் அந்த நேரத்தில் மிக மிகப் பிரபல்யமாகியிருந்தது. அமெரிக்கப் படையினரின் உளவியலை ஒரு கலக்குக் கலக்கிய ஒரு பெண்ணாக, இந்தப் பெண் வியட்னாமை ஆக்கிரமித்து நின்றுகொண்டிருந்த அமெரிக்கப்படையினர் மத்தியில் மிகவும் பிரபல்யமாகியிருந்தார்.
அப்படி என்னதான் இவர் செய்தி ஊடகங்கள் வாயிலாகச் செய்திருந்தார்?
ட்ரீன் தீ இன்கோ (Trinh Thi Ngo) என்ற சொந்தப் பெயரைக்கொண்ட இந்த இளம் பெண் ஊடகவியலாளர், நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்தவர். 1967ம் ஆண்டளவில் வியட்னாமின் மீது அமெரிக்கப்படைகளின் ஆக்கிரமிப்பு இடம்பெற்றிருந்த காலப்பகுதியில், வியட்னாமின் கனோய் வானொலி (Radio Hanoi) சேவையில் இவர் ஒலிபரப்பாளராகக் கடமையாற்றினார்.
அந்த நேரத்தில் இப்பொழுது உள்ளது போன்று, பல அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகும் வானொலிகள், இணையத்தளங்களில் ஒளிபரப்பாகும் வானொலிகள், செய்மதிகள் ஊடாக ஒலிபரப்பாகும் வானொலிகள்- என்று, பலவிதமான, பல எண்ணிக்கைகளிலான வானொலி சேவைகள் கிடையாது. மிக மிக சில எண்ணிக்கையில்தான் வானொலி சேவைகள் இருப்பது வளக்கம். வியட்னாமிலும், ஆங்கில மொழியில் ஒளிபரப்புக்களை மேற்கொண்ட ஒரே வானொலி இந்த ‘ரேடியோ கனோய்’ மட்டும்தான்.
எனவே வியட்னாமில் ஆக்கிரமிப்பு மேற்கொள்ளவென வந்திருந்த அமெரிக்கப் படை வீரர்கள் ‘ரேடியோ கனோய்’ என்ற வானொலியை விரும்பிக் கேட்கும் நிலை காணப்பட்டது.


இந்த வானொயில் சர்வதேச ரீதியாகப் பிரபல்யமான ஆங்கிலப் பாடல்கள் ஒலிபரப்பாகும், அந்த பாடல்களின் பின்னணியில், கனோய் கண்ணாவின் கணீரென்ற குரலில் செய்திகளும், செவ்விகளும்;, ஒலிபரப்பாகும்.
இந்த வானொயின் விசேடம் என்னவென்றால், வியட்னாமில் அமெரிக்கப் படையினருக்கு எதிராக வியட்கொங் போராளிகள் ஒரு தாக்குதலை நடாத்தினால், அந்த தாக்குதல் இடம்பெற்ற சிலமணி நேரங்களில், அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட அல்லது படுகாயமடைந்த அமெரிக்கப்படை வீரர்களின் பெயர், அவர்களது இhணுவப் பதவி நிலை போன்ற விபரங்களை கனோய் கண்ணா, வானொலியில் வெளியிட்டுவிடுவார். அதிசயிக்கத்தக்க விதமாக, கனோய் கண்ணா வெளியிடும் விபரங்கள் சரியானதாகவே அமைந்துவிடும்.
இது, கனோய் கண்ணா பற்றிய நம்பகத்தன்மையை அமெரிக்கப்படையினருக்கு ஏற்படுத்தியிருந்தது.
போர் முனையில் நிற்கும் படையினருக்கு உளவியல் சோர்வு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமது தரப்பு இழப்புக்களை அமெரிக்க இராணுவத்தலைமை மறைத்துவந்த காலத்தில், கனோய் கண்ணா வெளியிட்ட கச்சிதமாக தகவல்கள், கனோய் கண்ணாவை நோக்கி அமெரிக்கப்படை வீரர்களின் கவனத்தை மிக வேகமாக ஈர்க்க ஆரம்பித்தது.
சில சந்தர்பங்களில் அமெரிக்க படை நிலைகள் மீது வியட்கொங் கெரில்லாக்கள் தாக்குதலை மேற்கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே, கனோய் கண்ணா தாக்குதல் நடக்கப்போகின்றது என்கின்ற தகவலை வெளியிட்டுவிடுவார். இது, காலப்போக்கில் அமெரிக்க இராணுவ உயரதிகாரிகளைக் கூட, கனோய் கண்ணா கூறுவதைக் கேட்கக் காத்திருக்கும் ஒரு நிலையை உருவாக்கியிருந்தது.
இப்படியாக, அமெரிக்கப் படை வீரர்கள், படைத்துறை உயரதிகாரிகள் போன்றவர்களின் ஒட்டுமொத்தக் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், அந்தத் தரப்புக்களைக் குறிவைத்து கனோய் கண்ணா மிக முக்கியமான உளவியல் போரினை மிக நளினமாக ஆரம்பித்தார்.


அதாவது, வியட்னாமில் அமெரிக்கப்படைகள் மேற்கொண்டுவருகின்ற யுத்தம், நியாயமற்ற ஒரு யுத்தம் என்பதை அமெரிக்கப் படைவீரர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் கனோய் கண்ணா கூறினார்.
அந்த தேவையில்லாத, நியாயமற்ற யுத்தத்திற்காக அமெரிக்க வீரர்கள் அநியாயமாக உயிரைப் பலிகொடுக்கின்றார்கள் என்கின்ற அக்கறையையும், கனோய் கண்ணா, தனது வசீகரிக்கும் குரலினூடாக வெளிப்படுத்தியிருந்தார்.
அமெரிக்கப்படைகள் உயிருடன் தமது காதலிகளைச் சந்திக்கச் செல்லவேண்டும் என்ற தனது வாஞ்சையை அவர் அடிக்கடி வெளிப்படுத்தினார்.
இது வெல்லமுடியாத ஒரு யுத்தம் என்பதை, தனது திறமைகளினூடாக கனோய் கண்ணா அமெரிக்கப்படை வீரர்களுக்கு நிருபித்தார்.
இது, அமெரிக்கப் படைவீரர்கள் மத்தியில் பாரிய உளவியல் சோர்வினைக் கொண்டு வந்தது. தாம் வீனாகச் சண்டைபிடித்து மடியாமல், தமது உறவுகளைப் பார்ப்பதற்காக நாடுதிரும்பவேண்டும் என்கின்ற தமது எண்ணம் ஒவ்வொரு படை வீரர் மனங்களிலும் ஏற்பட்டது.
அமெரிக்கப்படை வீரர்களின் மனங்களில் ஏற்பட்ட இந்த உளவியல் தாக்கம், களமுனைகளில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. படிப்படியாக அமெரிக்கப் படைகள் தோல்வின் பாதையில் பயனிக்க ஆரம்பித்தார்கள்.
அமெரிக்காவின் போரியல் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு தோல்வியை சந்தித்த ஒரு யுத்தம் என்றால், அது வியட்னாம் யுத்தம்தான்.
அந்த வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவைப் தோல்வியடைய வைத்த பல காரணிகளுள், செய்தி ஊடகத்தைப் பாவித்து கணொய் கண்ணா மேற்கொண்ட அந்த உளவியல் யுத்தமும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எதிரிக்குத் திகைப்பினை ஏற்படுத்தி, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைக் குழப்பி, எதிரியின் உளவியலைச் சிதைப்பதென்பதான முக்கியமான உளவியல் போரினை ;ஜப்பானிய பெண் ஊடகவியலாளர் ஒருவரும் செய்தி ஊடகம் ஒன்றைப் பாவித்து வெற்றிகரமாகச் செய்திருந்தார். இரண்டாம் உலகமகா யத்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த உளவியல் யுத்தம் பற்றியும், இதே பாணியில் உலகப் பிரசித்தி பெற்ற பீ.பீ.சி. மேற்கொண்ட மற்றொரு உளவியல் நடவடிக்கை பற்றியும் அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம்.
தொடரும்..

பகிரல்

கருத்தை பதியுங்கள்