காடுகளின் மத்தியில் இரகசிய முகாம்

0

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-110) – நிராஜ் டேவிட்

விடுதலைப் புலிகளின் தலைவரைக் கைதுசெய்யும் – அல்லது கொலைசெய்யும் – நோக்கத்துடன் இந்தியப் படையினர் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கை பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகின்றோம். வன்னியில், நித்திகைக்குளக் காடுகளில் புலிகளின் தலைவர் பதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட பிரதேசத்தில் இந்தியப்படையினர் பாரிய முற்றுகை ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
இந்த முற்றுகை பற்றியும், அந்த முற்றுகையின் போது புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது நிலைப்பாடு பற்றியும், புலிகளின் ஒரு தீவிர ஆதரவாளரான கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் அவர்கள் எழுதியிருந்த கட்டுரை பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

அந்தக் கட்டுரையில்,
புலிகளின் தலைவர் பிரபாகரன் எப்படியாவது பிடிபட்டுவிடுவார் என்ற நம்பிக்கையிலிருந்த இந்தியப் புலனாய்வுப் பிரிவினர், அப்பொழுது சென்னையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் முன்னை நாள் யாழ் மாவட்டத் தளபதி கிட்டுவை பயமுறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை புலிகளின் தலைவர் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கவேண்டும். அத்தோடு ஒரு தொகை ஆயுதங்களை ஊடகவியலாளர்களின் முன்னிலையில் ஒப்புக்காக ஒப்படைக்கவேண்டும். புலிகளின் தலைவர் அவ்வாறு செய்வதற்குச் சம்மதித்தால், இந்தியப் படையினரின் அந்த கொலை முற்றுகை விலக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்கள்.

துண்டிக்கப்பட்ட தொலைத் தொடர்பு
அதிர்ச்சியடைந்த கிட்டு வன்னியில் இருந்த புலிகளின் தலைவரை தொலைத் தொடர்புகள் மூலம் தொடர்புகொண்டார். இந்தியப் படையினரின் எச்சரிக்கையையும், அவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் தேசியத்தலைவரிடம் தெரிவித்தார்.
அனைத்தையும் நிதானமாகக் கேட்டறிந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், தனது முடிவை வான் அலையில் தெரிவித்தார். அவரது குரல் நிதானமாக ஒலித்தது. அது மிகமிக உறுதியாகவும் இருந்தது.


‘சரணடைவதோ, ஆயுதங்களை ஒப்படைப்பதோ அல்லது ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதே – என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. இயக்கத்தில் வீரமரணமடைந்த ஒவ்வொரு வீரனும் தனது உயிரைக் கொடுத்து வளர்த்த போராட்டம் இது. இதை ஒரு நொடியில் விலையேசி விற்க எனக்கு உரிமையில்லை…. என்னால் முடிந்தால் முற்றுகையை உடைத்தெறிந்து வெளியில் வருவேன். …சிலவேளை இந்த முயற்சியில் நான் இறந்தால் உங்களுக்குள் ஒரு தலைவரைத் தெரிவுசெய்து போராட்டத்தை தொடர்ந்து நடத்துங்கள்… ஓவர்…’
கிட்டுவின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் வான் அலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
புலிகளின் தலைவரது முடிவு ‘றோ’வுக்கும், கியூ பிரஞ்சிற்கும் அறிவிக்கப்பட்டது. ‘றோ’ மூலம் ராஜீவ் காந்திக்கும், இந்தியப் படைத்தளபதிகளுக்கும், இலங்கையின் அமைதிகாக்கும் படைகளுக்கும்செய்தி உடனடியாகப் பறந்து செல்கின்றது.

தாக்குதல்:
அன்று விடியற்காலை… நான்கு மணி இருக்கும். குண்டுவீச்சு விமானங்கள் குண்டு மழை பொழிய கடற்படைக் கப்பல்கள் பீரங்கி தாக்குதலை மேற்கொள்ள – இந்தியப் படைச் சிப்பாய்கள் ஆயுதங்களைத் தாங்கியபடி முன்னேறத் தொடங்கினார்கள்.
முன்னேறிய இந்தியப் படையினரின் மனங்களில் வெற்றிப் பெருமிதம். ஈழ மண்ணில் இதுவரை தாங்கள் பட்ட அவமாணங்களுக்கெல்லாம் ஒரு ஒரு முடிவு கிடைக்கப்பபோகின்றது என்கின்ற மகிழ்ச்சி. புலிகளின் தலைவரை எவ்வாறு கைது செய்வது, எப்படியெல்லாம் அவரை அடிப்பது, இம்சிப்பது என்றெல்லாம் நிறையக் கற்பனைகள் அவர்களின் மனங்களில்.
இந்தியத் திரைப்படங்களின் பாணியில் அவர்கள் தங்களை ஹிரோக்களாகக் கற்பனை செய்துகொண்டு காடுகளுக்குள் விரைந்து கொண்டிருந்தார்கள். இந்தியத் திரைப்பட ஹீரோக்கள் வில்லன்களை சர்வசாதாரணமாக துவம்சம் செய்வது போன்று, நித்திகைக்குள முற்றுகையும் மிகவும் இலகுவாக இருக்கும் என்றுதான் அவர்கள் நினத்திருந்தார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமான பதிலடிகளை அவர்கள் எதிர்கொண்டபோதுதான் அவர்கள் தாம் அவசரப்பட்டவிட்டதை உணர்ந்தார்கள்.


முன்னேறிய இந்திய ஜவான்களில் பலர் தமக்கு என்ன நடக்கின்றது என்று அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே துடிதுடித்து விழுந்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியாமல் திகைத்தார்கள். மரங்களின் மேல் இருந்தும், மரங்களின் வேர்களுக்குள் இருந்தும், நிலத்திற்கு கீழிருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் பொழியப்பட்டன. எதிர்பாராத முனைகளில் இருந்து திடீரென்று மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், பாரிய சேதங்களை விழைவித்து விட்டு, அதேவேகத்தில் அந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிடும். என்ன நடந்தது என்று நின்று நிதானித்து உணர்வதற்கு முன்னர் பலர் உயிரிழந்து விழுந்துவிடுவார்கள். எங்கிருந்து தாக்குதல் நடந்தது என்று அறியமுடியாதவர்களாக இந்திய ஜவான்கள் நிலத்தில் படுத்து நிலையெடுத்து நாட்கணக்காக காத்திருப்பார்கள்.


இது ஒரு புறம் இருக்க, புலிகளினால் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட கிளைமோர் கன்னிவெடிகளின் தாக்கமும், ‘பாட்டா’ என்று அழைக்கப்பட்ட பொறி வெடிகளின் தாக்கமும் இந்தியப் படையினருக்கு மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்தத்தக்கதாக இருந்தன. கால் இழந்தவர்களின் எண்ணிக்கை மிகமிக அதிகமாக இருந்தது. ஆவயவங்களை இழந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு உலங்கு வானூர்திகள் வன்னிக்கும் -பலாலிக்கும் இடையில் பறந்தபடியே இருந்தன. புலிகள் மீது குண்டுகளைப் போடுவதற்காகவும், தமது தாக்குதலில் இருந்து தப்பியோடும் போராளிகளைத் தாளப் பறந்து தாக்குவதற்கென்றும் வருவிக்கப்பட்ட ஹெலிக்காப்டர்கள், படுகாயம் அடைந்த இந்தியப் படை வீரர்களை ஏற்றிச் செல்வதற்குத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன.

கூர்க்காப் படையினர்:
இந்தியப் படையின் ஷகூர்க்காப் படைப் படைப்பிரிவினரே’ நித்தியகுள முற்றுகையில் பிரதானமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். கூர்க்காப் படையினர் பார்வைக்கு சீனர்களைப் போன்ற தோற்றத்தை உடையவர்கள். குறைந்த உயரத்தையும், அதேவேளை உறுதியான தேகத்தையும் உடையவர்கள். மிகவும் கொடூரமானவர்கள். தமது இடுப்புப் பட்டியில் எப்பொழதும் இவர்கள் ஒரு வாளை இனைத்திருப்பார்கள். உறையில் இருந்து அந்த வாளை வெளியில் எடுத்தால் இரத்தம் காணாமல் மீண்டும் உறையில் போடமாட்டார்கள்.
இவர்களுக்கு நேர்ந்த கதி பற்றி தனது கட்டுரையில்; கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் அவர்கள் சுவாராசியமாகக்குறிப்பிட்டிருந்தார். அவர் தெரிவித்தவற்றை அவரது வாக்கியங்களில் தருவதே சிறப்பாக இருக்கும். ‘கத்தியை எடுத்தால் இரத்தம் காணாமல் வைக்கமாட்டார்கள் என்ற வைராக்கியம் கொண்ட கூர்க்காப் படையினர், நித்திகைக்குளக் காடுகளில் உள்ள கறையான் புற்றுகளின் அருகே இரத்தம் காணாத கத்திகளுடன் துடிதுடித்துச் செத்துக்கொண்டிருந்தார்கள்.’


‘காடு…. ஆம்…. யுத்தக் களமாகிவிட்டது. நித்திகைக்குளத்துக் காட்டின் மரங்கள்.. செடிகள்.. கொடிகள்… ஒவ்வொன்றுமே இந்திய அமைதிப்படையினருக்கு புலிகளாகத் தெரிந்தன. கன்னிவெடிகள் அங்கே புதைக்கப்பட்டிருக்கவில்லை. விதைக்கப்பட்டிருந்தன. பாரதயுத்தமே பார்த்திருக்கமுடியாத யுத்தத்தின் சத்தம் அங்கே மொத்தமாக வந்து காதுகளை அடைத்தன.’
‘புலிகளின் வீரர்கள் ஒரு புதிய அர்ச்சுணனை இந்த ஈழத்துக் கீதையில் பார்த்த வரலாறு, அந்த நித்திகைக்குளத்தில்தான் நடந்தேறியது. ஆம்.. அந்த முற்றுகையிலிருந்து பிரபாகரனும் வீரர்களும் வெற்றிகரமாகத் தப்பினர். வரலாறு ஒரு பொண் ஏட்டில் ஒரு வீர அத்தியாயத்தின் நினைவை மௌணமாவே குறித்துக்கொண்டது. தொடந்து நடந்த யுத்தங்களும், ஊரடங்குச் சட்டங்களும், இரண்டு வருடங்களுக்கு மேல் நீடித்த இந்திய அமைத்திப்படை நடவடிக்கைளும், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் வரவு நின்று போனதும், வெளி உலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததும், அன்று இந்த நிகழ்வு சரித்திரம் பெருமளவில் வெளிவராமல் போனதற்கான முக்கிய காரணங்களாகும்.’ – என்று, 18.04.2004 அன்று வீரகேசரியில் வெளியான கட்டுரையில் கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நித்திகைக்குள முற்றுகை பற்றி இந்தியப் படைத்தளபதிகள் என்ன கூறியிருந்தார்கள் என்பது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடரும்…

முன்னைய அத்தியாயங்கள்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-01) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-02) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-03) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-04) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-05) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-06) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-07) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-08) – நிராஜ் டேவிட்      

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-09) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-10) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-11) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-12) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-13) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-14) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-15) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-16) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-17) – நிராஜ் டேவிட்

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-18) – நிராஜ் டேவிட்

பகிரல்

கருத்தை பதியுங்கள்